AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 7 ஜூலை, 2012

அதிக வெப்பம், பாக்கெட் உணவுகளால் குழந்தைகளுக்கு சிறுநீரக கல் கோளாறு அதிகரிப்பு


உலகம் முழுவதிலும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சிறுநீரகக் கோளாறால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக பச்சிளங் குழந்தைகளிடமும் இக்கோளாறு அதிக அளவில் காணப்படுகிறது என்கிறார் சென்னையின் பிரபல டாக்டர் வெங்கடேசன் அவர் மேலும் கூறியதாவது:-
 
மனிதனின் முக்கிய உறுப்புகளுள் சிறுநீரகமும் ஒன்று. நாம் சரிவர தினமும் நீர் அருந்தாவிட்டாலோ, அதிக அளவில் ரசாயன குளிர்பானம் அருந்தினாலோ சிறுநீரகத்தில் கல் உண்டாகும்.
 
கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீணிகளில் அவை கெட்டுப் போகாமல் இருக்க சில குறிப்பிட்ட ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த ரசாயனங்களும் சிறு நீரகத்தில் கல் உருவாக காரணமாக அமைகின்றன.
 
தற்போது சென்னை போன்ற பெருநகரங்களில் பாக்கெட் உணவுகள் மற்றும் அதிக வெப்பம், குழந்தையின் உடலுக்கு தேவையான நீர் கொடுக்காமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகளுக்கு சிறுநீரக்கல் ஏற்படுகிறது.
 
குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது அதாவது, அடிக்கடி காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது போன்றவை சிறுநீரகக்கல் ஏற்பட்டதற்கான சில முக்கிய அறிகுறிகளாகும்.
 
குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் குழந்தைகள் நல சிறுநீரக மருத்துவ நிபுணரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சென்னையில் கடந்த சில மாதங்களாக சிறுநீரகக்கல் கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 
இவர்களில் பெரும்பாலானவர்கள் பாக்கெட் உணவுகள் மற்றும் உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்தாதவர்களாக உள்ளனர். எனவே குழந்தைகளின் எடைக்கு ஏற்றபடி பெற்றோர் தண்ணீர் கொடுப்பது நல்லது. அதாவது குழந்தைக்கு 1 கிலோ எடைக்கு 75 மில்லி தண்ணீர் கொடுக்க வேண்டும். 11 கிலோ குழந்தைக்கு 1 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
 
இந்த அளவுக்கு குழந்தைகள் தண்ணீர் குடித்தால்தான் சிறுநீரகத்தில் படியும் உப்புக்கள் அதை விட்டு வெளியேறும். சரியான அளவுக்கு நீர் அருந்தாவிட்டால் சிறுநீரகத்தில் படியும் உப்புக்கள் நாளாக நாளாக கற்களாக மாறி விடுகின்றன. சிறுநீரகக்கல் உருவானால் சிறுநீர் பாதையில் வலி ஏற்படும். எனவே குழந்தைகள் சிறுநீர் போகும்போது அழுதால் உடனடியாக டாக்டரிடம் சென்று காட்டுவது நல்லது.
 
சிறுநீரகக் கற்களை தொடக்க நிலையிலேயே கண்டு பிடித்தால் அதை மாத்திரை, மருந்து மூலம் எளிதாக கரைத்து விடலாம். குழந்தைகளுக்கு உப்பு- காரம் மிகுந்த உணவுகளை அதிக அளவில் கொடுக்கக் கூடாது. இறைச்சி போன்ற அசைவ உணவுகளையும் கொடுக்கக் கூடாது. காரணம் இறைச்சி போன்ற உணவுகளில் யூரிக் ஆசிட் மிகுதியாக இருப்பதுதான்.
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வெப்பம் குழந்தைகளை தாக்குகிறது. வெப்பம் அதிகமாகும் போது உடலுக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படுகிறது. சிறுநீரக சுத்திகரிப்புக்கு தண்ணீர் அவசியம். அது இல்லாத போதுதான் குழந்தையின் சிறுநீரகத்தில் நோய்த் தொற்று மற்றும் கல் ஏற்படுகிறது.
 
சமீபத்தில் சென்னை ஆஸ்பத்திரிகளில் சிறுநீர கக்கல் கோளாறு பாதித்த குழந்தைகள் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளன. 2 வயது குழந்தை ஒன்றுக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக்கல் அகற்றப்பட்டது.
 
எனவே சிறுநீரக கோளாறு ஏற்படுவதை தடுக்க சிறு குழந்தைகளுக்கு அதிக அளவில் சுத்தமான தண்ணீர் கொடுக்கலாம். வண்ணம் கலந்த ரசாயன குளிர்பானங்கள் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்கிறார் பெரம்பூர் சென் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேசன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக