AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 17 டிசம்பர், 2011

அரபு வசந்தத்தின் இடி முழக்கத்திற்கு ஓர் ஆண்டு நிறைவு!


தென்மேற்கு துனீசிய நகரமான ஸிதி பூஸிதில் நடைபாதை காய்கறி வியாபாரி ஒருவர் சுயமாக தீக்குளித்து தற்கொலைச் செய்த சம்பவத்தில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு மணிநேரமும் நடைபெறும் அசம்பாவித சம்பவங்களில் இதுவும் ஒன்று.
ஆனால்,முஹம்மது புவைஸி என்ற சாதாரண அரபு இளைஞரின் மரணம், 2011 ஆம் ஆண்டில் மிகவும் சக்திமிக்க தீவிரமான தொடர் புரட்சிக்கு துவக்கம் குறித்தது.
அரபு வசந்தம் என்றும், மத்தியக் கிழக்கின் புரட்சி என்றும் அழைக்கப்படும் அரசியல், சமூக பூகம்பத்தின் பிறப்பிடமாக ஸிதி பூஸித் மாறியது. புவைஸியின் மரணம் நிகழ்ந்து இன்று ஒரு வருடம் நிறைவுறும் வேளையில் உலகின் பல பகுதிகளிலும் போராட்டத்தின் தீ ஜுவாலைகள் அணையவில்லை.
ஏகாதிபத்தியவாதிகளான ஆட்சியாளர்களுக்கு எதிராக பல வருடங்களாக புகைந்து கொண்டிருந்த அரசு எதிர்ப்பு உணர்வு இளைஞர்களின் நேரடி யுத்தமாக மாறியதை உலகம் கண்டது.
துனீசியாவில் இரத்தம் சிந்தாத புரட்சியாக மாறியது. எனில், எகிப்து, லிபியா, சிரியா, யெமன் ஆகிய நாடுகளில் இரத்தக் களரியை உருவாக்கியது எதிர்ப்பாளர்களின் போராட்டம்.
கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதும், வேலையில்லா திண்டாட்டமும் துனீசிய மக்களை போராட்டக் களத்தில் குதிக்க வைத்தது. அந்த எழுச்சி இறுதியில் 23 ஆண்டுகள் துனீசியாவை அடக்கி ஆண்ட சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் வீழ்ச்சியில் முடிவுற்றது. இதனைத் தொடர்ந்து ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான போராட்டம் துனீசியாவின் எல்லையை கடந்து அரபுலகின் பல்வேறு நாடுகளை ஆட்கொண்டது. துனீசியாவிற்கு அருகிலுள்ள எகிப்தில் புரட்சிக்கு அடுத்த களம் உருவானது. பின்னர் 30 ஆண்டுகளாக பதவியில் நீடித்த ஏகாதிபத்தியவாதி ஹுஸ்னி முபாரக் பதவி விலகியதையும், ஜனநாயகம் மீண்டும் எகிப்தை அரவணைத்துக் கொண்டிருப்பதையும் உலகம் கண்டது.
மெடிட்டரேனியன் சமுத்திரத்தின் கரையோரங்களில் வீசிக் கொண்டிருந்த முல்லைப்பூ சூறாவளி கடல் கடந்து சிரியாவிலும், யெமன் மற்றும் பஹ்ரைனையும் தாக்கியது. சிரியா இப்பொழுதும் எரிகிறது. யெமனிலோ, 33 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலக தயார் என வளைகுடா நாடுகள் தயாராக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
துனீசியாவில் துவங்கிய புரட்சியின் தொடர்ச்சிதான் லிபியாவின் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் அதிகாரத்தை ஆட்டம் காணவைத்து இறுதியில் அவரது மரணத்தில் முடிவடைந்தது.
ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான எதிர்ப்பின் நெருப்பு வடக்கு ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும் மட்டும் ஒதுங்கிவிடவில்லை. கிரிஸிலும், தற்பொழுது ரஷ்யாவிலும் அரசுகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் அலைவீசுகிறது.
புவைஸி துவங்கி வைத்த புரட்சி இன்று அமெரிக்காவிலும் ‘வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ போராட்டமாக பரிணமித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக