AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 23 அக்டோபர், 2012

தொடர் மழை எதிரொலி கடலூர் மாவட்டத்தில் உள்ள 3,505 ஏரி, குளங்கள் நிரம்பியது

கடலூர். :     தொடர் மழை எதிரொலியால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரத்து 505 ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், ஆயிரக்கணக்கான குடிசைகளும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால் மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
  கடலூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை வெளுத்து கட்டி வருகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் 3 ஆயிரத்து 505 ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. கெடிலம், பெண்ணையாறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான செடிகொடிகள் அடித்து செல்லப்பட்டன.


கடலூர், சிதம்பரம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில், வடலூர், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளை சேர்ந்த 500 குடியிருப்புகளையும் ஆயிரக்கணக்கான குடிசைகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இம்மழைக்கு கடலூர் மாவட்டத்தில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து மழையில் நனைந்தபடி இருந்த பசுமாடு ஒன்று நேற்று காலை சுருண்டு விழுந்து உயிரிழந்தது. 
  சிதம்பரம், குமாராட்சி, காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 4 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெல் வயல்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். 
தொடர்மழை நீடித்தால் 4 ஆயிரம் ஏக்கர் விதைப்பும் பாழாகிவிடும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் வழக்கம் போல 4 வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மழையால் மீன் பிடித்தொழில், சிறு வியாபாரத்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 
  கடலூர் மாவட்டத்தில் பிரதான ஏரிகளான வீராணம், பெருமாள், வெலிங்டன், வாலாஜா உள்ளிட்ட ஏரி, குளங்கள் நிரம்பி வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவற்றின் நீர் மட்ட உயர்வுகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மழை தொடர்ந்தால் வெள்ள அபாயம் ஏற்படும் என்பதால் அனைத்து அரசுத் துறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக