புதுடெல்லி:மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா 134-வது இடத்தை பிடித்துள்ளது. 187 நாடுகளை உட்படுத்தி ஐ.நா வெளியிட்டுள்ள வளர்ச்சி குறியீட்டு பட்டியலில் போரால் சீர்குலைந்துள்ள ஈராக்கும், ஏழை நாடாக கருதப்படும் பிலிப்பைன்ஸும் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முந்தைய இடங்களை பிடித்துள்ளன.
கடந்த 2010-ஆம் ஆண்டு பட்டியலில் இந்தியாவுக்கு 119-வது இடம் கிடைத்தது. இந்தியாவை பின்னுக்கு தள்ளி இலங்கை 97-வது இடத்தையும், சீனா 101-வது இடத்தையும், மாலத்தீவு 109-வது இடத்தையும் பிடித்துள்ளன. பூட்டானுக்கு 141-வது இடம் கிடைத்துள்ளது. நீண்டகால சுகாதார பணிகள், கல்வி, வருமான குறியீடு ஆகியவற்றை அளவுகோல்களாக கொண்டு மனித வளர்ச்சி குறியீட்டு அறிக்கை தயாரிக்கப்படுகிறது. பாகிஸ்தானும், பங்களாதேசும் வரிசைக்கிரமமாக 145,146-வது இடங்களை பிடித்துள்ளன. டெமோக்ரேடிக் ரிபப்ளிக் ஆஃப் கோங்கோ கடைசி இடத்தை பிடித்துள்ளது.
பால் சமத்துவமின்மை மிக அதிகமாக நிலவும் தெற்காசிய நாடுதான் இந்தியா என ஐ.நா அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் 61.2 கோடி மக்கள் வறுமையில் உழலுவதாக அந்த குறியீடு தெரிவிக்கிறது.ஆனால், வன அழிப்பை தடுப்பது,இயற்கை பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா முன்மாதிரியான செயல்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக