புதுடெல்லி, செப். 5-
ரெயில் கட்டணத்தை 10 சதவிகிதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரெயில்வே துறை சார்பில் இந்தியா முழுவதும் 10 ஆயிரத்து 500 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் மற்ற சேவைகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வந்தபோதிலும், கடந்த 8 ஆண்டுகளாக ரெயில் கட்டணம் மட்டும் உயர்த்தப்பட வில்லை. கடைசியாக 2002-03-ம் நிதியாண்டில் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இடையில் ரெயில்வே பட்ஜெட்டுகளில் சரக்கு கட்டணங்கள் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகள் கட்டணம் மாற்றப்பட வில்லை. எரிபொருள் விலை உயர்வு, முதலீடுகள் அதிகரிப்பு, விரிவடைந்து வரும் ரெயில்வே திட்டங்கள் மற்றும் சேவைகள் போன்ற காரணங்களால் ரெயில்வே துறைக்கு, நஷ்டம் ஏற்படா விட்டாலும், லாபம் குறைந்து வருகிறது. ஆண்டுதோறும் அதிகரித்து வரும் ரெயில்வே திட்டச் செலவுகளை சமாளிக்க வேண்டுமானால், லாபம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று ரெயில் துறை கருதுகிறது.
எரிபொருள் ரெயில்களுக்கு எரிபொருளாக மின்சாரம் மற்றும் டீசல் பயன்படுத்தப்படுகிறது. ரெயில்வே துறையின் ஆண்டு மொத்த செலவில் எரிபொருளுக்கு மட்டும் 18 முதல் 20 சதவிகிதம் செல்கிறது. அதாவது, எரிபொருளுக் கென 2011-12 நிதியாண்டில் ரூ.73 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பணவீக்கம் காரணமாக நிதியாண்டின் முடிவில் இது ரூ.78 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு, ரெயில்வே துறை பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதுபற்றி, ரெயில்வே வாரியத் தலைவர் வினய்மிட்டல் கூறியதாக செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-
ரெயில்களில் அனைத்து வகுப்புகளுக்குமான பயணிகள் கட்டணத்தை உயர்த்த தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். 8 சதவிகிதம் முதல் 12 சதவிகிதம் வரை கட்டண உயர்வு இருக்கும். இந்த கட்டண உயர்வை நிதியாண்டின் தொடக்கத்திலேயே செய்திருக்க வேண்டும். ஆனால், இப்போதே 5 மாதங்கள் கட்டண உயர்வு இன்றி கழிந்து விட்டன. இனிமேலும் தாமதிப்பது ரெயில்வே நிதி ஆதாரத்தின் நலனை பாதித்து விடும்.
ரெயில்வே துறையின் சேவைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட உள்ளன. ரெயில்களில் நவீன கழிப்பறை, ரெயில் நிலையங்களில் தரமான உணவு ஸ்டால்கள் போன்றவை ஏற்படுத்தப்பட இருக்கின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. எனவே, சிறிய அளவில் மேற்கொள்ள உள்ள கட்டண உயர்வை பயணிகள் சகித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திட்டக்கமிஷனும் ரெயில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ரெயில் கட்டண உயர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.







0 கருத்துகள்:
கருத்துரையிடுக