சென்னை வக்கீல் பூங்குன்றன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-
2001-2006-ம் ஆண்டுக்கான உள்ளாட்சி தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வாக்களிக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது வருகிற 17, 19-ந்தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும் என்று கடந்த மாதம் 6-ந்தேதி மாநில தேர்தல் கமிஷனர் சோ. அய்யரிடம் மனு கொடுத்தேன்.
“நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலை மத்திய பாதுகாப்புப்படை பாதுகாப்புடன் நடத்தவேண்டும். மின்னணு எந்திரங்கள் மூலம் ஓட்டுப்பதிவு நடைபெற வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறுவது முதல், ஓட்டுக்கள் எண்ணப்படும் வரை நடைபெறும் நிகழ்வுகளை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தேன்.
இதற்கு பதில் அளித்த மாநில தேர்தல் கமிஷனர் சோ. அய்யர், “எனது மனுவை பரிசீலிப்பதாகவும், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் போது என்னையும் அழைப்பதாகவும் கூறி இருந்தார். ஆனால் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தபோது என்னையோ, அரசியல் சாராத சமூக நல அமைப்புகளையோ, சமூக ஆர்வலர்களையோ அழைக்கவில்லை.
மீண்டும் கடந்த 17-ந்தேதி தேர்தல் கமிஷனுக்கும் இது குறித்து மனு கொடுத்துள்ளேன். எனவே, உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்ற எனது கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.
மனுவை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஹரி பரந்தாமன், அக்பர் அலி ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் தரப்பில் வக்கீல் வில்சன் ஆஜர் ஆகி வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மாநில தேர்தல் கமிஷனுக்கும், தேர்தல் கமிஷனர் சோ. அய்யருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உத்தர விட்டனர். வருகிற 13-ந்தேதிக்குள், பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.







0 கருத்துகள்:
கருத்துரையிடுக