AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 19 ஏப்ரல், 2012

அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்க நிபந்தனைகள் தேர்தல் கமிஷனின் விதிமுறைகள்


அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதற்கு நிரந்தர சின்னம் தேர்தல் கமிஷனால் ஒதுக்கப்பட்டு வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
அதன்படி, ஒரு கட்சிக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால், அந்த கட்சி சட்டசபை தேர்தலில் 6 சதவீத ஓட்டுகளை பெற்று இருப்பதுடன், குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்று, தேர்தல் கமிஷன் நிபந்தனை விதித்து உள்ளது.
தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்குவதற்காக தேர்தல் கமிஷன் விதித்துள்ள இந்த விதிமுறைகளை எதிர்த்து, கடந்த 2008-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
தே.மு.தி.க. மனு
தமிழ்நாட்டில் தே.மு.தி.க., விடுதலைச்சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி, மற்றும் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ், நடிகர் சிரஞ்சீவியால் தொடங்கப்பட்ட பிரஜா ராஜ்ஜியம் உள்ளிட்ட 15 கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
தே.மு.தி.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனுவில், தேர்தலில் தங்கள் கட்சி 8 சதவீத ஓட்டுகள் பெற்று இருந்தபோதிலும், இரு சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற முடியாததால் அங்கீகாரம் மறுக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது.
விதிமுறைகள் செல்லும்
அல்டமாஸ் கபீர், எஸ்.எஸ்.நிஜ்ஜார் மற்றும் செலமேஸ்வர் ஆகிய 3 நீதிபதிகளை கொண்ட `சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச்’ இந்த வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறியது. அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக தேர்தல் கமிஷன் வகுத்துள்ள விதிமுறைகள் செல்லும் என்று, நீதிபதிகள் அல்டமாஸ் கபீர் மற்றும் நிஜ்ஜார் ஆகிய இரு நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
மற்றொரு நீதிபதியான செலமேஸ்வர், இந்த தீர்ப்பை ஏற்காததுடன் அதற்கு எதிரான கருத்தை தெரிவித்து இருக்கிறார். இருந்தபோதிலும் பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தின் அடிப்படையில், தேர்தல் கமிஷனின் விதிமுறைகள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சினை குறித்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
நியாயமான விதிமுறைதான்
“அங்கீகாரத்தை பெறுவதற்காக ஒரு கட்சி தனது தகுதியை நிரூபித்தாக வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் கமிஷன் ஒரு அளவீட்டை நிர்ணயித்து உள்ளது. இது நியாயமான பொருத்தமான விதிமுறைதான். இதன்மூலம் அங்கீகாரம் பெற்ற கட்சியால் நிரந்தர சின்னம் உள்ளிட்ட அனைத்து பயன்களையும் பெற முடியும்” என்று பெரும்பான்மை தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில், மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி செலமேஸ்வர், மற்ற இருவரின் கருத்தை ஏற்கவில்லை. “அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கான விளக்கத்தில் விவேகமான தொடர்பு இல்லை” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
நம்பரை வைத்து தீர்மானிப்பதா?
“ஒரு ஜனநாயக அமைப்பில் பெரும்பான்மையினர் ஆட்சியில் சிறுபான்மையோரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை சொல்ல இந்த கோர்ட்டு தவறிவிட்டது என்பதே எனது கருத்து என்றும், அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
“நம்பரை மட்டும் அடிப்படையாக வைத்து ஜனநாயகத்தை தீர்மானிப்பதாக இருந்தால், உலகின் மிகப் பெரிய ஜனநாயகவாதியாக ஹிட்லர் இருந்து இருப்பார்” என்றும் நீதிபதி செலமேஸ்வர், தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக