AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 30 ஜூன், 2012

நோயாளி உளூ செய்வது எப்படி?

தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வது நோயாளி மீது கடமையாகும். சிறு தொடக்கு எனில் உளூ செய்ய வேண்டும். பெருந் தொடக்கு எனில் குளித்து சுத்தம் செய்ய வேண்டும். நோயின் காரணமாக தண்ணீரைப் பயன்படுத்த முடியவில்லை என்றாலோ அல்லது குணமடைய தாமதமாகும் எனும் அச்சத்தினால் தண்ணீரால் சுத்தம் செய்ய முடியவில்லை என்றாலோ தயம்மும் செய்ய வேண்டும்.

தயம்மும் செய்யும் முறை யாதெனில்: சுத்தமான தரையை இரண்டு கைகளால் ஒரு முறை அடித்து அவைகளால் முகம் முழுவதையும் தடவ வேண்டும். பிறகு இரு மணிக்கட்டுகளையும் ஒன்றைக் கொண்டு மற்றொன்றைத் தடவ வேண்டும்.

சுயமாக சுத்தத்தை அவரால் மேற்கொள்ள அவரால் முடியவில்லை என்றால் வேறொருவர் அவருக்கு உளூ அல்லது தயம்மும் செய்து வைப்பார்.

சுத்தம் செய்ய வேண்டிய பகுதிகள் சிலவற்றில் காயம் இருந்தால் தண்ணீரால் அதைக் கழுவ வேண்டும். தண்ணீரால் கழுவுவது தீங்கு அளிக்கும் என்றிருந்தால் கையை தண்ணீரில் நனைத்து காயத்தின் மீது தடவ வேண்டும். அப்படிச் செய்வதனால் தீங்கு ஏற்படும் என்றிருந்தால் அதற்குப் பகரமாக தயம்மும் செய்யலாம்.

சுத்தம் செய்ய வேண்டிய பகுதிகளில் சிலவற்றில் முறிவு ஏற்பட்டு துணி வைத்தோ அல்லது பட்டை வைத்தோ கட்டப்பட்டிருந்தால் அதைக் கழுவுவதற்குப் பதிலாக தண்ணீரால் தடவ வேண்டும். அப்படித் தடவுவது கழுவுவதற்குப் பகரமாகும் என்பதால் தயம்மும் செய்ய வேண்டிய தேவையில்லை
.

மண் சுவர் மீதோ அல்லது புழுதி படிந்துள்ள சுத்தமான பொருள் மீதோ தயம்மும் செய்வது கூடும். பெயின்ட் போன்ற மண் சாராத பொருளால் சுவர் பூசப்பட்டிருந்தால் அதன் மீது புழுதி படிந்திருந்தால் மட்டும் தயம்மும் செய்யலாம்.

மண் சுவரிலோ அல்லது புழுதி படிந்த ஏதேனும் ஒரு பொருளிலோ தயம்மும் செய்ய முடியவில்லை என்றால் ஒரு பாத்திரத்தில் அல்லது கைத்துண்டில் மண்ணை வைத்து அதில் தயம்மும் செய்யலாம்.

அசுத்தங்களை நீக்கி தன் உடலை சுத்தம் செய்வது நோயாளி மீது கடமையாகும். அவரால் இயலவில்லையானால் அப்படியே தொழலாம். அத்தொழுகை நிறைவேறி விடும். திருப்பித்தொழ வேண்டியதில்லை.

சுத்தமான ஆடைகளோடு தொழுவது நோயாளி மீது கடமையாகும். அவருடைய ஆடைகள் அசுத்தமாகி விட்டால் அவற்றைத் துவைப்பதோ அல்லது அவற்றைக் கழைந்து விட்டு சுத்தமான ஆடைகள் அணிவது அவர் மீது கடமையாகும். அது சாத்தியமில்லையானால் அப்படியே தொழலாம். அத்தொழுகை நிறைவேறி விடும். திருப்பித்தொழ வேண்டியதில்லை.

சுத்தமான இடத்தின் மீது தான் நோயாளி தொழ வேண்டும். அவ்விடம் அசுத்தமாகி விட்டால் அதைக் கழுவி சுத்தம் செய்வது அல்லது அதை மாற்றிவிட்டு சுத்தமான பொருளைக் கொண்டு வருவது அல்லது சுத்தமான விரிப்பை அதன் மீது விரிக்க வேண்டும். அவைகள் அனைத்தும் சாத்தியப்படாத பட்சத்தில் அப்படியே தொழலாம். அவரது தொழுகை நிறைவேறிவிடும். திருப்பித்தொழ வேண்டியதில்லை.

சுத்தம் செய்யவில்லை என்பதால் தொழுகையை நேரப்படி தொழாமல் பிற்படுத்துவது நோயாளிக்குக் கூடாது. மாறாக முடிந்தவரை சுத்தத்தைச் செய்து கொண்டு நேரத்துக்கு தொழ வேண்டும். அவரது உடலிலோ உடையிலோ இடத்திலோ அசுத்தம் இருந்து அதைச் சுத்தம் செய்ய முடியவில்லை என்றாலும் சரியே!

பாஸ்போர்ட் பெற புதிய முறை அறிமுகம்


சென்னை: பாஸ்போர்ட் விண்ணபிக்க புதிய முறையை அரசு அறிவித்துள்ளது. புதிதாக பாஸ்போர்ட் விண்ணபிப்போர், இனி சென்னைக்கு வர தேவையில்லை என்று பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.புதிதாக பாஸ்போர்ட் வாங்குபவர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கூறினார். ஆன்லைனில் அல்லாமல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நேரடியாக சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைவாசிகள் அண்ணாநகர், பூக்கடை, அடையாறு காவல்துறையிடம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நேரடியாக சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 27 ஜூன், 2012

வீராணம் ஏரி நீர்மட்டம் குறைகிறது

காட்டுமன்னார்கோவில் : வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இறுதியில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். வீராணம் ஏரி மூலம் 48 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. கடந்த ஆண்டு தேக்கப்பட்ட தண்ணீர் மே மாதம் வரை ஏரியில் நிரம்பி இருந்தது. இதனால் சென்னைக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.

கடுமையான வெயில் மற்றும் தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்காத காரணத்தால் ஏரியில் தேக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைந்தது. தற்போது ஏரியில் 40.10 அடி தண்ணீர் உள்ளது. சென்னைக்கு வினாடிக்கு 38 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோடை காலத்தில் வளர்ப்பதற்காக 1 லட்சம் மீன் குஞ்சுகள் மீன் வளத்துறை சார்பில் விடப்பட்டது. தற்போது ஏரியில் தண்ணீர் குறைந்ததால் மீன்களும் ஆயிரக்கணக்கில் அழிந்து வருகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி தொடர்ந்து நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

2013 முதல் ஒரே நுழைவுத் தேர்வு : ஐஐடி இயக்குநர்கள் ஒப்புதல்


புதுடெல்லி: 2013ம் ஆண்டு முதல் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த ஐ.ஐ.டி இயக்குநர்கள் ஓப்புதல் அளித்துள்ளனர். ஒரே நுழைவுத் தேர்வு முறை வரும் 2013ம் ஆண்டு முதல், செயல்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நுழைவுத் தேர்வு முறைக்கு கான்பூர் ஐ.ஐ.டி எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஐ.ஐ.டி கவுன்சில் கூட்டத்தில், சமரசம் காணப்பட்டது. நுழைவுத் தேர்விற்கு பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் தகுதியாக கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்விற்கு முன் சோதனை தேர்வு நடத்திக் கொள்ள ஐ.ஐ.டி.க்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் பங்கேற்கவில்லை.

செவ்வாய், 26 ஜூன், 2012

மொபைலில் பேசும் வசதியுடன் விரைவில் புதிய விமான சேவை

புதுடில்லி:விமானத்தில் செல்லும்போதும், "மொபைல் போனில்' பேசுவது, உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட புதிய விமானத்தை, பிரிட்டனின் விர்ஜின் நிறுவனம், விரைவில் டில்லியிலிருந்து லண்டனுக்கு இயக்கவுள்ளது. இதுகுறித்து பிரிட்டனின் விர்ஜின் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ரிக்வே கூறியதாவது: தற்போது விமானங்களில் பயணிப்போர், "மொபைல் போனில்' பேச முடியாது.

