பொதுத்துறை எண்ணை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை கடந்த வியாழக் கிழமை பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தின.பெட்ரோல் விலை ஒரே ஆண்டில் 5 முறை உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை அரசே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேவேளையில் இந்த விலை உயர்வை மத்திய அரசு நியாயப்படுத்தி வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயரும்போது, பெட்ரோல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாதது என்று மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி கூறினார்.
ஆனால் பல நாடுகளை ஒப்பிடும்போது பெட்ரோல் விலை இந்தியாவில்தான் மிகவும் அதிகம் என்று சமீபத்தில் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன. இவ்வளவுக்கும் விலை குறைவாக பெட்ரோல், டீசல் வாங்கப்படும் நாடுகளின் கரன்சிகளுடன் ஒப்பிடும் போது இந்திய கரன்சியின் மாற்று மதிப்பு சற்று அதிகம் ஆகும்.
வெளிநாட்டு நிறுவனம் ஒன்று பெட்ரோல், டீசல் விலைகள் குறித்த புள்ளி விவரங்களை சேகரித்து மொத்தம் 157 நாடுகளில் இருந்து புள்ளி விவரங்கள் பெறப்பட்டன. இந்த நாடுகள் அனைத்தும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பை (ஓபெக்) சார்ந்து இருப்பவை. இதேபோல சர்வதேச செலாவணி நிதியத்தில் இருந்து இந்த நாடுகளின் பணமாற்று மதிப்பு குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.இவற்றை வைத்து ஒப்பிட்டு பார்க்கும்போது 98 நாடுகளை விட இந்தியாவில்தான் பெட்ரோல், டீசல் விலை கூடுதலாக இருப்பது தெரிய வந்தது.
சீனா, இங்கிலாந்து, பிரேசில், ஜப்பான், ரஷியா, அமெரிக்கா, சவூதிஅரேபியா, வெனிசுலா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், விலை உயர்வில் இந்தியாதன் முதலிடத்தில் இருக்கிறது. மேற்கண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.95-ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.46-ம் அதிகமாக உள்ளது.
சீனாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.95-ம், டீசல் லிட்டருக்கு ரூ.1.83-ம், இங்கிலாந்தில் பெட்ரோல் ரூ.1.85-ம், டீசல் ரூ.1.91-ம் அதிகமாக உள்ளன. பிரேசில் நாட்டில் பெட் ரோல் லிட்டருக்கு ரூ.1.70-ம், டீசல் லிட்டருக்கு ரூ.1.23-ம், ஜப்பானில் பெட்ரோல் ரூ.1.28-ம், டீசல் ரூ.1.09-ம், ரஷியாவில் பெட்ரோல் ரூ.1.26-ம், டீசல் ரூ.1.08-ம் விலை உயர்த்தப்பட்ட இருக்கிறது.
அமெரிக்காவில் பெட்ரோல் 76 பைசாவும், டீசல் 84 பைசாவும், சவுதி அரேபியாவில் பெட்ரோல் 23 பைசாவும், டீசல் 10 பைசாவும், வெனிசுலாவில் பெட்ரோல் 3 பைசாவும், டீசல் 1 பைசாவும் மட்டுமே விலை அதிகமாக உள்ளது.வெனிசுலாவில்தான் பெட்ரோல் விலை மிகமிக குறைவு ஆகும். இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1.14-க்கு விற்கப்படுகிறது. அடுத்தபடியாக ஈரானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.4.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு பண வீக்கத்தை காரணமாக கூறப்படுகிறது.மற்ற நாடுகளை ஒப்பிடும்போது பணவீக்க பாதிப்பு இந்தியாவில் குறைவுதான் என்று கூறப்படுகிறது. உள்ளாட்சி வரிகள் விதிப்புதான் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகமாக இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.
சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரால் விலையினாலும், ஆட்டோ மொபைல் துறை பாதிப்பு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருசக்கர வாகன விற்பனையை பாதித்து இருப்பதாக ஆட்டோ மொபைல் கம்பெனியினர் தெரிவித்து உள்ளனர். ஏழைகள், நடுத்தர மக்கள்தான் பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.





0 கருத்துகள்:
கருத்துரையிடுக