புதுடெல்லி : வெளிநாடு செல்வதற்கான விசா தொடர்பான சேவைகளை இனி கிராமப்புற மக்கள் எளிதில் பெறலாம். பக்கத்து போஸ்ட் ஆபிசில் அந்த சேவைகள் இனி கிடைக்கும் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இதற்காக உலகம் முழுவதும் தூதரகங்கள் வாயிலாக நிர்வாக பணிகளை செய்து தரும் முன்னணி அவுட்சோர்சிங் நிறுவனமான விஎப்எஸ் குளோபலுடன் அஞ்சல் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 8ம் தேதி கையெழுத்தானது.
அதன்படி, போஸ்ட் ஆபீஸ் கவுன்ட்டர்களில் இனி விசா பெறுவதற்கான விண்ணப்ப விநியோகம், கட்டணம் வசூல், விசா பெறும் தகவல் மற்றும் மற்ற சேவைகளை பெற முடியும். இதன்மூலம், கிராமப்புற மக்கள் விசா விண்ணப்பிக்க இனி நகரங்கள், பெருநகரங்களை தேடி வர வேண்டிய தேவையிருக்காது. மேலும், தபால் ஆபீசின் ஸ்பீடு போஸ்ட், கூரியர் சேவைகளை விசா, பாஸ்போர்ட் ஆகியவற்றை விஎப்எஸ் குளோபல் அலுவலக கிளைகள், தூதரங்கள் இடையே விரைந்து அனுப்ப விஎப்எஸ் குளோபல் பயன்படுத்திக் கொள்வது பற்றியும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இதன்மூலம், பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை பெற கிராமங்கள், சிறுநகரங்களில் உள்ள மக்கள் இதுவரை நீண்ட தூரம் பயணம் செய்த நிலை மாறும்.
மேலும், பாஸ்போர்ட், விசா பெறுவதில் சரியான தகவல்கள் கிடைக்காமல், போலி முகவர்களிடம் மக்களில் பலர் ஏமாறுவதுண்டு. கிராமங்கள்தோறும் உள்ள தபால் ஆபீஸ்களில் இந்த தகவல்கள் கிடைக்கும் என்பதால் மோசடி பேர்வழிகளிடம் மக்கள் ஏமாந்து பணத்தை இழப்பது தடுக்கப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக