AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 22 அக்டோபர், 2012

ஹஜ்ஜின் சிறப்புகள்

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல்குர்ஆன் 2:196
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்)பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்.ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப்போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாகஇருக்கின்றான். அல்குர்ஆன் 3:96-97 


ஹஜ் கட்டாயக் கடமையாக இருப்பதுடன் அதை நிறை வேற்றுவதற்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன. இது பற்றி பல ஹதீஸ்களை நாம் காண முடிகின்றது.

அமல்களில் சிறந்தது எது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவது” என்று விடையளித்தார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது” என்றார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

“ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நான் பலவீனனாக இருக்கிறேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “யுத்தமில்லாத ஜிஹாதுக்கு செல்வீராக! அதுதான் ஹஜ்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் பின் அலி (ரலி) நூல் : தப்ரானி
அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாத் செய்வதையே மிகச் சிறந்த செயலாக நீங்கள் கருதுகிறீர்கள். எனவே (பெண்களாகிய) நாங்களும் ஜிஹாத் செய்யலாமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “பெண்களாகிய உங்களுக்கு சிறந்த ஜிஹாத் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்;” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்; : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்

“உடலுறவு கொள்ளாமல், தீயகாரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்

என் உள்ளத்தில் அல்லாஹ் இஸ்லாத்தை ஏற்கும் எண்ணத்தை ஏற்படுத்தியவுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்று “உங்கள் கையை விரியுங்கள்! உங்களிடம் பைஅத் (உறுதி மொழி) எடுக்க விரும்புகிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் கையை நீட்டியதும் என் கையை நான் மடக்கி கொண்டேன். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “அம்ரே! உனக்கு என்ன நேர்ந்துவிட்டது” என்று கேட்டார்கள். “ஒரு நிபந்தனையின் அடிப்படையிலேயே நான் பைஅத் செய்வேன்” என்று நான் கூறினேன். “என்ன நிபந்தனை?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “(என் பாவங்கள்) மன்னிக்கப்பட வேண்டும் (என்பதே நிபந்தனை)” என்று நான் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “இஸ்லாத்தை ஏற்பது அதற்கு முன்னுள்ள பாவங்களைத் தகர்த்து விடுகிறது; ஹிஜ்ரத் செய்வது அதற்கு முன்னுள்ள பாவங்களைத் தகர்த்து விடுகிறது; ஹஜ் அதற்கு முன்னுள்ள பாவங்களைத் தகர்த்து விடுகிறது என்பதை நீர் அறிந்திடவில்லையா?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : அம்ருபின் ஆஸ் (ரலி) நூல் : முஸ்லிம்

ஹஜ் செய்பவர், உம்ராச் செய்பவர், போரில் ஈடுபட்டவர் ஆகிய மூவர் அல்லாஹ்வின் விருந்தினராவர் என்பது நபிமொழி 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : இப்னுஹிப்பான், இப்னுமாஜா

ஹஜ் செய்பவர்களும் உம்ராச் செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினராவர். அவர்கள் அவனிடம் கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான் என்பதும் நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : நஸயீ, இப்னுமாஜா

இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்கள் ஹஜ் செய்வதன் சிறப்பையும் அதனால் கிடைக்கும் பயன்களையும் அறிவிக்கின்றன.

அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுவதும், கேட்டவையாவும் கிடைப்பதும், மறுமையில் சுவனத்தைப் பரிசாக அடைவதும் உண்மை முஸ்லிம்களுக்குச் சாதாரண விஷயம் இல்லை.

ஹஜ்ஜின் அவசியம்
மக்காவிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள புனிதத் தலங்களுக்குச் சென்று சில கிரியைகளைச் செய்வது ஹஜ் எனப்படுகின்றது. வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு தடவை ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும்.

அல்லாஹ்வுக்காக அந்த ஆலயம் சென்று ஹஜ் செய்வது மனிதர்களில் அதன் பால் (சென்றுவர) சக்தி பெற்றவர் மீது கடமையாகும். அல்குர்ஆன் 3 : 97 

மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின்போது குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! ஓவ்வொரு ஆண்டுமா?” என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று தடவை கேட்கும் வரை நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு “நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே கடமையாகிவிடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ

பெண்கள் மீதும் ஹஜ் கடமையாகும் 
“அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் மீது ஜிஹாத் கடமையா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “போரிடுதல் இல்லாத ஜிஹாத் அவர்கள் மீது கடமையாக உள்ளது; அதுதான் ஹஜ்ஜும் உம்ராவும்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா. 

“வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் மீது ஹஜ் கடமையாகும்” என்ற வசனத்தின் அடிப்படையிலும், இந்த ஹதீஸினடிப்படையிலும் பெண்கள் மீதும் ஹஜ் கடமையாகும் என்பதை அறியலாம். உம்ராச் செய்வது கடமையா என்பதைப் பின்னர் நாம் அறிந்து கொள்வோம்.

“திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக்கூடாது” என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

இரண்டு நாட்கள் பயணத்தொலைவு கொண்ட இடத்துக்கு கணவன் அல்லது திருமணம் செய்ய தடுக்கப்பட்ட ஆண் உறவினர் துணையுடன் தவிர பெண்கள் பயணம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
அறிவிப்பவர் : அயுஸயீத் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக்கூடிய பெண், மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்டு தந்தையுடனோ, கணவருடனோ, மகனுடனோ, சகோதரனுடனோ அல்லது திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடனோ தவிர பயணம் மேற்கொள்வது ஹலால் இல்லை” என்பதும் நபிமொழி.
அறிவிப்பவர் : அபுஸயீத் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்

“திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர பெண்கள் பயணம் மேற்கொள்ளக்கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டபோது ஒரு மனிதர் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டு விட்டார். நான் இன்னின்ன போர்களில் ஈடுபடுத்தப்பட்டுவிட்டேன்” என்று கூறினார். அதற்;கு நபி (ஸல்) அவர்கள் “நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராக” என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

பெண்கள் தக்க துணையின்றி ஹஜ் பயணம் உட்பட மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களைக் கொண்ட பயணம் மேற்கொள்ளக்; கூடாது என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.

சிறுவர்கள் ஹஜ் செய்யலாமா?
சிறுகுழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் அதை காரணம் காட்டி ஹஜ் பயணத்தைத் தள்ளிப் போட வேண்டியதில்லை. சிறுகுழந்தைகளையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லலாம்.

நபி (ஸல்) அவர்கள் “ரவ்ஹா” என்ற இடத்தில் ஒரு பயணக்கூட்டத்தைச் சந்தித்தார்கள். “இந்த கூட்டத்தினர் யார்?” என்று (அவர்களைப் பற்றி) விசாரித்தனர். “முஸ்லிம்கள்!” என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் “நீங்கள் யார்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டனர். “அல்லாஹ்வின் தூதர்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி சிறு பையனை (குழந்தையை) தூக்கிக் காண்பித்து “இவனுக்கு ஹஜ் உண்டா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்! கூலி உனக்கு உண்டு” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ.

“நான் ஏழு வயதுடையவனாக இருக்கும்போது நபி (ஸல்) அவர்களுடன் என் தந்தை ஹஜ் செய்தார்கள்”.
அறிவிப்பவர் : ஸாயிப் பின் யஸீத் (ரலி) நூல்கள் : புகாரி, அஹ்மத், திர்மிதீ 

சிறுவர்கள் மீது ஹஜ் கடமையில்லாவிட்டாலும் அவர்களையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.

சிறுவயதில் ஹஜ் செய்தவர்கள் பருவ வயதை அடைந்து ஹஜ் செய்வதற்கான வசதி வாய்ப்பைப் பெற்றால், அப்போது அவர் ஹஜ் செய்வது கடமையாகும். சிறுவயதில் “இவனுக்கும் ஹஜ் உண்டா?” என்ற கேள்விக்கு, “ஆம்! கூலி உனக்கு உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்துள்ளனர். சிறுவயதில் செய்த ஹஜ்ஜின் கூலி அவரை அழைத்துச் சென்ற பெற்றோருக்குச் சேர்வதால் சிறுவரின் கணக்கில் அது சேர்க்கப்படவில்லை என்று அறியலாம்.

ஹஜ்ஜுக்குரிய கூலியை அவர் அடைய வேண்டுமென்றால் பருவ வயதை அடைந்த பிறகு அவர் வசதி வாய்ப்பைப் பெற்றால் மீண்டும் ஒரு முறை ஹஜ் செய்தாக வேண்டும்.

முதியவர்கள், நோயாளிகள் மீது கடமையா?
“யார் கஃபா ஆலயம் சென்று வர சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் மீதே ஹஜ் கடமை” என்று ஆரம்பமாக நாம் குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. சென்று வரும் சக்தி என்பது வெறும் பொருளாதார வசதி மட்டுமல்ல. பிரயாணம் செய்வதற்கான உடல் நிலையையும் உள்ளடக்கியதாகும்.

பிரயாணமே செய்யமுடியாத முதியவர்கள், நோயாளிகள் போன்றோர் எவ்வளவு வசதிகளைப் பெற்றிருந்தாலும், அவர்கள் மீது ஹஜ் கடமையாகாது என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒருவர் இளமையுடனும் திடகாத்திரத்துடனும் இருக்கும் போது ஏழையாக இருந்து, தள்ளாத வயதில் பொருள் வசதியைப் பெற்றால் அவர் மீதும் ஹஜ் கடமையாவதில்லை. இளமையுடனும், திடகாத்திரத்துடனும் இருக்கும்போது பொருள் வசதியைப் பெற்றவர், வேண்டுமென்றே தாமதப்படுத்தி முதிய வயதை அடைந்தால் அவர் மீதுள்ள ஹஜ் கடமை நீங்கிவிடாது. அல்லாஹ் மன்னிக்கவில்லையானால் அவர் குற்றவாளியாக இறைவனைச் சந்திக்க நேரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதுபோல் ஒருவருக்கு இந்த ஆண்டு ஹஜ் கடமையாவதாக வைத்துக் கொள்வோம். இந்த ஆண்டே ஹஜ் செய்யாமல் மரணிப்பதற்குள் அதைச் செய்துவிட அவருக்கு அவகாசம் உள்ளது என்றாலும் தாமதப்படுத்தக் கூடாது.

ஏனெனில், அடுத்த ஆண்டு வருவதற்குள் அவருக்கு மரணம் ஏற்படலாம். கடமையான பின்பும் அதை நிறைவேற்றத் தவறிய குற்றம் அவரைச் சேரும். அல்லது பயணம் மேற்கொள்ள இயலாத அளவுக்குப் பலவீனப்படலாம். நல்ல பலத்துடன் இருக்கும் போதே அவர் மீது ஹஜ் கடமையாகிவிட்டால் இப்போதைய பலவீனம் அவருக்கு எந்தச் சலுகையையும் தராது.

முதிய வயதில் தான் ஹஜ் செய்யவேண்டும் என்ற தவறான நம்பிக்கை பலரிடம் நிலவுகின்றது. பல லட்சம் மக்கள் கூடும் அந்தச் சமயத்தில் இளமையானவர்கள் தான் எல்லாக் காரியங்களையும் சரியாகச் செய்யமுடியும். முதிய வயதில் செல்பவர்களால் பல காரியங்களைச் சரியாகச் செய்ய முடிவதில்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஹஜ் கடமையானவுடனேயே அதை நிறைவேற்றும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஹஜ் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டால்?
இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டியுள்ள நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழலாம். அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள அந்த நாடுகளால் தடுக்கப்படலாம். அல்லது வேறு சக்திகளால் தடுக்கப்படலாம். இத்தகையவர்கள் மீதும் ஹஜ் கடமையாகாது. சென்றுவர சக்தியுள்ளவர்கள் மீது ஹஜ் கடமையாகும் என்று இறைவன் கூறுவதிலிருந்து இதனை நாம் அறியலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக