புதுடெல்லி:வறுமைக்கோடு வரையறையை நிர்ணயிக்க புதிய குழு அமைக்கப்படும் என்று மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மான்டெக் அலுவாலியாவும், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் நேற்று கூட்டாக அறிவித்தனர்.
நகர்புறத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நாள் வருமானம் ரூ.32; கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்கு ரூ.25 என்ற வறுமைக் கோட்டு வருமான வரம்பு ரத்து செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அதேவேளையில், வறுமைக் கோட்டுக்கான வருமான வரம்பு நாள் ஒன்றுக்கு ரூ.32 என்பது திட்டக் குழுவின் கருத்தல்ல என்றும், அது டெண்டுல்கர் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட தகவல் என்றும் அலுவாலியா விளக்கம் அளித்தார்.
இந்த விவகாரத்தில் திட்டக் குழு மீது சிலர் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்ச்சாட்டிய அவர், அரசு திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளை இந்த வரம்பு பாதிக்காது என்றும் கூறினார்.
நாட்டில் ‘வறுமைக் கோட்டுக்கு கீழ்’ என்பதை நிர்ணயிப்பதற்கான வருமான வரம்புத் தொகை மிகச் சொற்பமாக இருந்ததால் எதிர்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மத்திய அமைச்சர்கள் என பல தரப்பிலும் கடும் அதிருப்தி ஏற்பட்டது. எனவே, இந்த வரம்புத் தொகையை மத்திய திட்டக் கமிஷன் மாற்றியமைக்க முடிவு செய்தது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை ஞாயிற்றுக்கிழமை மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மான்டெக் அலுவாலியா சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுடன் மான்டெக் இன்று பேச்சு நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய திட்டக்குழு உறுப்பினர்கள் அபிஜித் சென், மிஹிர் ஷா, சையத் ஹமீத் மற்றும் நரேந்திர ஜாதவ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் அலுவாலியா கூறுகையில், “ஜெய்ராமுக்கும் எனக்கும் இடையே சந்திப்பு நல்லபடியாக இருந்தது. முக்கியப் பிரச்னைகள் பலவற்றுக்கும் தீர்வு காணப்பட்டதாக நினைக்கிறேன். நாங்கள் முழுமையான உடன்பாட்டை எட்டியுள்ளோம்,” என்றார்.
அப்போது, “வறுமைக் கோட்டுக்கும் ஊரக வளர்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பில் விரிவான சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளது,” என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
பின்னர், மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மான்டெக் அலுவாலியாவும், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்,
அப்போது, வறுமைக்கோட்டுக்கான வருமான வரம்பை நிர்ணயிப்பதற்கு புதிய நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், அதில் ஏழைகள் எவரும் தவிர்க்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், திட்டக் கமிஷனும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகமும் இணைந்து புதிய முறையை கையாண்டு இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
இதனால், வறுமைக்கோட்டுக்கான வருமான வரம்பு வெகுவாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் திட்டக் கமிஷன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கான வருமான நிர்ணயம் தொடர்பான தகவலை அளித்திருந்தது.
அதில், நகர்புறத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நாள் வருமானம் ரூ.32 என்றும், கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்கு ரூ.25 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இது எதிர்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அமைச்சர்கள் பலருக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் நேரடியாகவே இந்த நிர்ணயத் தொகையை மாற்றியமைக்கும்படி வலியுறுத்தினர்.
குறிப்பாக, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான வரம்பினை மாற்றியமைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, வறுமைக் கோட்டுக்கான புதிய வரம்பை நிர்ணயித்து, அதனை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய திட்ட கமிஷன் முடிவு செய்தது கவனத்துக்குரியது.






0 கருத்துகள்:
கருத்துரையிடுக