AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 25 ஜனவரி, 2012

குடியரசு தின வாழ்த்துச் செய்தி


மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் குடியரசு தின வாழ்த்துச் செய்தி:
குடியரசு தின வாழ்த்துக்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டின் அரசியல் நிர்ணயச் சட்டம் நடைமுறைக்கு வந்ததைக் கொண்டாடும் தினமாக ஆண்டுதோறும் குடியரசு தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம்.
பல்வேறு மத, சாதி, மொழி, கலாச்சார வேறுபாடுகளைக் கொண்டுள்ள நமது நாட்டில் சமத்துவத்தையும் சமயச்சார்பின்மையையும் சகிப்புத்தன்மையையும் நிலைநாட்டி அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் வகையில் நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அமைந்துள்ளது. உலகில் உள்ள ஏனைய நாடுகளுக்கு ஒரு எடுத்துக் காட்டாக நமது அரசியலமைப்புச் சட்டம் அமைந்துள்ளது.

அரசியல் சாசனச் சட்டம் பறைசாற்றும் இந்த நல்ல பண்புகளைக் கடைப்பிடித்து நாடு ஒற்றுமையுடன் முன்னேறுவதற்காக இந்த தினத்தில் நாம் உறுதி எடுத்துக் கொள்வோமாக.

(எம்.ஹெச். ஜவாஹிருல்லா)

கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் 8-ந்தேதி தொடங்கும்


கடலூர், ஜன.25-
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் வருகிற 8-ந்தேதி தொடங்கும் என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.
பிளஸ்-2 செய்முறைத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற மார்ச் மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. பொதுத்தேர்வுகளுக்கு முன்னால் செய்முறைத்தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி செய்முறைத்தேர்வுகள் அடுத்த மாதம்(பிப்ரவரி) 2-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடத்தப்படுகிறது.
ஆனால் கடலூர் மாவட்டத்தில் `தானே’ புயல் தாக்கியதில் சுமார் 400 பள்ளிக்கூடங்கள் சேதம் அடைந்ததால் கடந்த 17-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. அதனால் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
முதன்மை கல்வி அதிகாரி
இது பற்றி கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அந்தோணி ஜோசப் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் `தானே’ புயல் தாக்கியதன் காரணமாக பிளஸ்-2 செய்முறைத்தேர்வுகளை 6 நாட்கள் தாமதமாக தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 செய்முறைத்தேர்வுகள் பிப்ரவரி மாதம் 8-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடத்தப்படும்.
புயலால் சேதம் அடைந்த பள்ளிகளை சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வுக்கு முன்னதாக அனைத்து வகுப்பறைகளும் சீரமைக்கப்பட்டு விடும்.
இவ்வாறு அந்தோணி ஜோசப் கூறினார்.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய புதிய தலைவரின் அறிவிப்புகள் - மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படையாக அமையும் என்று தேர்வாணையத்தின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள திரு. நட்ராஜ் அறிவித்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. கடந்த சட்டபேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் இளைஞர்கள் பெரிதும் உழைத்து எழுதும் தேர்வுகள் வெளிப்படையாக அமைய வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன். தேர்வு முடிந்தவுடன் அதற்கான விடைகளும் வெளியிடப்பட வேண்டுமென்றும், குறைந்த கட்டணம் வசூலித்து விடைத்தாளும் தேர்வாளர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். இந்த கோரிக்கைகளை ஏற்று தேர்வு முடிந்தவுடன் விடைகள் வெளியிடப்படும் என்றும் விரும்பமுள்ளவர்களுக்கு விடைதாள் (Answer sheet) அளிக்கப்படும் என்றும் தலைமை ஏற்றவுடன் திரு. நடராஜ் அறிவித்துள்ளதை பாராட்டுவதுடன் அவருக்கு நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேபோல் எழுத்து தேர்வும், நேர்முக தேர்வும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என டி.என்.பி.எஸ்.சி. யின் புதிய தலைவர் அறிவித்துள்ளதையும் வரவேற்கிறேன்

நாட்டை விட்டு வெளியேறுங்கள் தப்லிக் ஜமாத்திற்கு இலங்கை அரசு அதிரடி உத்தரவு !


இலங்கையில் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மதக்குழுவினரை இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் மத்தியில் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுமாறு பிரச்சாரம் செய்து வரும் தப்லீக் ஜமாத் என்ற குழுவினர் கொழும்பில் தங்கி மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கொழும்பிலுள்ள கிராண்ட்பாஸிலுள்ள தப்லீக் ஜமாத்தின் தலைமையகத்தில் தங்கியிருந்தனர்.

வியாழக்கிழமை தலைமையகம் வந்த காவல்துறையினர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு உள்ளிட்ட 161 நாடுகளிலிருந்து வந்துள்ள தப்லீக் ஜமாத்தைச் சார்ந்தவர்கள் அனைவரையும் வெளியேறுமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர்.

”சுற்றிப்பார்ப்பதற்கான விசாவில் வந்து வேறு எந்த வேலைகளிலும் ஈடுபடக்கூடாது என ஆணை இருப்பதால் இவர்கள் வெளியேறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக” குடிவரவு அதிகாரி சூலானந்த பெரேரா தெரிவித்தார். தப்லீக் ஜமாத்தினரைச் சார்ந்த நிர்வாகிகள் இதனை அமைச்சர் பௌஸியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ”இந்தப் பிரச்னையை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சேயிடன் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக” இலங்கை ஜமாஅத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

மேற்கு மாகாண ஆளுநர் அலவி மௌலானா தெரிவிக்கையில், ”தப்லீக் ஜமாத் என்பது முஸ்லிம்களிடையே மட்டும் இஸ்லாமிய ஒழுக்கங்களை கடைப்பிடிக்க வலியுறுத்தும் ஒரு அமைப்பு. அதற்கு எதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை” என்று கூறினார்.

High Blood Pressure இருக்கிறதா ? கவலை வேண்டாம்!! – ஆராய்ச்சி தகவல்


தினமும் ஒரு துண்டு பூண்டு சாப்பிடுங்கள் குருதி அழுத்தமெல்லாம் காணாமலேயே போய் விடும்.
இப்படிச் சொல்லியிருப்பது ஆஸ்திரேலியாவின் ஆராய்ச்சி முடிவு ஒன்று. பழங் காலத்திலிருந்தே பூண்டு சாப்பிடுவதை ஊக்கப்படுத்தி வந்தது தான் நமது பாட்டி வைத்தியம். இப்போது அது மருத்துவ அங்கீகார முலாம் பூசப்பட்டு அறிவியல் அறிக்கையாக வந்திருக்கிறது.
பாட்டிகளும், தாத்தாக்களும் சொன்ன வைத்தியத்தை மறந்து விட்டிருந்த நமது உதாசீனத்துக்குக் குட்டு வைத்திருக்கிறது இந்த ஆராய்ச்சி என்று கூட சொல்லலாம்.
இன்றைக்கு வினியோகிக்கப்படும் உயர் குருதி அழுத்தத்துக்கான மாத்திரைகளை விட அதிக பலனளிக்கக் கூடியது இந்த பூண்டு வைத்தியம் என்பது குறிப்பிடத் தக்கது.
உலகெங்கும் பல கோடி பேர் மிகச் சாதாரணமாகப் பாதிப்புக்கு உள்ளாகும் நோய் உயர் குருதி அழுத்தம். உயிருக்கே கூட உலை வைக்கும் இந்த நோயை பெரும்பாலானோர் ஒரு பொருட்டாகக் கூட எண்ணுவதில்லை என்பது தான் உறைய வைக்கும் உண்மை.
ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த விரிவான ஆராய்ச்சி சுமார் ஐந்து மாத காலம் தொடர்ச்சியாக நடந்திருக்கிறது. பல்வேறு உலக ஆய்வுகளின் முடிவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் முடிவாகத் தான் பூண்டு, பல உயர் குருதி மாத்திரைகளை விட வலிமை வாய்ந்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியின் முதுகெலும்பான மருத்துவர் கேரின் ரெய்ட் இதைக் குறித்துக் கூறுகையில், உயர் குருதி அழுத்தத்தை மருந்துகளால் குணப்படுத்த முடியுமோ இல்லையோ, பூண்டின் மூலம் குணப்படுத்திவிடலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.
உயர் குருதி அழுத்தமா ? இனிமேல் மருத்துவமனைகளை நோக்கி ஓடாமல் சமையலறையை நோக்கி ஓடுங்கள். சமையலறையிலேயே அதற்குரிய மருந்து இருக்கிறது !!

திங்கள், 23 ஜனவரி, 2012

விழுப்புரத்தில் நடைபெற்ற கூடங்குளம், கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பு பொதுக்கூட்டம்


21/01/2012 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கூடங்குளம், கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில், மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது. அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கினய்ப்பாளர் முனைவர். சுப. உதயகுமார், மதிமுக பொருளாளர் டாக்டர். மாசிலா மணி, விடுதலை சிறுத்தை பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.







ஞாயிறு, 22 ஜனவரி, 2012

பொதுப்பணித்துறை நடவடிக்கை வீராணம் ஏரியில் நீர் தேக்கும் பணி தீவிரம்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்கும் பணியில் பொதுப்பணித்
துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவிலில் உள்ள மிக பெரிய ஏரி வீராணம் ஏரி. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக நேரடியாக தண்ணீர் வரும். மழை காலங்களில் செங் கால் ஓடை வழியாக தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். ஏரியின் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரியை சுற்றி 34 மதகுகள் மூலம் பாசனம் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தை முன்னிட்டு ஏரியின் நீர் மட்டத்தில் 45 அடி தண்ணீர் தேக்கி வைப்பர். இதில் இருந்து பாசனத்திற்கும், சென் னைக்கு குடிநீரும் செல்கிறது. மழை காலங்களில் பெய்யும் மழைநீர் பல பகுதிகளில் இருந்து ஏரிக்கு வரும். இதன் காரண மாக ஏரியை சுற்றியுள்ள மதகுகள் திறக்கப்படும்.
இந்நிலையில் கோடை காலம் தொடங்க உள்ளதால் ஏரியில் இருந்து சென் னைக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி அனுப்புவதற்கு ஏதுவாக ஏரியின் முழு கொள்ளளவான 47.50 கன அடி தண்ணீரை தேக்கும் முயற்சியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதற் கட்டமாக பொதுப்பணி துறை அலுவலர்கள் ஏரியில் முழுமையாக தண்ணீர் தேக்கும் போது மதகுகள் வழியாக வெளியேறாமல் இருக்க, ஏரியினை சுற்றி பார்வையிட்டு மணல் மூட்டைகளை தயார் செய்து, நீர்கசிவு ஏற்படும் இடங்களில் வைத்து வருகின்றனர்.
தற்போது ஏரியில் 45.10 அடி தண்ணீர் உள்ளது. வடவாறு வழியாக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதிலிருந்து பாசனத்திற்கு 500 கனஅடியும் சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 21 கனஅடியும் அனுப்பப்படுகிறது.

மருத்துவ பயன்கள் நிறைந்த பலா மரம்!!


மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் இயற்கையின் கொடையே எனலாம். அதோடு, மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களையும் ஆரோக்கியத்தோடு வாழவைக்கும் தன்வந்திரியாகவும் திகழ்கிறது.
இந்த வகைகளில் அதிக மருத்துவப் பயன் கொண்ட பலா மரம் பற்றி விரிவாக அறிவோம். பலாப்பழத்தை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. அதன் சுவையை நினைத்தாலே நாவில் நீர் சுரக்கும்.
பலா இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் மரமாகும். இதில் ஆசினிப்பலா, கூழைப்பலா, வருக்கைப் பலா என பல வகைகள் உண்டு.
பலாவின் இலை, காய், பழம், விதை, பால், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இதனை சக்கை, பலவு, பலாசம், வருக்கை, ஏகாரவல்லி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
பலா இலை
பலா இலையை காயவைத்து இடித்து பொடியாக்கி அதனை தேனில் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப்புண் ஆறும். வாயுத் தொல்லைகள் நீங்கும். பலா இலைகளை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் ஆறும். பல்வலி நீங்கும். பலா இலையின் கொழுந்தை அரைத்து சிரங்கின் மீது பூசினால் சிரங்கு விரைவில் ஆறும்.
பலா பிஞ்சு
பலா பிஞ்சுகளை எடுத்து சுத்தப்படுத்தி அதனுடன் தேவையான அளவு வெள்ளைப்பூண்டு, மிளகு, இலவங்கப்பட்டை, தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், அதீத தாகம் தணியும், நீர்ச்சுருக்கு, நெஞ்செரிச்சல் குணமாகும். உடலுக்கு வலு கொடுக்கும். வாத, பித்த, கபத்தை சீராக வைத்திருக்கும். நரம்புத் தளர்வைப் போக்கும். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். அதிகமாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
பலாப்பழம்
முக்கனிகளில் இரண்டாவது கனியாக பலாப்பழம் உள்ளது. மிகுந்த இனிப்புச் சுவையுடையது. இரத்தத்தை விருத்தி செய்யும். உடலுக்கு ஊக்கமளிக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வூட்டும். பலாச்சுளைகளை தேனில் நனைத்து சாப்பிட்டால் நன்கு சீரணமாகும்.
பழவகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது பலாப்பழம் தான் . இந்த பழம் பச்சை நிறத்திலான கரடு முரடான மேல் தோலை கொண்டதாக அமைந்திருக்கும் . இதன் தோல் உறுதியாகவும் அதன் அடிப்பாகத்தில் சுளைகள் நிறைந்து காணப்படும் .
பலாச்சுளைகள் ஒவ்வொன்றும் நரம்புகள் போன்ற சடைகளின் இடையில் பதிந்திருக்கும் . பலாப்பழத்தின் சுவை மரத்துக்கு மரம் வேறுபாடு உடையதாக இருக்கும் . சில பலாப்பழ சுளைகள் தேன் போன்று இனிப்பாகவும் , சில பழங்கள் இனிப்பு குறைந்தவையாகவும் இருக்கும் .
மஞ்சள் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பலாப்பழ சுளைகள் காணப்படும் . பழுத்த , நல்ல பழம் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது பலாப்பழத்தில் . உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும் .நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது . எதுவும் அளவுடன் சாப்பிட வேண்டும் . அதுதான் உடம்புக்கு நல்லது .
பலாக் கொட்டை
பலாப்பழம் இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால் சிலர் பழத்தை அதிகம் சாப்பிட்டு, வயிற்றுப் பொருமலால் அவதிப்படுவர். அதற்கு ஒரு பலாக்கொட்டையை மென்று சாறை மட்டும் விழுங்கினால் உடனே வயிற்றுப் பொருமல் நீங்கும். பலாக் கொட்டைகளை சுட்டும், அவித்தும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும். வாயுத் தொல்லைகளை நீக்கும். பலாமரத்தின் பயன்களை முழுமையாகப் பெற்று நீண்ட ஆரோக்கியம் பெறுவோம்.