சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்றிரவு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இன்று காலையும் மழை நீடித்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வட மாவட்டங்கள் கூடுதல் மழை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளன. வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
ஒரிசா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை முதல் சென்னை நோக்கி நகரத் தொடங்கி உள்ளது. இன்றிரவு அந்த காற்றழுத்தம் தமிழகம்-ஆந்திரா கடலோரத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த காற்றழுத்தம் காரணமாக சென்னையில் இன்றிரவு பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு திசை நோக்கி மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சில இடங்களில் 70 மி.மீ. அளவுக்கு மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குனர் குழந்தைவேலு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரிசா பகுதியில் இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தெற்கு நோக்கி நகர்ந்து ஆந்திராவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பகுதியில் 11 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு, ஸ்ரீபெரும் புதூரில் 9 செ.மீ. காவேரிபாக்கம், திருவள்ளூரில் 8 செ.மீ., குடியாத்தம், சோழிங்கர் வேலூர் ஆகிய இடங்களில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.




0 கருத்துகள்:
கருத்துரையிடுக