AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 24 ஜூன், 2012

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மருத்துவர்கள் நியமனம்: சுகாதாரத்துறை விளக்கம்


தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள மொத்தம் 835 மருத்துவர் மற்றும் சிறப்பு மருத்துவர் காலிப் பணியிடங்கள் வேலை வாய்ப்பகம் மூலம் பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு நிரப்பிடுவதற்கு 2.1.12 அன்று ஆணை வெளியிடப்பட்டது. 

அவற்றுள் 682 எம்.பி.பி.எஸ். மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 1:5 விகிதாசாரப்படி மருத்துவர்கள் பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டது. அதில் இன சுழற்சி முறைப்படி பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பைச் சார்ந்தவர்களுக்குரிய ஒதுக்கீடு 24 ஆகும். 

முதற்கட்டமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 2448 நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதில் 88 பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் நபர்களின் பெயரும் அடங்கும். 

ஜனவரி 20 மற்றும் 23, 24, 25 ஆகிய தேதிகளில் பணி நியமன கலந்தாய்வு நடத்திட திட்டமிட்டு 09.01.2012 அன்று அனைவருக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இணையதளத்திலும் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து சில முஸ்லீம் சமுதாய மருத்துவர்கள் இணையதளத்திலிருந்த பட்டியலிலுள்ள முஸ்லீம் நபர்களைவிட பதிவு மூப்பு உடையவர்களாக இருந்தால் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகியதைத் தொடர்ந்து, 20.01.2012 அன்று பதிவு தேதியின்படி 122 பிற்படுத்ப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் தவறுதலாக விடுபட்டுள்ளது என்று வேலைவாய்ப்பு அலுவலகத்திருந்து ஓர் பட்டியல் பெறப்பட்டது. 

அவ்வாறு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பின்னர் வழங்கப்பட்ட 122 நபர்களும் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட 88 நபர்களை காட்டிலும் பதிவு தேதியின் அடிப்படையில் முதுநிலை பெற்றவர்கள் என்பதால் தந்தி வாயிலாக கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. 

ஜனவரி மாதம் நடைபெற்ற கலந்தாய்வின்போதே பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்திற்கான ஒதுக்கப்பட்ட 24 காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டது. மேலும், பொது பிரிவின் கீழ் வேலை வாய்ப்பக அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 28 முஸ்லீம் சமுதாயத்தினருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், பணிநியமனக் கலந்தாய்வில் கலந்து கொண்ட 33 பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் (16.11.2010 முதல் 14.12.2011 வரையிலான) பணியில் சேர இடம் தேர்வு செய்ததின் பேரில் காத்திருப்போர் பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே மீதமுள்ள 423 எம்.பி.பி.எஸ். காலி பணியிடங்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 1349 நபர்களின் பட்டியல் பெறப்பட்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் பிற்ப்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினரைவிட முந்தைய தேதியில் (2008, 2009 மற்றும் 11/2010) பதிவு செய்த பிற சமுதாயத்தினர் இடம் பெற்று இருந்தனர். 

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் மருத்துவர்கள் மேற்கூறிய 1349 நபர்களில் பட்டியலில் இருந்தவர்களுக்கு பிறகு பதிவு செய்தவராதலால் அவர்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. முதற்கட்ட பணிநியமன கலந்தாய்விலேயே பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுகத்தினருக்கான இடஒதுக்கீடு (3.5 சதவீதம்) 24 நபர்கள் மற்றும் பொது பிரிவு 28 நபர்களும் ஆக மொத்தம் 52 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

எனவே மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பணி நியமனக் கலந்தாய்வின்போது மற்ற சமுதாயத்தினரைச் சார்ந்தவரை கொண்டு 371 காலிப் பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட்டது. தற்பொழுது இன்னமும் நிரப்பப்பட வேண்டிய காலிப் பணியிடங்கள் 52 ஆகும். 

இவற்றை நிரப்ப மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் கோரப்பட உள்ளது. பெறப்படும் பட்டியலில் பதிவுத் தேதியின் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் நபர்களை உரிய இடத்தில் பொருத்தி பணி நியமனம் மேற்கொள்ளப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக