AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

சென்னையில் 2 மாணவர்கள் பலி; 50 பேருக்கு பாதிப்பு டெங்கு பரவுகிறது : 7 மாவட்டங்களில் 100 பேருக்கு சிகிச்சை

சென்னை : தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. சென்னையில் 2 மாணவர்கள்  இறந்தனர்; 50 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், டெங்கு காய்ச்சலை தடுக்க தென்மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் சென்னையில் ஆலோசனை நடத்தினார். பின் டெங்கு குறித்து பயப்படத் தேவையில்லை என்றார். ஆனால் தமிழகத்தில் பரவலாக டெங்கு பரவி வருகிறது.  சென்னையில் நேற்று டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். சென்னை ஐஸ் அவுஸ் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் டேவிட் ஜெயசிங். இவர், ஏழுகிணறு காவல் நிலையத்தில் சப்,இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் டேவிட் இறந்துவிட்டார்.   இவரது மகன் சாம்ஜி. இவர், துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 3 வாரமாக சாம்ஜி கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், 11ம் தேதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தனி வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். நேற்று காலை சாம்ஜி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், சாம்ஜி காய்ச்சல் காரணமாக, தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் உறுப்புகள் பெரும்பாலும் செயலிழந்த நிலையில் தான், இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் பல்லுறுப்புகள் செயலிழந்ததால், அவர் உயிரிழந்தார்’’ என்றார். திருவேற்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். கட்டிட மேஸ்திரி. இவரது மகன் சுதாகர் (17). அரும்பாக்கத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். ஒரு வாரமாக சுதாகர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து, அவரை உடனடியாக வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சுதாகரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து, அரசு பொது மருத்துவமனையில் சேர்ப்பதற்காக, நேற்று மாலை சுதாகரை ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து உறவினர்கள் கூறுகையில், ‘‘சுதாகருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. அதனால் தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளும் காணப்பட்டது. ஆனால், டெங்கு காய்ச்சலா என்பது தெரியவில்லை’’ என்று கண்ணீருடன் கூறினர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் கடந்த 3 நாட்களில் 50 பேர் சிகிச்சைக்கு வந்துள்ளனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 குழந்தைகளும், எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 7 குழந்தைகளும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு பெண் உட்பட 3 பேரும்,  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 13 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் சென்னை மற்றும் புறநகரில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று முன்தினம் வரை 26 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில், ‘‘சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார். மாவட்டங்களில்: சென்னை தவிர, 7 மாவட்டங்களில் டெங்கு பரவி வருகிறது. அங்கும் 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். — விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் ஏற்கனவே பலியாகியுள்ள நிலையில், தற்போது மேலும் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது சுகாதார துறை, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சரத்குமாருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவர் நேற்று  பரிதாபமாக இறந்தார். 

நாகை மாவட்டத்தில்  15 பேருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது. 
கோவையில் டெங்கு பாதிப்புக்கு 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு டெங்கை கட்டுப்படுத்த, கிராமங்களில் முகாமிட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் இரு நாட்களுக்கு மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானார். 3 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 7 பேர் பலியாகினர். மேலும் 12  சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 3 சிறுமிகள் பலியாகி உள்ளனர். இப்படி வேறு சில மாவட்டங்களில் இருந்தும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், அதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக