சமச்சீர் கல்வி வழக்கு காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஆனது. ஆகஸ்டு 18-ந்தேதி வரை பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் இந்த கல்வியாண்டில் 60 வேலை நாட்கள் இழப்பு ஏற்பட்டது. வழக்கமாக காலாண்டு தேர்வுவரை 40 சதவீத பாடங்கள் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு 20 சதவீத பாடங்கள் மட்டுமே முடிக்கப்பட்டு காலாண்டு தேர்வு நடத்தப்பட்டது.
நேற்றுடன் காலாண்டு தேர்வு முடிந்தது. வழக்கமாக காலாண்டு தேர்வு முடிந்ததும் 10 நாட்கள் வரை விடுமுறை கொடுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு 1 முதல் 8-ம் வகுப்புவரை கடந்த 27-ந்தேதி தேர்வு முடிந்தது. இவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நாளை (திங்கள்) பள்ளிகள் திறக்கப்படுகிறது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை நேற்று தேர்வு முடிந்தது.
5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வகுப்புகள் திறக்கிறது. பொது தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையிலும் பள்ளிகளை பொறுத்து பாடங்கள் நடத்தப்படுகிறது. இழந்த வேலை நாட்களை ஈடுசெய்வதற்காக இந்த கல்வியாண்டில் 42 வேலை நாட்கள் அதிகரிக்கப்படுகிறது.
மாதம்தோறும் 2 சனிக்கிழமை பள்ளிகளை நடத்துவதன் மூலம் 17 நாட்களும், தினமும் வேலை நேரத்தை 35 நிமிடங்கள் அதிகரிப்பதன் மூலம் 16 வேலை நாட்களும், காலாண்டு விடுமுறையில் 5 நாட்களும், ஏப்ரல் 18-க்கு பதில் ஏப்ரல் 28-ந்தேதிவரை பள்ளிகளை நடத்துவதன் மூலம் 10 நாட்களும் ஆக 42 வேலை நாட்கள் அதிகரிக்கப்படுகிறது.
இந்த நடைமுறைகளை நாளை பள்ளிகள் திறந்ததும் அமுல்படுத்த கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.







0 கருத்துகள்:
கருத்துரையிடுக