லிபியாவில் அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் கடாபியின் சொந்த ஊரான சிர்த், அவரது ஆதரவாளர்களின் நகரமான பானி வாலிட் ஆகிய 2 பகுதிகளும் இன்னும் புரட்சி படையின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வர வில்லை. எனவே அந்த இரு நகரங்களையும் கைப்பற்ற கடாபி ராணுவத்துடன் புரட்சி படை தீவிரமாக சண்டையிட்டு வருகிறது.
இவர்களுடன் நேட்டோ படையும் சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் இரவு நோட்டோ படை சிர்த் நகரில் 30-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசின. அவை நகரின் மிகப் பெரிய ஓட்டல் மற்றும் தமின் கட்டிடத்தின் மீதும் விழுந்தன. மேலும் அவை மக்களின் 90 குடியிருப்பு கட்டிடங்களையும் தாக்கியது. இதனால் பலத்த உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது.
இங்கு நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் 354 பேர் பலியானார்கள். 89 பேரை காணவில்லை. 700 பேர் காயம் அடைந்தனர். இந்த தகவலை கடாபியின் செய்தி தொடர்பாளர் மூசா இப்ராகிம் துனிஷ் நகரில் இருந்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது, அதிபர் கடாபி இன்னும் லிபியாவில் தான் இருக்கிறார். அவர்தான் படையை வழி நடத்துகிறார். மக்களுடன் பேசி வருகிறார்.
புரட்சி படையை விரட்டியடிப்பதில் உறுதியாக இருக்கிறார். எங்களிடம் மாதக் கணக்கில் போரிட தேவையான ஆயுதங்கள் உள்ளன. எனவே சண்டை தொடர்ந்து நீடிக்கும். சிர்த் நகரில் கடந்த 17 நாட்களாக நடந்து வரும் சண்டையில் இதுவரை 2 ஆயிரம் குடியிருப்பு வாசிகள் பலியாகி உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே சண்டை நடைபெறும் பானிவாலிட் நகர மக்களுக்கு துருக்கி உணவு பொருட்களை அனுப்பியுள்ளது. 2 ராணுவ சரக்கு விமானங்கள் 22 டன் உணவு பொருட்களுடன் அங்காராவில் இருந்து லிபியாவுக்கு புறப்பட்டு சென்றது. போரினால் அங்கு பசி பட்டினியால் வாடும் 10 ஆயிரம் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவியதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.





0 கருத்துகள்:
கருத்துரையிடுக