சென்னை, செப்.6-
தமிழ்நாட்டில் 1 கோடியே 83 லட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிசியை ரேஷன் கடையில் வாங்கும் சிலர் அருகில் உள்ள மளிகை கடையில் விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் திடீர் சோனை நடத்தி கடைக்காரர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக ரேஷன் அரிசி கள்ள சந்தையில் விற்பது தடுக்கப்பட்டுள்ளது. கடைக்காரர்களும் ரேஷன் அரிசியை வாங்க பயப்படு கிறார்கள். இதனால் மக்கள் ரேஷன் அரிசியை தங்களது பயன்பாட்டுக்கு முழுமையாக பயன்படுத்துகின்றனர்.
இதேபோல் அடுத்தக்கட்டமாக அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்க உள்ளார்.
முதற்கட்டமாக 25 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படுகிறது. இந்த 3 பொருட்களையும் மக்கள் எளிதாக கொண்டு செல்லும் வகையில் பேக்கிங் செய்து கொடுக்கப்பட உள்ளது. அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள இலவச பொருட்களை எந்தவித முறைகேடுக்கும் இடமின்றி நெறிமுறைகள் வகுத்து மக்களுக்கு வினியோகம் செய்ய உள்ளனர்.
மிக்சி, கிரைண்டர், மின் விசிறியை விலைக்கு விற்பது சட்டப்படி குற்றம் என்று அரசு அறிவித்துள்ளது. ஏழைகள் முன்னேற வழங்கப்படும் இந்த பொருட்களை யாரும் விலைக்கு விற்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது. இதேபோல் கடைக்காரர்களும் தமிழக அரசின் இலவச பொருட்களை மக்களிடம் இருந்து வாங்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசின் நோக்கத்துக்கு மாறாக யார் நடந்து கொண்டாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரி ஒருவர் கூறினார். இலவச பொருட்களின் மீது தமிழக அரசு எம்பளத்துடன் வாசகம் எழுதப்பட்டிருக்கும். இதை கடையில் யார் விற்றாலும் கண்டிப்பாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். எனவே பொதுமக்கள் தங்களின் முழு பயன்பாட்டுக்கு இவற்றை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






0 கருத்துகள்:
கருத்துரையிடுக