AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 3 ஜூன், 2013

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடலூர் மாவட்டத்தில் தேர்ச்சி குறைந்தது வருத்தமளிக்கிறது


கடலூர், : கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 237 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்கள். இவர்களில் 14 ஆயிரத்து 240 மாணவர்கள், 16 ஆயிரத்து 24 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 264 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 75.21 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 81.10 ஆக இருந்தது. கடந்த ஆண்டை விட 6 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.  
தமிழ் பாடத்தை தவிர்த்து இதர பாடங்களில் 2 ஆயிரத்து 785 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் ஒருவரும், கணிதத்தில் 688 பேர், அறிவியலில் 1370 பேர், சமூக அறிவியலில் 726 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடிப்படையிலான மாவட்ட வாரியான தர வரிசைப் பட்டியலில் கடலூர் மாவட்டம் மாநில அளவில் கடைசி இடத்தை பெற்றுள்ளது.  
இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் கூறுகையில், தேர்ச்சி வரிசையில் கடைசி இடம் கிடைத்திருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பின் தங்கிய மாவட்டமாக உள்ள கடலூர் மாவட்டம் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியமாகும். அதற்கு ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் குறைவான தேர்ச்சி அடைந்த பள்ளிகளில் ஆய்வு நடத்தி குறைகள் களையப்படும். இந்த ஆண்டு துவக்கத்திலேயே தேர்ச்சி சதவீத இலக்கை நிர்ணயித்து அதை அடைய செயல்படுவோம். ஒத்துழைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக