AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 11 ஏப்ரல், 2013

கடலூர் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கலாம் தீவிர விசாரணை நடத்தி வழங்கப்படும்


கடலூர்,ஏப்ரல்-11
கடலூர் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் எனவும், தீவிர விசாரணைக்கு பின்னரே வழங்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அடையாள சின்னம்
ஒருவர் இந்திய நாட்டின் குடிமகன் என்பதற்கான பல்வேறு அடையாளங்களில் ஒன்றுதான் ரேஷன் கார்டு. இது தவிர அரசு நலத்திட்ட உதவிகள் பெறவும், பல்வேறு அத்தியாவசிய பயன்பாட்டுக்கும் ரேஷன் கார்டு முக்கிய காரணியாக இருக்கிறது. அதனால்தான் திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து விடுகிறார்கள்.
ஆனால் விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தாலும், ஒரு ஆண்டு ஆகியும் ரேஷன் கார்டு கிடைக்காமல் தவிப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் தினமும் வீடுகளில் இருந்து தாலுக்கா அலுவலகங்களுக்கு பொடி நடையாக நடந்து அலைக்கழிப்பதுதான் மிச்சம். ஊழியர்களும் நாளை வரும், அடுத்த மாதம் வந்துவிடும் என்று அவர்களை சமாதானம் செய்து அனுப்பி விடுகிறார்கள். இதுதான் தற்போது நடந்து வருகிறது.

உள்தாள் இணைப்பு
இந்த நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளை மேலும் ஓராண்டுக்கு(2013) அரசு கால நீட்டிப்பு செய்து, இதற்காக உள்தாள் இணைப்பு வழங்கும் பணியை ஜனவரி மாதம் தொடங்கி பிப்ரவரி மாத இறுதியில் முடிக்க உத்தரவிட்டது. இந்த பணியை கவனிக்க வேண்டி இருந்ததால் புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பம் பெறுவது, பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே உள்தாள் இணைப்பு வழங்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதால் புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பங்களை பெற அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் புதிய ரேஷன் கார்டு கேட்டு பொதுமக்கள் அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் உள்ள குடிமைப்பொருள் தாசில்தாரிடம் விண்ணப்பிக்கலாம்.
அரசு எச்சரிக்கை
இது குறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது கடலூர் மாவட்டம் முழுவதிலும் மொத்தம் 6 லட்சத்து 75 ஆயிரத்து 950 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் அரிசி கார்டுகள் மட்டும் 6 லட்சத்து 57 ஆயிரம் ஆகும். இதில் போலி ரேஷன் கார்டுகளும் உள்ளன. அவற்றை வீடு தோறும் சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தற்போது புதிய ரேஷன் கார்டு கேட்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்துக்கு வந்து விடக்கூடாது, அப்படி வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விசாரணைக்கு பிறகு
எனவே தீவிர விசாரணைக்கு பின்னரே புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். அதன்படி விண்ணப்பித்த நபரின் வீட்டுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி, இவர் தனி வீட்டில் குடும்பதுடன் வசிப்பது உண்மைதான் என்று அக்கம்பக்கத்தினரிடம் சாட்சி கையெழுத்து வாங்கப்படும்.
ஒரு வீட்டில் 4 பேர், 5 பேர் வசித்தால் அத்தனை பேருக்கும் ரேஷன் கார்டு வழங்க முடியாது. அவர்கள் தனி வீடுகளில் வசித்தால் மட்டுமே ரேஷன் கார்டு வழங்க முடியும். விண்ணப்பிக்கும்போது வீட்டு வரி ரசீது, பழைய ரேஷன் கார்டுகளில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டதற்கான சான்று, புதுமண தம்பதிகளாக இருந்தால் திருமண அழைப்பிதழ் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக