AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 22 நவம்பர், 2012

இஸ்ரேலின் கூட்டுப் படுகொலை தொடருகிறது! – மரணம் 125!

காஸ்ஸா:சர்வதேச நாடுகள் சமாதான முயற்சிகளை மேற்கொண்டுவரும் வேளையில் தொடர்ச்சியாக 7-வது நாளாக இஸ்ரேல், காஸ்ஸாவின் மீது கொடூர தாக்குதலை நேற்று தொடர்ந்தது. நேற்று 20 பேர் கொல்லப்பட்டனர். இத்துடன் காஸ்ஸாவில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.
கான் யூனுஸ், பைத்துலாஹியா, காஸ்ஸா சிட்டி, ரஃபா, தைருல் பலாஹ், ஹஜருல் தீக் ஆகிய இடங்களில் இஸ்ரேலின் ஏவுகணைகள் தாக்கின. காஸ்ஸா சிட்டியில் தேசிய இஸ்லாமிய வங்கியும், அகதிகள் முகாமும் இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் தகர்ந்து போயின. மத்திய காஸ்ஸாவில் அங்கு வாழும் மக்கள் வெளியேற வேண்டும் என்று கூறி இஸ்ரேல் போர் விமானம் நோட்டீஸை வீசியது.
68 ஆயிரம் ராணுவ வீரர்களை ஃபலஸ்தீன் எல்லையில் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. அதனிடையே எகிப்து தலைமையில், இஸ்ரேல் பிரதிநிதிகளுடன் கெய்ரோவில் நடத்திய பேச்சுவார்த்தையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஹமாஸும், இஸ்லாமிக் ஜிஹாதும் தெரிவித்துள்ளன. இவ்வறிவிப்பு உடனடியாக வெளியாகும் என்று அவர்கள் அறிவித்தனர்.
அதேவேளையில் ஹமாஸ் போராளிகள் பதிலடியை தீவிரப்படுத்தியுள்ளனர். இஸ்ரேல் ஆக்கிரமித்த ஜெருசலத்தில் நேற்று ஏராளமான
ராக்கெட்டுக்கள் தாக்கின. எல்லை கிராமங்களில் உள்ள கல்வி நிலையங்களை இஸ்ரேல் மூடியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். தரைப்போரை துவக்கினால் நிலைமை மோசமாகும் என்று அவர், கெய்ரோவில் அரபு லீக் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் மற்றும் ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோருடன் அவர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துவார். அமைதிக்கான தங்களின் முயற்சி வெற்றிப் பெறும் என்றும், சில மணிநேரங்களில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும் என்றும் எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி கூறியுள்ளார்.
காஸ்ஸா மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அரபுலீக் தலைவர் நபீல் அல் அரபியுடன் 10 அரபு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் காஸ்ஸா சென்றுள்ளனர். துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தாவூத் ஓக்லுவும் இதில் அடங்குவார். இரு தரப்பினரும் தாக்குதலை நிறுத்துமாறு ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ப்ரஸ்ஸல்ஸில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேல்-ஃபலஸ்தீன் – எகிப்து தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள ஹிலாரி கிளிண்டன் ஜெருசலம் திரும்பியுள்ளார்.
எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோருடன் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தொலைபேசியில் பேசினார். அவசர கட்டத்தில் அமெரிக்கர்களுக்கு உதவ 3 போர்க் கப்பல்களை அமெரிக்கா, காஸ்ஸாவுக்கு அனுப்பியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா உற்சாகம் அளிப்பதாக ஐ.நாவில் ரஷ்யாவின் பிரதிநிதி விட்டலி சர்க்கின் குற்றம் சாட்டினார். ஹமாஸிற்கு அனைத்து ஆதரவையும் அளிப்போம் என்று ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக