AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 3 அக்டோபர், 2011

மொபைல் கிசான் கிரெடிட் கார்ட் இந்த ஆண்டு 2 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்க முடிவு

சென்னை : விழுப்புரம் மாவட்டத்தில் செல்போன் மூலம் செயல்படும் விவசாய கடன் அட்டை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான வங்கிகளுக்கு செயல்முறை விளக்கக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி.சக்ரபர்த்தி, நபார்டு வங்கி தலைவர் பிரகாஷ் பக்ஷி, இந்தியன் வங்கி தலைவர் டி.எம்.பாசின், பல்லவன் வட்டார வங்கி தலைவர் ஜி.ரங்கராஜன், வங்கி அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர், கே.சி.சக் ரபர்த்தி, பிரகாஷ் பக்ஷி, டி.எம்.பாசின், ஜி.ரங்கராஜன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி: விவசாயிகள் உடனடியாக பயிர் கடன் பெறுவதற்காக, ‘விவசாய கடன் அட்டை’ திட்டம் 1998& 1999ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் விவசாய பயிர் கடன், வேளாண்மை சார்ந்த பல பணிகள், நடைமுறை செலவினங்கள், விபத்து மற்றும் பயிர் காப்பீட்டு தேவைகளுக்காக விரிவுபடுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் கடந்த ஜூன் வரை 10 கோடி விவசாய கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் செல்போன் மூலம் செயல்படும் விவசாய கடன் அட்டை திட்டத்திற்கு நபார்டு வங்கி ரூ.44.66 லட்சம் நிதியுதவி வழங்கியது. இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் பல்லவன் வட்டார வங்கி மூலம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியன் வங்கி, பல்லவன் வட்டார வங்கி மற்றும் தொழில்நுட்ப வசதியை வழங்கும் பேமேட் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் செயல்படுகிறது.

இதன்மூலம், விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் தரமான வங்கி சேவைகளை பெற முடியும். விவசாய கடன் அட்டைதாரர்கள், வங்கி தொடர்பாளர்கள் மூலம் வங்கிகளில் பணம் எடுக்கலாம்; செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து விவசாயத்திற்கு தேவையான உரம், விதை, பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் விவசாய கருவிகளை வாங்க முடியும். 

இத்திட்டத்தில் செல்போன் மூலம் தகவல் தொடர்பு நடைபெறுவதால், ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ரகசிய குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், நேரடியாக பணம் பரிமாற்றம் நடைபெறாது. அவரவர் வங்கி கணக்குகளில் விரைவாக பணம் வரவு&செலவு பரிவர்த்தனை நடக்கும். இதில், தவறு நடக்க வாய்ப்பில்லை. இதனால், விவசாயிகள் கடனுக்காக அலையும் பயண நேரம் மிச்சமாகிறது. வீண் அலைச்சல் தவிர்க்கப்படுகிறது. 

விவசாயிகள் எந்த நேரத்திலும் வங்கி சேவையை பெற முடியும். இந்த ஆண்டுக்குள், விழுப்புரத்தில் 2 ஆயிரம் விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம். படிப்படியாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் நாட்டில் உள்ள 12 கோடி விவசாயிகள் வங்கி சேவை பெற முடியும்.  
இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக