AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 15 செப்டம்பர், 2011

எல்லோருக்கும் உணவு அளிக்க வேண்டும் பட்டினியால் ஒருவர் இறப்பதை கூட இனியும் அனுமதிக்க முடியாது

புதுடெல்லி : பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைவு காரணங்களால் ஒருவர் இறப்பதை கூட அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஏழைகளுக்கு உணவு அளிக்க எவ்வளவு உணவுதானியம் வேண்டும் என்பதை 2 வாரங்களுக்குள் தெரிவிக்குமாறு மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 பொது விநியோகத் திட்டத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக குற்றம்சாட்டி மக்கள் உரிமை கழகம்(பியுசிஎல்) என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்தது. இம்மனுவை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: நாட்டில் பட்டினி மற்றும் ஊட்டச் சத்து குறைவு காரணமாக ஒருவர் இறப்பதை கூட அனுமதிக்க முடியாது. ஏழைகள் எல்லோருக்கும் உணவு கிடைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கூடுதலாக எவ்வளவு உணவு தானியம் வேண்டும் என்பதை மாநில தலைமைச் செயலாளர்கள் 2 வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.

அப்படி 2 வாரத்திற்குள் மாநில அரசுகள் தகவல் தெரிவிக்காவிட்டால், அந்த மாநிலங்களுக்கு கூடுதல் உணவு தானியம் தேவையில்லை என கருதப்படும். 
மாநில அரசுகளின் தேவையை பரிசீலித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொது விநியோகத் திட்டத்தில் பெருமளவு முறைகேடுகள் நடக்கின்றன. உணவு தானியங்கள் கடத்தப்படுகின்றன. 

இவற்றை தடுக்க பொது விநியோகத் திட்டத்தை முற்றிலும் கம்ப்யூட்டர்மயமாக்க வேண்டும். இதை மிகவும் விரைவாக செய்ய வேண்டும். இதன் மூலம், பொது விநியோகம் வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். தமிழகத்தில் ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி, மானிய விலையில் மளிகை பொருட்கள் தரப்படுவதை ஏற்கனவே நீதிபதிகள் பாராட்டியுள்ளனர். 

அதே போல், ஏழைகள் அதிகமாக உள்ள 150 மாவட்டங்களுக்கு 50 லட்சம் டன் தானியங்கள் வழங்க மத்திய அரசுக்கு  ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உணவு தானியங்கள் முறையாகப் போய் சேர்வதை ஒரு குழுவை நியமித்தும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தர விட்டிருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக