ஆலந்தூர், அக்.3-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 423 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது.
ஹஜ் பயணம்
முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள்.
இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் 3,670 பேரும், புதுச்சேரியில் இருந்து 72 பேரும், அந்தமான்-நிக்கோபர் தீவுகளில் இருந்து 61 பேரும் ஆக மொத்தம் 3,803 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
முதல் விமானம் புறப்பட்டது
இந்த புனித ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் நேற்று காலை 10.20 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 218 ஆண்களும், 201 பெண்களும் 4 குழந்தைகளும் என 423 பேர் சென்றனர்.
அவர்களை தமிழக அமைச்சர் முகமது ஜான், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவரும், தமிழக ஹஜ் கமிட்டி தலைவருமான பிரசிடெண்ட் அபுபக்கர், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், தமிழக அரசு செயலாளர்கள் அலாவுதீன், தங்க.கலியபெருமாள் ஆகியோர் வாழ்த்தி அனுப்பி வைத்தனர். ஹஜ் பயணத்திற்காக வருகிற 10-ந் தேதி வரை 9 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது.
முதல்வர் உத்தரவு
பின்னர் அமைச்சர் முகமது ஜான் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் கூறும்போது, `ஹஜ் பயணிகள் எந்த வித சிரமுமின்றி புனித பயணத்தை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து புனித பயணம் செல்பவர்கள் ஜித்தா நகருக்கு சென்று, அங்கிருந்து புனித நகருக்கு வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என நம்புகிறோம்’ என்றார்.
புனித ஹஜ் பயணத்திற்காக விமான நிலையத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக