AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 18 டிசம்பர், 2012

அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பேரணி!


அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பேரணி!நாளை மகாராஷ்டிர மாநில முதல்வரிடம் நேரில் மனு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய துணைச்செயலாளர் எச்.அப்துல் பாசித் Ex.MLA.அளிக்கிறார்.
மகாராஸ்ட்ரா மாநில மைனாரிடி கமிஷன் சமீபத்தில் டாடா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் சோஸியல் சயன்ஸ் (டி.ஐ.எஸ்.எஸ்.) என்னும் நிறுவனத்தாரிடம், மகாராஸ்ட்ரா மாநில சிறைச்சாலைகளில் அடைபட்டுள்ள கைதிகள், குறிப்பாக முஸ்லிம் கைதிகள் பற்றிய விவரங்களைச் சேகரித்துத் தரும் பொறுப்பை ஒப்படைத்தது. அந்த நிறுவனத்தைச் சார்ந்த கிரிமினாலஜி எனப்படும் குற்றச் சட்டயியல் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் விஜய் ராகவன், ரோஸ்னி நாயர் இருவரும் அந்தப் பொறுப்பை ஏற்று, ஓராண்டு காலம் ஆய்வு நடத்தினர்.
மகாராஸ்ட்ராவில் உள்ள 15 சிறைச்சாலைகளில் 339 ஆண், பெண் முஸ்லிம் கைதிகளிடம் பேட்டி கண்டு, தங்களின் ஆய்வுகளை, “”"”சோஸியோ எகனாமிக் ஃபுரோபைல் அண்டு ரிஹாபிலிடேஷன் நீட்ஸ் ஆஃப் முஸ்லிம் கம்யூனிடி இன் பிரிசன்ஸ் இன் மகாராஸ்ட்ரா’’ என்னும் தலைப்பிட்டு அறிக்கையாக அவ்விரு பேராசிரியர்கள் தந்துள்ளனர். அதனை மகாராஸ்ட்ரா மாநில மைனாரிடீஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் படிப்போர் குருதியை உறைய வைக்கக்கூடிய செய்திகள் தரப்பட்டுள்ளன. 141 பக்கம் கொண்டுள்ள அந்த அறிக்கை தரும் செய்திகளைப் படித்து, இதயம் துடிதுடித்து, ஆவேசப்படுவதைத் தவிர்த்துவிட்டு, இத்தகைய கோரப் பிடியில் இருந்து சமுதாய இளைஞர்களைக் காப்பாற்றுவதற்கு எது வழி? என்று ஆய்ந்தறிந்து செயல்படுவதற்கு முன்வருதல் இன்றைய அவசரமும் அவசியமும் ஆகிறது!
மகாராஸ்ட்ரா மாநிலத்தில் உள்ள 15 சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள். இவர்களில் ஆண்கள் 64.5 சதவீதம்; பெண்கள் 5.2 சதவீதம் பேராவர்.
இவர்களில் 47.4 சதவீதம் பேர் மீது மட்டுமே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 3.8 சதவீதம் பேர் மீதுள்ள வழக்குகள் மட்டுமே தீர்ப்பு கூறப்படும் அளவுக்கு வந்திருக்கிறது.
மகாராஸ்ட்ரா சிறைச்சாலைகளில் உள்ள மொத்த கைதிகளில் முஸ்லிம் கைதிகள் மட்டுமே 65.5 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் யாவரும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாவர். இவர்களில் 58.2 சதவீதம் பேர் ஆரம்ப பள்ளிப் படிப்பு அளவு படித்துள்ளனர்; மீதிள்ள 31.4 சதவீதம் பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
பெண் கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் பங்களா தேசத்தைச் சேர்ந்தவர்கள்; இந்தப் பெண் கைதிகளுக்கு சிறைச்சாலையில் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. அவர்கள் நடத்தப்படும் விதம் கொடுமையிலும் கொடுமையாகும் என்கிறது அந்த அறிக்கை. சிறையில் உள்ள 96 சதவீதமான முஸ்லிம் கைதிகள் எந்தவொரு தீவிரவாதக் கும்பலுடனோ, கிரிமினல் கும்பலுடனோ தொடர்பு எதுவும் இல்லை.
இவர்களில் 25 சதவீதம் பேருக்கு வாதிட ஒரு வக்கீலும் இல்லை. அரசுசாரா நிறுவனங்கள் மூலம் உதவி பெற முடியும் என்பது 61 சதவீதமானவர்களுக்குத் தெரியவில்லை. 23 சதவீதம் பேர் இப்படியொரு நிறுவனம் இருப்பதுகூட அறியவில்லை.
50 சதவீதம் பேருக்கு 2013-ல் தண்டனை காலம் முடிகிறது; அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும்படியான எந்தவொரு திட்டமும் மகாராஸ்ட்ரா மைனாரிடி கமிஷனிடம் இதுவரை இல்லை.
38 சதவீதம் பேர் கைதானதைத் தங்கள் குடும்பங்களுக்குத் தெரிவிக்க காவல்துறையினர் உதவவில்லை.
பல பேர், எந்தக் குற்றமும் செய்யாமல் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏதாவது ஒரு குற்றத்தைப் பார்த்ததாக சாட்சி சொல்ல முன்வராததாலும், ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் குற்றம் செய்துவிட்டு தப்பி ஓடிட்விடால், அவருக்குப் பதிலாக அந்தக் குடும்பத்தில் உள்ள ஒருவரைக் கைது செய்வதன் மூலம் காவல்துறையினர் அநீதம் இழைத்துள்ளனர்.