ஆனால், நாங்கள் புதிதாக, டில்லியிலிருந்து லண்டனுக்கு, அடுத்த மாதம், 11ம் தேதியில் இருந்து இயக்கவுள்ள, ஏ-330 ரக விமானத்தில், "மொபைல் போனில்' பேசும் வசதியை ஏற்படுத்த உள்ளோம். இதற்காக, அந்த விமானத்தில் "ஏரோ மொபைல்' தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தவுள்ளோம். இதன் மூலம், அந்த விமானம், தரையிலிருந்து 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், அதிலிருந்தபடி "மொபைல் போனில்' பேசவும், குறுந்தகவல்களை அனுப்பவும் முடியும். இதுதவிர, தொடு திரை பொழுபோக்கு வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளோம். அந்த விமானத்தில் மேலும்
பல வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஸ்டீவ் ரிக்வே கூறினார். 

காட்டுமன்னார்கோவில் அருகே மேற்கூரை இல்லாத பயணியர் நிழற்குடை

காட்டுமன்னார்கோவில் அருகே மேற்கூரை இல்லாத பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே விளத்தூர் கிராமம். இங்கு பேருந்து நிழற்குடை மேற்கூரையின் தகரம் இல்லாததால் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் போது அவதிப்படுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் பேருந்துகளில் பயணம் செய்வதற்காக பயணிகள் காத்திருப்பதற்காக நிழற்குடைகள் அமைத்துள்ளனர். பெரும்பாலான கிராமங்களில் இந்த நிழற்குடைகளில் ஒரு சிலர் ஆக்கிரமித்து படுத்து உறங்குகின்றனர். சில கிராமங்களில் அமைக்கப்பட்ட நிழற்குடைகள் சேதமடைந்து பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதே போன்று விளத்தூரில் பேருந்து நிழற்குடையின் மேல்பகுதி சேதமடைந்துள்ளது. 
இதனால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரத்தில் சில தடவை மட்டுமே வரும் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் அமரக்கூட முடியாமல் அவதியுறுகின்றனர். 
ஆகவே சேதமடைந்த நிழற்குடையை சீர்செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் வேண்டுகோளாகும்.

திங்கள், 25 ஜூன், 2012

எகிப்திய குடியரசின் முதல் அதிபராக டாக்டர்.மு​ஹம்மது முர்ஸி தேர்வு!


கெய்ரோ:எகிப்திய குடியரசின் அதிபர் தேர்தலில் இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் வேட்பாளரான டாக்டர்.முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றதாக எகிப்து தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நான்கு தினங்களாக நிலவிய சந்தேகங்களுக்கும், புதிருக்கும் இறுதியில் இன்று மதியம் 3.30 மணிக்கு(எகிப்திய நேரம்) தேர்தல் கமிஷனின் தலைமையகத்தில் எகிப்து அதிபர் தேர்தலுக்கான முடிவு அறிவிக்கப்பட்டது.

முஹம்மது முர்ஸி 13.2 மில்லியன் வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் அஹ்மத் ஷஃபீக் 12.3 மில்லியன் வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன் மூலம் முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 8 லட்சம் வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

6 தினங்களாக அதிபர் தேர்தலின் முடிவை அறிய காத்து தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டிருந்த மக்கள் இம்முடிவை ‘அல்லாஹ் அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்ற தக்பீர் முழக்கத்துடன் வரவேற்றனர்.

மகிழ்ச்சி வெள்ளத்தில் எகிப்து!
டாக்டர் முஹம்மது முர்ஸி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து எகிப்து முழுவதும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளது.

அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவை காத்திருந்த எகிப்து மக்கள், முடிவு வெளியானதும் மகிழ்ச்சி
தாங்கமுடியாமல் வீதிகளில் இறங்கி பட்டாசுகளை கொளுத்தியும், வாகனங்களை ஓட்டியும் நள்ளிரவு வரை கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

முஹம்மது முர்ஸியின் பெரிய கட் அவுட்டுகளையும், படங்களையும் ஏந்தியவாறு மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். சில நகரங்களில் அனைத்து சாலைகளும் கொண்டாட்ட பேரணிகளால் நிறைந்திருந்தது. பெண்களும், குழந்தைகளும் உள்ளிட்டோர் வெற்றிப் பேரணிகளில் பங்கேற்றனர்.

ஞாயிறு, 24 ஜூன், 2012

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மருத்துவர்கள் நியமனம்: சுகாதாரத்துறை விளக்கம்


தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள மொத்தம் 835 மருத்துவர் மற்றும் சிறப்பு மருத்துவர் காலிப் பணியிடங்கள் வேலை வாய்ப்பகம் மூலம் பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு நிரப்பிடுவதற்கு 2.1.12 அன்று ஆணை வெளியிடப்பட்டது. 

அவற்றுள் 682 எம்.பி.பி.எஸ். மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 1:5 விகிதாசாரப்படி மருத்துவர்கள் பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டது. அதில் இன சுழற்சி முறைப்படி பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பைச் சார்ந்தவர்களுக்குரிய ஒதுக்கீடு 24 ஆகும். 

முதற்கட்டமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 2448 நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதில் 88 பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் நபர்களின் பெயரும் அடங்கும். 

ஜனவரி 20 மற்றும் 23, 24, 25 ஆகிய தேதிகளில் பணி நியமன கலந்தாய்வு நடத்திட திட்டமிட்டு 09.01.2012 அன்று அனைவருக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இணையதளத்திலும் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து சில முஸ்லீம் சமுதாய மருத்துவர்கள் இணையதளத்திலிருந்த பட்டியலிலுள்ள முஸ்லீம் நபர்களைவிட பதிவு மூப்பு உடையவர்களாக இருந்தால் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகியதைத் தொடர்ந்து, 20.01.2012 அன்று பதிவு தேதியின்படி 122 பிற்படுத்ப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் தவறுதலாக விடுபட்டுள்ளது என்று வேலைவாய்ப்பு அலுவலகத்திருந்து ஓர் பட்டியல் பெறப்பட்டது. 

அவ்வாறு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பின்னர் வழங்கப்பட்ட 122 நபர்களும் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட 88 நபர்களை காட்டிலும் பதிவு தேதியின் அடிப்படையில் முதுநிலை பெற்றவர்கள் என்பதால் தந்தி வாயிலாக கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. 

ஜனவரி மாதம் நடைபெற்ற கலந்தாய்வின்போதே பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்திற்கான ஒதுக்கப்பட்ட 24 காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டது. மேலும், பொது பிரிவின் கீழ் வேலை வாய்ப்பக அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 28 முஸ்லீம் சமுதாயத்தினருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், பணிநியமனக் கலந்தாய்வில் கலந்து கொண்ட 33 பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் (16.11.2010 முதல் 14.12.2011 வரையிலான) பணியில் சேர இடம் தேர்வு செய்ததின் பேரில் காத்திருப்போர் பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே மீதமுள்ள 423 எம்.பி.பி.எஸ். காலி பணியிடங்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 1349 நபர்களின் பட்டியல் பெறப்பட்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் பிற்ப்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினரைவிட முந்தைய தேதியில் (2008, 2009 மற்றும் 11/2010) பதிவு செய்த பிற சமுதாயத்தினர் இடம் பெற்று இருந்தனர். 

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் மருத்துவர்கள் மேற்கூறிய 1349 நபர்களில் பட்டியலில் இருந்தவர்களுக்கு பிறகு பதிவு செய்தவராதலால் அவர்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. முதற்கட்ட பணிநியமன கலந்தாய்விலேயே பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுகத்தினருக்கான இடஒதுக்கீடு (3.5 சதவீதம்) 24 நபர்கள் மற்றும் பொது பிரிவு 28 நபர்களும் ஆக மொத்தம் 52 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

எனவே மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பணி நியமனக் கலந்தாய்வின்போது மற்ற சமுதாயத்தினரைச் சார்ந்தவரை கொண்டு 371 காலிப் பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட்டது. தற்பொழுது இன்னமும் நிரப்பப்பட வேண்டிய காலிப் பணியிடங்கள் 52 ஆகும். 

இவற்றை நிரப்ப மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் கோரப்பட உள்ளது. பெறப்படும் பட்டியலில் பதிவுத் தேதியின் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் நபர்களை உரிய இடத்தில் பொருத்தி பணி நியமனம் மேற்கொள்ளப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.