மேலூர், செப். 5-
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருப்பத்தூர் ரோட்டில் கீழவளவில் உள்ளது சக்கரைபீர் மலை. இங்கு மலையை பாதியாக வெட்டி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது.
இந்த இடத்தை தொழில்துறை அமைச்சர் வேலுமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சகாயம், எம்.எல்.ஏ.க்கள் சாமி, முத்துராமலிங்கம், தமிழரசன், கருப்பையா ஆகியோர் ஆய்வு செய்ய வந்தனர்.
டாமின் நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பசீர்அகமது, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் அதுல் ஆனந்த், இணை இயக்குனர் ஜெயக்குமார், டாமின் பொதுமேலாளர் மனோ கரன், கோட்ட மேலாளர் தங்கபாண்டியன், தாசில்தார் மோகனா வரவேற்று கிரானைட் குவாரிகளுக்கு அழைத்து சென்றனர்.
சக்கரைபீர் மலை குவாரியை ஆய்வு செய்த அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய மந்திரி அழகிரியின் மகன் துரை தயாநிதி, தி.மு.க. பிரமுகர் சூடம் மணியின் மகன் நாகராஜ் ஆகியோர் ஒலிம்பஸ் கிரானைட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தனர். அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக பலகோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்துள்ளனர்.
இதுகுறித்து சட்டசபையில் நான் பேசியதற்கு, அதை மறுத்து மத்திய மந்திரி மு.க.அழகிரி அறிக்கை வெளியிட்டார். அந்த கிரானைட் குவாரியை நேரில் ஆய்வு செய்ய முதல்- அமைச்சர் என்னை அனுப்பி வைத்தார். அரசு இடத்தின் அருகே உள்ள பட்டா இடத்தை விலைக்கு வாங்கி, அந்த இடங்களில் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்தது தெரிய வந்துள்ளது.
கணக்கில் காட்டாத பலகோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட்கற்கள் வெட்டி எடுத்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 10 சதவீத அளவிற்கு அனுமதி வாங்கி விட்டு 90 சதவீத அளவுக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் முறைகேடாக பலகோடி ரூபாய் மதிப் பான கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன.
முதல்- அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்பு, ஒரு வருடத்திற்கு முன்பாகவே இந்த கிரானைட் கம்பெனியில் இருந்து மத்திய மந்திரியின் மகன் துரை தயாநிதி விலகி விட்டதாக ஆவணங்களை தயார் செய்துள்ளனர்.
இந்த கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தொடர்பாக யாராக இருந்தாலும் தவறு செய்தவர்கள் அனைவர் மீதும் சட்டப்படி முதல் அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அமைச்சர் வேலுமணி கூறினார்.
பின்னர் ரங்கசாமிபுரத் தில் உள்ள டாமின் கிரானைட் குவாரியையும், மேலூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிரானைட் பாலிஷ் இடத்தையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.







0 கருத்துகள்:
கருத்துரையிடுக