AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

பெட்ரோல் விலை உயர்வு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்


பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல்  சமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சாமான்ய  மக்களின் துயரத்தை அதிகரிக்கும் விதமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் 2-வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பதாலும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்துவருவதாலும் இந்த விலை உயர்வைத் தவிர்க்க முடியவில்லை என சாக்கு போக்கு சொல்லப்பட்டு விலை ஏற்றத்திற்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒரு பேரல் கச்சா எண்ணெய் 103 அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்டபோது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.63.70 என நிர்ணயிக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 111 டாலர் என உயர்ந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது.

பெட்ரோல் விலையேற்றத்திற்கான எண்ணெய் நிறுவனங்களின் இந்த  நடவடிக்கை வன்மையாக  கண்டிக்கத்தக்கது. பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தால் சாமானிய மக்கள் கடுமையாக  பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து கவலைப்படாமல் மக்கள் விரோத  மத்திய அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

கடந்த மூன்று மாதத்திற்கு முன்,  மத்திய அரசு எரிபொருட்களின் விலைகளை  உயர்த்தியதன் விளைவாக  ஏழை எளிய மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளான நிலையில், மீண்டும் மீண்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது. இது சாமான்ய மக்களின் துயரத்தை அதிகரிக்கச் செய்கிறது. இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். அதிகரித்து வரும் விலைவாசியைக் குறைக்கும் பொறுப்பினைத் தட்டிக் கழித்துவிட்டு மேலும் மக்களின் சுமையையும் வேதனையையும் அதிகரிக்கச் செய்யும் இந்தப் பெட்ரோல் விலையேற்றத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக