AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் தோல்வி: 4 ஆண்டுகளில் செலவானது 35% மட்டுமே!

புதுடெல்லி, ஏப்ரல் 29 : இந்தியாவில் மிகவும் பின்தங்கியுள்ள சிறுபான்மை சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக 11-ஆம் ஐந்து ஆண்டுகள் திட்டத்தில் உட்படுத்திய நலத்திட்டங்கள் வீணானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2007-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான திட்ட கால அளவில் சிறுபான்மையினர் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ஒதுக்கப்பட்ட நிதிகளும், நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்களும் பலன் தரும் வகையில் உபயோகப்படுத்தவில்லை என்று இதுக்குறித்து ஆய்வுசெய்த திட்டக்கமிஷன் சிறுபான்மை விவகார ஸ்டியரிங் கமிட்டி உறுப்பினர் கவ்ஹர் ராஸா, ஃபவுண்டேசன் ஃபார் சிவில் லிபர்டீஸ் தலைவர் எம்.ஹிலால், சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் அடங்கிய குழு கூறுகிறது.
11-ஆம் ஐந்தாண்டு திட்டத்தின் கால அளவில் சிறுபான்மை நலனுக்காக 1,400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகள் கழிந்த பொழுது இத்தொகையின் 35 சதவீதம் மட்டுமே(487 கோடி ரூபாய்) செலவழிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து பெருந்தொகை இந்திரா வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட இதர பொதுத் திட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
நிதிகளின் பற்றாக்குறை, திட்டங்களை அமலாக்குவதை கண்காணிக்கும் அமைப்பின் வீழ்ச்சி, இதர தொடர் நடவடிக்கைகள் இல்லாமை, அரசு அமைப்புகளில் வேரூன்றிய வகுப்புவாத காரணிகள் ஆகியன சிறுபான்மை திட்டங்கள் தோல்வி அடைய காரணம் என இதுக்குறித்து ஆய்வுச் செய்த குழு கூறுகிறது. ஆனால், அரசின் ஆர்வமின்மை காரணமாக பெரும்பாலான திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ஆய்வுக்குழு கூறுகிறது.
சிறுபான்மை சமூகங்கள் வசிக்கும், குறிப்பாக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் திட்டமிடப்பட்ட நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தேசம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் எல்லா துறைகளில் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்று சச்சார் கமிட்டி கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து அரசு ஏராளமான சிறுபான்மையினர் நலத்திட்டங்களை அறிவித்தது. ஆனால், இவை 90 சிறுபான்மையினர் வசிக்கும் மாவட்டங்களுடன் ஒதுங்கியது. அதில் பெரும்பான்மையான திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார். இம்மாவட்டங்களில் நிறுவப்பட்ட பள்ளிக்கூடங்கள் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து 10 அல்லது 20 கிலோமீட்டர் தொலைவில் ஆகும்.
கீழ்மட்டத்தில் இத்திட்டங்கள் குறித்து கண்காணிக்கும் அமைப்பு இல்லாமையும், அரசு கட்டமைப்புகளில் ஊடுருவியுள்ள வகுப்புவாத சக்திகளும் சிறுபான்மை நலத்திட்டங்களுக்கு தடையாக மாறின என்று எஸ்.எம்.ஹிலால் கூறுகிறார்.
போதுமான விகிதம் இல்லை என்று கூறி சிறுபான்மை நலத்திட்டங்களுக்கான நிதியை பல்வேறு மாநிலங்கள் செலவழிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளன. மாவட்டங்களை தேர்வுச் செய்வதற்கு பதிலாக பஞ்சாயத்து ப்ளாக்குகளுக்கு நிதியை நேரடியாக அளிக்கவேண்டும் என்றும், நகர பகுதிகளை இத்திட்டங்களில் சேர்க்கவேண்டும் என்றும் ஹிலால் கோரிக்கை விடுத்துள்ளார்.
11-வது ஐந்தாண்டு திட்டத்தில் எஸ்.சி பிரிவினருக்கு தனிநபர் விகிதம் 1,228 ரூபாய் ஆகும். எஸ்.டி பிரிவினருக்கு தனி நபர் விகிதம் 1,450 ரூபாய் ஆகும். முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு தனிநபர் விகிதம் ரூ.138 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பத்து மடங்கு அதிகரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைபாடுகளை சுட்டிக்காட்டி இக்குழுவினர் திட்டக்கமிஷன் உறுப்பினர்களை சந்தித்தனர். இதற்கு தீர்வு காண்பதற்கான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் மற்றும் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கவேண்டிய திட்டங்களின் வழிகாட்டுதல் ஆவணம் ஆகியவற்றை திட்டக் கமிஷனுக்கு இக்குழுவினர் சமர்ப்பித்துள்ளனர்.

தினத்தந்திக்கு தமுமுக மறுப்பு


J. S. ரிபாயி (தலைவர், தமுமுக)
28/04/2012

பெறுநர்:
ஆசிரியர் தினத்தந்தி சென்னை

அன்புடையீர், தங்கள் பணி சிறக்க பிராத்திக்கிறோம்.

எளிய தமிழர்களின் இனிய குரலாக வெளிவரும் தினத்தந்தி குடும்பத்துக்கும், எமக்கும் இடையில் ஆழமான உறவு உண்டு. அய்யா. ஆதித்தனார் காலம் தொட்டே அது பிரிக்க முடியாத பெரும் உறவாக வளர்ந்து வருகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களும், தலித் மக்களும், பலகீனமான சிறுபான்மை சமூக மக்களும் தங்களின் தினசரி பொது அறிவை வளர்க்கும் அறிவுக்கண்ணாடியாக தினத்தந்தியை பார்க்கிறார்கள்.
தினத்தந்தியின் சிறப்பே, அது யாரையும் காயப்படுத்தாத அறிவாயுதம் என்பதுதான்.
இந்நிலையில், ஏப்ரல் 28-2012 அன்று தினத்தந்தியில் வெளியான தலையங்கம் எமக்கு அதிர்ச்சியை அளித்தது.
இந்தியாவில் வாழும் 20 கோடி இந்திய முஸ்லிம்களையும், ஏனைய சிறுபான்மையினரையும் காயப்படுத்தும் வகையில் சில வாசகங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் எழுதப்பட்டுள்ளது வருத்ததிற்குரியது. நமது தினத்தந்தி பத்திரிக்கையிலா இப்படி? என ஒரு கனம் திகைக்க வேண்டி வந்தது.
அது குறித்து சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறோம்.
இந்திய முஸ்லிம்களில் 99 சதவீதம் பேர் இந்த மண்ணின் புதல்வர்கள். அவர்கள் வேறு தேசங்களிலிருந்து வந்தவர்கள் அல்லர். சமூக நீதியையும், மனித உரிமைகளையும், சமத்துவத்தையும் பெற வேண்டி இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றவர்கள். அவர்கள் இந்தியாவில் பெறும் சில சலுகைகள் என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையாகும். அரசு வழங்கும் சலுகைகளில் 50 சதவீதம் கூட அவர்கள் முழுமையாக பெற முடியவில்லை என்பதை அரசு புள்ளி விவரமே கூறுகிறது. முஸ்லிம்கள் கல்வி வேலைவாய்ப்புகளில் - இடஒதுக்கீட்டில் கூட தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே அனுபவிக்கிறார்கள். அவர்களது வாழ்வு நிலை தலித்துகளின் நிலைகளை விட மோசமாக இருப்பதாக மத்திய அரசு நியமித்த நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை தெளிவாக அறிவிக்கிறது.
தங்களுக்கு கிடைக்கும் உரிமைகள், சலுகைகளை விட இம்மண்ணில் வாழும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களோடும் அமைதியோடும், நல்லிணக்கத்தோடும் வாழ்வதையே பேரின்பமாக கருதுகிறார்கள்.
இந்நிலையில் பாகிஸ்தானில் வாழும் எமது தொப்புள் கொடி உறவான சிறுபான்மை இந்துக்கள் சந்திக்கும் இன்னல்களை குறித்து அத்தலையங்கம் கவலை தெரிவித்தது நியாயமே. அதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.
சிறுபான்மை சமூகங்கள் எங்கு, எந்த நாட்டில் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பதே எமது நிலைபாடாகும். இந்தியாவில் முஸ்லிம்கள், இலங்கையில் தமிழர்கள், பாகிஸ்தானில் இந்துக்கள், எகிப்தில் கிறிஸ்தவர்கள் என உலகமெங்கும் வாழும் சிறுபான்மையினர் எமது சொந்தங்கள் ஆவார்கள். அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் துடைக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலையாகும்.
பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பும், வழிபாட்டு உரிமைகளும், வாழ்வுரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்ற அந்நாட்டின் உச்சநீதிமன்ற கருத்தை நாங்களும் உறுதியாக வழிமொழிகிறோம். அது அவர்களது உரிமைகளாகும்.
ஆனால், அவர்களின் உரிமைக்காக பரிந்து பேசுகிறோம் என்ற பெயரில் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்கள் அரைகுறையாக அனுபவிக்கும் சில சலுகைகளையும், நியாயமான உரிமைகளையும் கோடிட்டு காட்டி தலையங்கம் வரைவது ஆரோக்கியமான ஒன்றா? என்பதை நடுநிலை நாளேடான எமது தினத்தந்தி குடும்பத்தாரின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறோம்.
பாகிஸ்தான் ஒரு மதச்சார்புள்ள நாடு. ஆனால் இந்தியா ஒரு மதச்சார்பற்ற உயரிய நாடு. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.
1992 டிசம்பர் 6 ஆம் நாளில் இந்தியாவில் பாபர் மசூதி தகர்க்கப்பட்டபோது, அதன் எதிரொலியாக பாகிஸ்தானில் உள்ள மதவெறியர்கள் சிறுபான்மை இந்துக்களின் கோயில்களை சேதப்படுத்தினார்கள்.
ஆனால், பாகிஸ்தான் அரசு இடிக்கப்பட்ட கோயில்களை புனரமைத்து பாஜக தலைவர் அத்வானியை அழைத்து திறந்து வைத்ததை உலகம் அறியும். ஆனால் பாபர் மசூதியை 100 நாட்களில் மீண்டும் கட்டித்தருகிறோம் என்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அறிவித்தது என்னவாயிற்று என்பதும் நமக்கு தெரியும்!
இறுதியாக ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்தியா-பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் சில சுயநல அரசியல்வாதிகளால் கூறுபோடப்பட்டபோது, பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்ற முஹம்மது அலி ஜின்னா, இந்திய முஸ்லிம்களின் தலைவராக திகழ்ந்த காயிதே மில்லத்திடம் “உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்” என கேட்டபோது, “எங்களுக்கு நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கொடுங்கள், அதுபோதும்” என்றார். இது வரலாற்று ஆதாரம்.
அதுவே எமது நிலையாகும். இதை எமது உறவுக்கார நாளேடான தினத்தந்தி ஆசிரியர் குழுவுக்கும் நினைவூட்டுகிறோம்.
இப்படி ஒரு தலையங்கம் கவனக்குறையாக கூட எழுதப்பட்டிருக்கலாம். ஒரு மருத்துவர் கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்வது எவ்வளவு ஆபத்து என்பதை எப்படி உணர்ந்திருக்க வேண்டுமோ அதே போன்ற பொறுப்பு பத்திரிக்கை சகோதரர்களுக்கும் உண்டல்லவோ? நீங்கள்தானே ஜனநாயகத்தின் விழிகளாகவும், செவிகளாகவும் இருக்கிறீர்கள். அந்த உரிமையால்தான் இதை சுட்டிக்காட்டுகிறோம்.
அதே நேரம் இந்த ஒன்றினால் நமது உறவு பாதிக்காது. பாதிக்கவும் விடக்கூடாது. அப்பொறுப்பு உணர்வு நம் அனைவருக்கும் உண்டு என்பதை ஒருவருக்கொருவர் உரிமையோடு புரிந்து கொள்வோம்.

நன்றி,

தோழமையுடன்,
J.S. ரிபாயி

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

50 ஆண்டுகால மஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதமரின் திமிர் அறிக்கை!


கொழும்பு:இலங்கை தம்புள்ளை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் வணக்கங்களில் ஈடுபட்ட மஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அந்நாட்டு பிரதமர் டி.எம்.ஜெயரத்னா திமிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். இவரது மோசடி அறிக்கைக்கு அரசில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் பகிரங்கமாக எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
60 ஆண்டுகள் பழமையான மஸ்ஜிதை அகற்றும் முயற்சியை நிறுத்தாவிட்டால் சட்டரீதியான பிரச்சனைகள் எழும் என்று நீதித்துறை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை தம்புள்ளையில் உள்ள மஸ்ஜித் மீது வெடிக்குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் மறு நாள் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் தொழுகைக்காக சென்றபோது புத்த பிக்குகள்(சாமியார்கள்) அராஜகமாக தடுத்தனர். ‘மஸ்ஜிதை மூடாவிட்டால் இடிப்போம்’ என மிரட்டல் விடுத்தனர்.
தம்புள்ளை பகுதி, புத்தர்களின் புனித இடம் என்று கடந்த 1982-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. புத்தர்களின் புனித இடமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் பிற மத வழிபாட்டுத் தலங்கள் ஏதும் கட்டப்படக் கூடாது; இங்கு அனுமதியில்லாமல் மஸ்ஜித் கட்டப்பட்டிருக்கிறது என்று புத்த பிக்குகள் திமிர்த்தனமாக கூறிவருகின்றனர்.
ஆனால், மஸ்ஜித்  50 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாகவும், அது சட்டப்பூர்வமானது என்றும் முஸ்லிம்கள் தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த போலீஸார், புத்த பிக்குகளை கலைந்து போகச் சொல்வதற்குப் பதிலாக, மஸ்ஜிதிலிருந்து வெளியேறிவிடுமாறு முஸ்லிம்களிடம் கூறியிருக்கின்றனர். இதன் பிறகு மஸ்ஜித் மூடப்பட்டு, அங்கு போலீஸ் காவல் போடப்பட்டது.
இதையடுத்து, மூத்த அமைச்சர் ஏ.எச்.எம். ஃபவ்ஸி மற்றும் துணை அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் தம்புள்ளையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மஸ்ஜிதை திறப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.
இந்நிலையில், மத விவகாரங்களுக்கான அமைச்சரும் பிரதமருமான ஜெயரத்னா, கொழும்பு நகரில் முஸ்லிம் தலைவர்களுடனான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம பேசிய அவர், மஸ்ஜிதை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு முஸ்லிம் தலைவர்கள் ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், பிரதமரின் இந்தக் கருத்தை அமைச்சர் ஃபவ்ஸி மறுத்திருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தாம் கலந்து கொண்டதாகவும், மஸ்ஜிதை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இதை மேற்கு மாகாண ஆளுநர் ஆலவி மெளலானா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் தம்புள்ளை நகரில் உள்ள ரஜமஹா விகாரையின் புனிதப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை வரும் 6 மாதங்களுக்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டுமென்று தம்புள்ளையில் நேற்று(திங்கட்கிழமை) நடந்த கூட்டமொன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் வரும் 6 மாதங்களுக்குள் புனித பிரதேசம் என்று கூறப்படும் பகுதியிலுள்ள சகல சட்ட விரோதமான கட்டடங்களும் அகற்றப்படும் என்று தீர்மானிக்கப்பட்டதாக ரஜமஹா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவே சுமங்கள தேரர் பிபிசியிடம் கூறியுள்ளார்.
தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுவது பற்றிய தீர்மானத்தை பள்ளிவாசல் நிர்வாகமும் முஸ்லிம் மத தலைவர்களும் பிரதேச மக்களுமே தீர்மானிக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா.

திங்கள், 23 ஏப்ரல், 2012

பத்தாம் வகுப்பு தேர்வு இன்றுடன் முடிந்தது

பத்தாம் வகுப்பு தேர்வு இன்று முடிந்தது. இதனால் கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக இருந்த மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த 4ம் தேதி தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 6 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 11 லட்சத்து 44 ஆயிரம் மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் நடந்த முதல் தேர்வு என்பதால், கேள்விகள் எப்படி இருக்குமோ என்ற பயத்தில் மாணவர்கள் இருந்தனர். தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 3,033 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வில் கணக்கு பாட தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். ஆங்கில தேர்வின் போது பிட் அடித்த 16 பேர் பிடிப்பட்டனர். திருவண்ணாமலையில் தனியார் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆசிரியர்களே பிட் வழங்கிய சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு பள்ளி ஆசிரியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்று வரலாறு மற்றும் சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுடன் 10ம் வகுப்பு தேர்வு முடிந்தது. இதனால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஒரு மாத விடுமுறைக்கு பின்னர் ஜூன் 1ம் தேதி பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காட்டுமன்னார் கோவிலில் திமுக அதிமுக மோதல் : போலிஸ் தடியடி

காட்டுமன்னார் கோவில்:காட்டுமன்னார் கோவிலில் திமுக- அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்க போலிஸ் தடியடி நடத்தியது. பேருந்து நிலையம் அருகே இரு கட்சியையும் சேர்ந்த 200க்கும் மேற்ப்பட்டோர் மோதலில் ஈடுபட்டனர். மோதலைத் தடுக்க போலிஸ் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சரை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரினால் பேரூராட்சித் தலைவர் எம்ஜிஆர்தாசன் வீடு தாக்கப்பட்டதில் பொருட்கள் சேதமடைந்தன.  பேரூராட்சித் தலைவர் வீடு தாக்கப்பட்டதால் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

ரூபாய் மதிப்பு தொடர் சரிவு

புதுடெல்லி : சர்வதேச சந்தையில் ரூபாய் மதிப்பு மீண்டும் சரிந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு நேற்று ரூ.52 ஆக சரிந்தது. இது கடந்த 14 வாரங்களுக்கு முன்பிருந்த நிலையாகும். கடந்த ஆண்டின் பிற்பாதியில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தது. டிசம்பர் மாதத்தில் அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ.54.30 ஆக சரிந்தது. 

அதன் பிறகு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக ரூபாய் மதிப்பு படிப்படியாக அதிகரித்து, டாலர் ரூ.50க்கு கீழ் சென்றது. கடந்த சில வாரங்களாக மீண்டும் சரிய தொடங்கியுள்ளது. நேற்று ரூ.52 ஆக சரிந்தது. மேலும் தொடர்ந்து சரிந்தால், இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பெயர் சேர்த்தல், நீக்கம் மட்டும் உண்டு புதுமண தம்பதிகளுக்கு ரேஷன் கார்டு கிடையாது

புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.  தமிழகம் முழுவதும் 1.97 கோடி ரேஷன் கார்டு புழக்கத்தில் உள்ளது. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க, தமிழக அரசு பயோமெட்ரிக் தொழில் நுட்பத் துடன் கூடிய புதிய கார்டுகள் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக கார்டுதாரர்களின் கண் கருவிழிப்படலம், விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இதற்கு இப்போதைக்கு போதிய அவகாசம் இல்லை என்பதால், தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் ஆயுள் காலத்தை நடப்பு ஆண்டு முழுவதற்கும் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

கார்டு புதுப்பிக்கும் பணி கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் முடிய நடந்தது. இந்நிலையில், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கார்டு வழங்குவதற்கு ஏதுவாக, இப்போதைக்கு புதுமண தம்பதிகளுக்கு மட்டும் புதிய ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டாம் என கூட்டுறவு மற்றும் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 
ரேஷன் கார்டு தரமறுக்கும் அரசு உத்தரவால் புதுமண தம்பதிகள் பாஸ்போர்ட் பெறுவது முதல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது, புதிய காஸ் இணைப்பு பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு மற்றும் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது: புதுமண தம்பதிகள் புதி தாக ரேஷன் கார்டு பெற வேண்டுமானால், ஏற்கனவே பெற்றோரது ரேஷன் கார்டில் உள்ள தங்கள் பெயர்களை நீக்கம் செய்யப்பட்டதற்கான சான்றிதழ் பெற்று, விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் சரிதானா என்பதை அதிகாரிகள் சரிபார்க்க போதிய அவகாசம் இல்லை. பயோமெட்ரிக் ரேஷன் கார்டுகள் இந்தாண்டு இறுதிக் குள் வழங்குவதற்காக, வீடு வீடாக கார்டுதாரர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்யும் பணி வரும் மே மாதத்தில் துவங்க உள்ளது. அதனால் புதுமண தம்பதிகளுக்கு புதிய கார்டுகள் வழங்குவதை நிறுத்தி வைக்கும்படியும் வழங்கல் துறை வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

வியாழன், 19 ஏப்ரல், 2012

அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்க நிபந்தனைகள் தேர்தல் கமிஷனின் விதிமுறைகள்


அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதற்கு நிரந்தர சின்னம் தேர்தல் கமிஷனால் ஒதுக்கப்பட்டு வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
அதன்படி, ஒரு கட்சிக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால், அந்த கட்சி சட்டசபை தேர்தலில் 6 சதவீத ஓட்டுகளை பெற்று இருப்பதுடன், குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்று, தேர்தல் கமிஷன் நிபந்தனை விதித்து உள்ளது.
தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்குவதற்காக தேர்தல் கமிஷன் விதித்துள்ள இந்த விதிமுறைகளை எதிர்த்து, கடந்த 2008-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
தே.மு.தி.க. மனு
தமிழ்நாட்டில் தே.மு.தி.க., விடுதலைச்சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி, மற்றும் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ், நடிகர் சிரஞ்சீவியால் தொடங்கப்பட்ட பிரஜா ராஜ்ஜியம் உள்ளிட்ட 15 கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
தே.மு.தி.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனுவில், தேர்தலில் தங்கள் கட்சி 8 சதவீத ஓட்டுகள் பெற்று இருந்தபோதிலும், இரு சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற முடியாததால் அங்கீகாரம் மறுக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது.
விதிமுறைகள் செல்லும்
அல்டமாஸ் கபீர், எஸ்.எஸ்.நிஜ்ஜார் மற்றும் செலமேஸ்வர் ஆகிய 3 நீதிபதிகளை கொண்ட `சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச்’ இந்த வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறியது. அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக தேர்தல் கமிஷன் வகுத்துள்ள விதிமுறைகள் செல்லும் என்று, நீதிபதிகள் அல்டமாஸ் கபீர் மற்றும் நிஜ்ஜார் ஆகிய இரு நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
மற்றொரு நீதிபதியான செலமேஸ்வர், இந்த தீர்ப்பை ஏற்காததுடன் அதற்கு எதிரான கருத்தை தெரிவித்து இருக்கிறார். இருந்தபோதிலும் பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தின் அடிப்படையில், தேர்தல் கமிஷனின் விதிமுறைகள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சினை குறித்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
நியாயமான விதிமுறைதான்
“அங்கீகாரத்தை பெறுவதற்காக ஒரு கட்சி தனது தகுதியை நிரூபித்தாக வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் கமிஷன் ஒரு அளவீட்டை நிர்ணயித்து உள்ளது. இது நியாயமான பொருத்தமான விதிமுறைதான். இதன்மூலம் அங்கீகாரம் பெற்ற கட்சியால் நிரந்தர சின்னம் உள்ளிட்ட அனைத்து பயன்களையும் பெற முடியும்” என்று பெரும்பான்மை தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில், மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி செலமேஸ்வர், மற்ற இருவரின் கருத்தை ஏற்கவில்லை. “அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கான விளக்கத்தில் விவேகமான தொடர்பு இல்லை” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
நம்பரை வைத்து தீர்மானிப்பதா?
“ஒரு ஜனநாயக அமைப்பில் பெரும்பான்மையினர் ஆட்சியில் சிறுபான்மையோரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை சொல்ல இந்த கோர்ட்டு தவறிவிட்டது என்பதே எனது கருத்து என்றும், அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
“நம்பரை மட்டும் அடிப்படையாக வைத்து ஜனநாயகத்தை தீர்மானிப்பதாக இருந்தால், உலகின் மிகப் பெரிய ஜனநாயகவாதியாக ஹிட்லர் இருந்து இருப்பார்” என்றும் நீதிபதி செலமேஸ்வர், தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.