சென்னை, செப். 13-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் சொன்னபடி இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் நடைபெறும் விழாவில் இந்த திட்டத்துடன் இலவச லேப்-டாப் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு 4 ஆடுகள், ஜெர்சி கறவை மாடுகள் ஆகியவற்றையும் வழங்குகிறார்.இதில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி அனைத்து பச்சை நிற ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
இதற்காக முதற்கட்டமாக 25 லட்சம் மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் மிக்சி மட்டும் பட்டர்பிளை, காஞ்சன், பீஜியன், சகாரா, கிரீன் செப், சன் பிளவர், டைனமிக், ஆகிய 6 கம்பெனிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் கோவா டாமன், மும்பை ஆகிய ஊர்களில் இருந்து வருகிறது. இதில் பீஜியன், கிரீன் செப் நிறுவனங்கள் பெங்களூரை அடிப்படையாக கொண்ட பிரபல நிறுவனமாகும்.மிக்சி வெள்ளை நிறத்தில் 2 ஜார்களுடன் உள்ளது. 1 லிட்டர் ஜார், 400 மி.லிட்டர் ஜார் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளது.
இதே போல் டேபிள் டாப் கிரைண்டர் 8 கம்பெனிகளில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இது பிரவுன் நிறத்தில் உள்ளது. பட்டர் பிளை, ஜோதி, சாஸ்தா, சவுபாக்யா, பி.வி.ஜி., பொன்மனி, விஜயலட்சுமி, அமிர்தா ஆகிய கம்பெனிகள் கிரைண்டர் தயாரித்து கொடுத்துள்ளது.
கோவை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த கிரைண்டரின் எடை 12 கிலோ ஆகும்.
இதே போல் டேபிள் மின்விசிறி கிராம்டன் கிரீவ்ஸ், பட்டர்பிளை, பீஜியன், மார்க் ஆகிய கம்பெனிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இவை உள்ளது. ஐதராபாத், இமாசலபிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து இவை கொண்டு வரப்பட்டுள்ளது.2 ஆண்டு தர உத்தரவாதம் கொண்ட இந்த பொருட்களுக்கு தனித் தனியே ரகசிய குறியீடு எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளனர்.தமிழக அரசு எம்பளமும் இருக்கும். இதை ஆய்வு செய்தால் ஒவ்வொரு பொருளும் எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு எந்த பகுதியில் யாருக்கு வழங்கப்பட்டது என்ற விவரங்கள் தெரிய வரும்.
இதை வாங்கி யாராவது கடைகளில் விற்றாலும், பதுக்கி வைத்தாலும் ரகசிய குறியீடை வைத்து அடையாளம் கண்டு கொள்ள முடியும். மின் விசிறியின் மையப் பகுதியிலும், கிரைண்டரின் வலது புரத்திலும், மிக்சியின் பக்கவாட்டிலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது.
மிக்சி, கிரைண்டர், டேபிள் மின்விசிறி ஆகியவை தயார் நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வைக்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக 25 லட்சம் மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளை பிப்ரவரி மாதத்திற்குள் வழங்கி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




0 கருத்துகள்:
கருத்துரையிடுக