தடா போன்ற வன்கொடுமைச் சட்டங்களின் கீழ் முஸ்லிம்கள் மீது காவல்துறை வழக்கு ஜோடிப்பது வாடிக்கையாகிவிட்டது. பெரும்பாலான வழக்குகள், குடும்பச் சண்டைகள், பணத் தகராறுகள், சொத்துப் பிரச்சினைகள், காதல் விவகாரங்கள், பழிவாங்கும் நடவடிக்கைகள் போன்றவையே முஸ்லிம்கள் மீது வழக்குத் தொடுப்பதற்குரிய காரணங்களாக உள்ளன.
சாட்சியம் எதுவும் இல்லாமல் கைது செய்து கடுமையான சட்டப் பிரிவின் கீழ் பொய் வழக்கு போடுவது காவல்துறையின் பாரபட்சமான நடவடிக்கையாகும்.
இந்த ஆய்வறிக்கை தந்த பேராசிரியர் விஜய் ராகவன் கூறியதாவது:
இந்த ஆய்வு பெரிய சவாலாகிவிட்டது. சிறைச்சாலைகளில் கைதிகளைக் காண்பதற்கு அனுமதி பெறுவதற்கே பல நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. போலீசார் மீது குறை சொன்ன ஒரே காரணத்துக்காகப் பலர் கைதிகளாக வாடிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் மீது பொய் வழக்குகளே போடப்பட்டுள்ளன என்பதை அவர்களின் வாக்குமூலங்கள் மூலம் அறிந்தோம் என்றார். மகாராஸ்ட்ரா மாநிலத்தில் சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரியும், அப்பிராணிகளை விடுவிக்க வேண்டியும் விதர்பா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பிரமாண்டப் பேரணி 19-12-2012-ல் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விதர்பா பிரதேச பொதுச்செயலாளர் சையது அப்ஸர் அலி செய்துள்ளார். பேரணி சார்பில் மகாராஸ்ட்ரா முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவானை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழு சந்தித்து மகஜர் கொடுக்கிறார்கள். இந்தப் பேரணியில் பங்கேற்று, முதலமைச்சருக்கு மகஜர் கொடுப்பதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய துணைச் செயலாளர் எச்.அப்துல் பாஸித் அழைக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக