AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 8 டிசம்பர், 2011

முல்லை பெரியாறு அணை பிரச்சனை கேரள அரசுக்கும் வன்முறையாளர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:


முல்லை பெரியாறு அணை விவகாரத்தில்  தமிழக  கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தி தமிழக கேரள எல்லையில் வன்முறைக்கு வித்திட்ட கேரள அரசின் செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள இப்பிரச்சனையில் அணையை பார்வையிட நீதிபதி ஆனந்த் தலைமையில் தமிழக கேரள பிரதிநிதிகள் இடம்பெறும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இப்பிரச்சனையை அரசியலாக்கி இடைத்தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தும் கேரள அரசு மற்றும் கேரள அரசியல் கட்சிகளின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 1900 ஆண்டு பழமையான கல்லணை தமிழகத்தில் கட்டுறுதியோடு உபயோகத்தில் உள்ளது. ஆந்திராவில் உள்ள கோதாவரி அணை கிருஷ்ணா தடுப்பணை போன்ற பழமையான அணைகளும் இன்றும் உறுதியோடு உள்ளன.

கேரளாவிலும் பழமையான அணைகள் ஏராளம் உள்ளன அவையாவும் நல்ல நிலையிலேயே உள்ளன. ஆனால் முல்லை பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகவும் அதில் 121 கன அடிக்கு மேல் நீர்தேக்க முடியாது என்றும் அப்படி தேக்கினால் அணை உடைந்து பெரும் உயிர் சேதம் ஏற்படும் என்றும் கேரள அரசு வதந்தி பரப்புவது வருந்ததக்கது. தமிழகத்தை வஞ்சிக்கும் கோரிக்கையாகவும் இது உள்ளது.

உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு பிரச்சனையில் அத்து மீறி நுழைந்து வன்முறையில் ஈடுபடுவதும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தை சேதப்படுத்துவதும், தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் பக்தர்களையும், தொழிலாளர்களையும், வணிகர்களையும் தாக்குவதும் கடும் கண்டனத்திற்குரியது.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய ஒரு மாநில அரசே சட்டத்தை மதிக்காமலும் சட்டம், ஒழுங்கு சீர்குலைய வித்திடுவதும் வேதனைக்குரியதாகும்.

முல்லை பெரியாறு பகுதியில் உள்ள பேபி அணையை உடைக்க கடப்பாறை மண்வெட்டி உள்ளிட்ட தளவாடங்களோடு நுழைந்த ப.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

வன்முறையை துண்டிவிடும் தீய சக்திகளுக்கு இரு மாநில மக்களும் பலியாகிட கூடாது என்ற தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் கருத்தை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்று வலியுறுத்துகிறது. தமிழக கேரள எல்லை பகுதியில் வன்முறை வளர்ப்பவர்கள் அடக்கப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள கேரள மக்களின் சிறுகடைகள் மீது  நடத்தப்பட்ட தாக்குதலையும் மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை  அணையை பாதுகாப்பதும் 142 கன அடி நீர் தேக்கத்தை உறுதி செய்வதும் மத்திய அரசின் கடமை ஆகும்.

தமிழக கேரள எல்லை பகுதியில் முல்லை பெரியாறு அணைக்கட்டு பகுதியிலும் தமிழக முதல்வரின் கோரிக்கைக்கிணங்க மத்திய தொழிலக பாதுகாப்பு படையை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக