AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 21 செப்டம்பர், 2011

மோடியின் உண்ணாவிரதத்தை ஆதரிப்பதா?


எம்.தமிமுன் அன்சாரி:-

(நரேந்திர மோடி நடத்திய உண்ணாவிரத நாடகத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வரும் ஜெயலலிதா தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்ரேயன் மற்றும் தம்பிதுரையை அனுப்பி வைத்தார். இது குறித்து தமுமுக மற்றும் மமகவின் நிலை குறித்து சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். சமுதாய மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தான் எமது செயல்பாடுகள் அமைகின்றன. இது குறித்து எமது வருத்தத்தை பிபிசி தமிழ் வானொலியில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் 18.09.11 அன்று தஞ்சை மாவட்டம் திருமங்லகுடியில் நடைபெற்ற மமக பொதுக்கூட்டத்தில் பேசிய ஹாரூண் ரஷிது, தைமியா , ஹாஜாகனி ஆகியோரும் தங்கள் கருத்தை தைரியமாக வெளிப்படுத்தினர். நான் பேசும்போதும் ஜெயலலிதாவின் நடவடிக்கையை கண்டித்துள்ளேன். இப்போது இந்தவார மக்கள் உரிமையில் நான் எழுதிய தலையங்கத்தையும் வெளியிடுகிறேன். நாங்கள் கூட்டணிக்காகவோ, பதவிகளுக்காகவோ, சமுதாய நலன்களை விட்டுகொடுப்போர்கள் இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம். அதே நேரம் ஒரு அரசியல் கட்சியை வழிநடத்தும்போது நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் காய்களை நகர்த்தவேண்டுமே தவிர உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவது இயலாத ஒன்று என்பதையும் அரைகுறை விமர்சகர்களுக்கு தெரிவித்துகொள்கிறோம்.)

குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்த அரச பயங்கரவாதி தான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

2002&ல் நடைபெற்ற அந்தப் படுகொலைகளையும், கலவரங்களையும் அறிந்தவர்கள் நரேந்திர மோடியின் பெயரை உச்சரிக்கவே கூச்சப்படுவார்கள்.

ஒரு முதலமைச்சரே, போலிசாரை செயல்படவிடாமல் தடுத்து, கூலிப்படைகளை ஊக்குவித்து சொந்த நாட்டு மக்களை வேட்டையாடினார் என்றால், அவரை அரச பயங்கரவாதி என்றுதான் அழைக்க முடியும்.

இனப்படுகொலைக்காரன் என்பதாலேயே நரேந்திரமோடிக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசுகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்தன.

கும்பல் கும்பலாய், குடும்பம் குடும்பமாய் முஸ்லிம்கள் எரிக்கப்பட்டார்கள். பல நூறு பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தார்கள். பல்லாயிரம் கோடிகள் மதிப்புள்ள முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. சொந்த நாட்டிலேயே முஸ்லிம்கள் அகதிகளானார்கள்.

1950களுக்குப் பின்னால் சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிக மோசமான கலவரங்களை தலைமையேற்று நடத்திய பெருமை மோடியைச் சாரும்.

 இக்கலவரங்களினால் பாதிக்கப்பட்டோரை பின்வருமாறு வகைப்படுத்தலாம் :

தந்தை அல்லது தாயை இழந்தோர்; அல்லது இருவரையும் இழந்தவர்கள்;

கணவனை இழந்த மனைவி; மனைவியை இழந்த கணவன்; அனைத்து பிள்ளைகளையும் பறிகொடுத்த பெற்றோர்.

கலவரங்களில் உறவினர்களை இழந்தது, அதனால் மனநிலை பாதிக்கப்பட்டது.

இன்னும் அகதி முகாம்களில் வாடிக் கொண்டிருப்பவர்கள். கலவரத்திற்கு பயந்து வெளிமாநிலங்களுக்கு ஓடிப்போனவர்கள்.

கலவரங்களில் காணாமல் போன உறவினர்களைத் தேடிக் கொண்டிருப்பவர்கள்; பொய் வழக்குகளில் சிறையில் வாடுபவர்கள்;

கலவரங்களில் செல்வங்களை இழந்து வறுமையில் தவிப்பவர்கள்;

 - என குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் துயரங்களை யாராலும் மூடி மறைக்க முடியாது.

