பாகிஸ்தானியர் ஒருவரை கொலை செய்தது தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் 17 நபர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட இருக்கின்றனர்.இது தொடர்பாக இன்றைய தேதியிட்ட (13-9-2011) அமீரகத்தின் பிரபல ஆங்கில நாளேடான கலீஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது....
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் ஷார்ஜா நகரின் தொழிற்பேட்டையான அல் சாஜா பகுதியில் வசித்து வந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மிஸ்ரி நசீர் கான் என்பவரை, கள்ள சாராயம் விற்பதில் உண்டான தொழில் போட்டியின் எதிரொலியாக மற்றொரு கள்ள சாராய வியாபாரக் கும்பலை சேர்ந்த 17 நபர்கள் கொன்றுவிட்டனர்.கொலை செய்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு ஷார்ஜா காவல்துறையினால் கைது செய்யப்பட்ட 17 இந்தியர்களில் 16 பேர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.மற்றொருவர் அண்டைமாநிலமான ஹரியானாவை சேர்ந்தவர்.
இது தொடர்பாக ஷார்ஜா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இந்த 17 இந்தியர்களின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு,இவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. தூக்கு தண்டனையை எதிர்நோக்கிஇந்த ௧௭ நபர்களும் கடந்த இரண்டு வருடங்களாக சிறையில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமீரகத்தில் தொழில் புரிந்து வரும் சில இந்திய தொழிலதிபர்களின் முயற்சியால் கொல்லப்பட்ட பாகிஸ்தானியரின் உறவினர்கள் கொலையாளிகளிடமிருந்து இழப்பீட்டு தொகையாக 3.4 மில்லியன் திர்ஹம் பெற்றுக்கொண்டு அவர்களை மன்னித்து விடுவதாக ஒப்புக்கொண்டு இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் கடந்த ஜூலை கையெழுத்திட்டு கொண்டதன் எதிரொலியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களும் விடுதலை செய்யப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட இருக்கின்றனர்.
ராஜீவ் கொலை குற்றவாளிகள்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற வழக்கில் முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோருக்கு விரைவில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் தூக்குத் தண்டனையினை ரத்து செய்யவேண்டும் என உலகெங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்களால் இந்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வரும் இந்நேரத்தில்,மரண தண்டனையே கூடாது என்று வாதிட்டு வரும் சிலர்கள் இஸ்லாமிய நாடுகளில் வழங்கப்பட்டு வரும் இத்தகைய தண்டனையினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இத்தகையோர் இஸ்லாமிய நாடுகளில்,பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு தொகை பெற்றுக்கொண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகின்றனர் என்பதை அறியாமல் பேசி வருகின்றார்களா என்பது நமக்கு புரியவில்லை.
மரண தண்டனைக்கெதிராக பிரச்சாரம் செய்து வருபவர்கள் இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் இந்த இழப்பீட்டு தொகை பெற்றுக்கொண்டு குற்றவாளிகள் விடுதலை செய்யப்படும் நிலையை போன்றே நமது இந்தியாவிலும் கொண்டுவரப்பட குரல் கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று குரலெழுப்பி வரும் தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இதனை வலியுறுத்தி குரலெழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
- கொள்ளுமேடு ரிபாயி..




0 கருத்துகள்:
கருத்துரையிடுக