இந்நிலையில் அத்வானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பா.ஜ.வின் தேசியத் தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் தன்னை முன்னிறுத்துவதற்காக உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தின் தகுதி சமீபகாலமாக சீர் குலைக்கப்பட்டு வருகிறது. அது மோடியினால் இப்போது அசிங்கப்படுத்தப்பட்டிருக்கிறது.

அமைதி,  சமூக நல்லிணக்கம், வளர்ச்சி ஆகிய கோரிக்கைகளை அவர் உண்ணாவிரதத்தில் முழக்கமாக முன் வைத்து நடத்தியது. இந்திய ஜனநாயகத்தையே கேலி செய்யக்கூடியதாகும்.
ஒரு விபச்சாரி கற்புக்காகப் போராட்டம் நடத்துவது போலத்தான் மோடியின் போராட்டம் உள்ளது என்றால் அது மிகையாகது.

 மதச்சார்பற்ற சக்திகளும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர்களும் மோடியை ஒரு காலத்திலும் ஏற்கவே மாட்டார்கள்.

அதுவும் முஸ்லிம்கள் அத்வானியையும், மோடியையும் ஒருகாலத்திலும் மன்னிக்க மாட்டார்கள். இவர்கள் தாங்கள் திருந்திவிட்டதைப் போல காட்டிக் கொள்வதை நம்ப மாட்டார்கள். இவர்கள் வட இந்திய முஸ்லிம்களை மிரட்டிய அரசியல் குற்றவாளிகள். இந்தியாவை உலக அரங்கில் இழிவுப்படுத்தியவர்கள்.

காங்கிரஸ் கட்சி மோடிக்குப் போட்டியாக, போட்டி உண்ணாவிரதம் நடத்தியுள்ளது.
ராம்விலாஸ், பாஸ்வான், சரத்யாதவ், சீதாராம் யெச்சூரி, லாலு, முலாயம் போன்ற தேசியத் தலைவர்கள் நரேந்திர மோடியின் உண்ணாவிரத நாடகத்திற்கு எதிராக தங்கள் கருத்தை சரியாக பதிவு செய்துள்ளனர்.

அதுவும் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் இதை எதிர்த்திருப்பது பாராட்டத்தக்கது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, மோடியின் உண்ணாவிரதத்தை ஆதரித்து தன் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்ரேயன் மற்றும் தம்பிதுரையை நேரில் அனுப்பியுள்ளார்.

இது கண்டிக்கத்தக்கதாகும். அரசியலில் கூட்டணிகளும் அரசியல் காய் நகர்த்தல்களும் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட நீதியும், மனிதாபிமானமும், மிகவும் உயர்ந்ததாகும்.

இலங்கையில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷேக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதா, அதே போன்ற படுகொலைகளை குஜராத்தில் நிறைவேற்றிய மோடியின் அரசியலை ஆதரிப்பது முரணாக உள்ளது.

இம்முறை ஜெயலலிதா அவர்கள் முதல்வராக வரவேண்டுமென்று பெருவாரியாக வாக்களித்த முஸ்லிம்களின் உணர்வுகளை அவர் புரிந்துக் கொள்ளவேண்டும். ஜெயலலிதாவின் இந்நடவடிக்கையை பெரும்பான்மை தமிழக மக்களும் புதிராகவே பார்க்கிறார்கள்.

எமது பார்வையில் ராஜபக்ஷேவும், நரேந்திர மோடியும் ஒன்றுதான். படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் உயிர்களும், குஜராத் முஸ்லிம்களின் உயிர்களும் ஒன்றுதான்.

எனவே ராஜபக்ஷேவுக்கு ஒரு நீதி; மோடிக்கு ஒரு நீதி என இரட்டை அளவுகோலை ஏற்க முடியாது.-
மோடியின் உண்ணாவிரத நாடகத்தை எதிர்த்த இந்திய அரசியல் தலைவர்களையும், அறிவுஜீவிகளையும், மனிதஉரிமை ஆர்வலர்களையும், பத்திரிக்கையாளர்களையும், சமூக சேவகர்களையும், நல்லிணக்க விரும்பிகளையும் பாராட்டுகிறோம். இவர்களைப் போன்றவர்கள் இருக்கின்றவரை மோடிகள் ஒரு காலத்திலும் வெற்றிபெற முடியாது என்பதையும் சொல்லி வைக்கிறோம்.  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக