AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 22 செப்டம்பர், 2011

ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் ( International Union of Muslim Women ).


ஆமினா அசில்மி, இந்த பெயரை கேட்டாலே இவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு புது உற்சாகம் பிறக்கும். ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்ட பிறகு கடந்த 33 ஆண்டுகளாக இவர் செய்து வரும் இஸ்லாமிய சேவைகள் அளப்பறியது. சொல்லி மாளாதது. பல முஸ்லிம்களுக்கு இவருடைய வாழ்கை பயணம் ஒரு பாடம். அதைத்தான் இங்கு காண இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.
"நான் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். இஸ்லாம் என்னுடைய இதயத்துடிப்பு. இஸ்லாம் என்னுடைய பலம். இஸ்லாம் இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. அல்லாஹ், அவனுடைய மகத்தான கிருபையை என்னிடம் காட்டாவிட்டால் என்னால் வாழ முடியாது" ----- ஆமினா அசில்மி
ஆமினா அசில்மி அவர்கள் கிறிஸ்துவ பின்னணியில் (Southern Baptist) இருந்து வந்தவர், தன் கல்லூரி காலங்களில் ஒரு மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர், பல விருதுகளை பெற்றவர்.
ஒரு கணினி கோளாறு இவருடைய வாழ்க்கையை திருப்பி போட்டது.
அது 1975ஆம் ஆண்டு. முதன் முதலாக ஒரு வகுப்புக்கு முன்பதிவு செய்ய கணினி பயன்படுத்திய நேரம். ஆமினா அவர்கள் தான் சேர வேண்டிய வகுப்புக்கு தன் பெயரை முன் பதிவு செய்து விட்டு தன் தொழிலை கவனிப்பதற்காக ஒக்ளஹோமா (Oklahoma) சென்று விட்டார். திரும்பி வர தாமதமாக, வகுப்பு துவங்கி இரண்டு வாரம் சென்ற பிறகே வந்து சேர்ந்தார். விட்டு போன வகுப்புகளை வெகு சீக்கிரமே கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஏனென்றால், கணினி தவறுதலாக வேறொரு வகுப்பில் அவரை முன்பதிவு செய்திருந்தது. அந்த வகுப்பு தியேட்டர் (Theatre) வகுப்பு என்று அழைக்கபட்டது, அந்த வகுப்பில் அடிக்கடி அனைத்து மாணவர்கள் முன்பு பேச வேண்டிருந்தது. இயல்பாகவே ஆமினா அவர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டிருந்ததால் இந்த வகுப்பில் சேர மிகவும் அஞ்சினார்.
மிகவும் தாமதம் என்பதால் இந்த வகுப்பை புறக்கணிக்க முடியாத நிலை. மேலும் இந்த வகுப்பை அவர் புறக்கணித்தால் அவர் பெரும் ஸ்காலர்ஷிப்பை இழக்க வேண்டிய நிலை வரலாம். ஆகவே இந்த வகுப்பில் சேருவதென முடிவெடுத்தார்.
அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற அவருக்கு மாபெரும் அதிர்ச்சி. அந்த வகுப்பு முழுவதும் அரேபிய மாணவர்கள். அவ்வளவுதான். இனிமேல் வகுப்பிற்கு செல்ல கூடாதென முடிவெடுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்
"அந்த நாகரிகமற்ற அரேபியர்களுடன் படிக்க மாட்டேன்"
ஆமினா அவர்களின் கணவர் அவருக்கு ஆறுதல் கூறினார், இறைவன் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்குமென்று. அமீனா அவர்கள் இரண்டு நாட்கள் வீட்டின் அறையில் அடைந்து இருந்தார். அறையை விட்டு வெளியே வந்த அவர் சொல்லியது
"நான் அவர்களுடன் சேர்ந்து படிப்பேன். மேலும் அவர்களை கிறிஸ்துவராக்குவேன்"
இறைவன் இந்த அரேபியர்களை மதம் மாற்றுவதற்காகவே தன்னை அவர்களுடன் சேர வைத்ததாக நம்பினார். அரேபியர்களுடன் சேர்ந்து படிக்க தொடங்கினார். அவர்களுக்கு கிருஸ்துவத்தை எடுத்துரைத்தார்.
" நான் அவர்களிடம் சொல்லுவேன், ஏசுவை மீட்பராக ஏற்காவிட்டால் எப்படி அவர்கள் நரகத்தில் வதைக்க படுவார்கள் என்று...நான் சொல்வதை அவர்கள் கவனமாக கேட்டுக்கொண்டார்கள். மிகுந்த கண்ணியம் காட்டினார்கள். ஆனால் மதம் மாறவில்லை. பிறகு நான் அவர்களிடம் ஏசு கிறிஸ்து எவ்வளவு ஆழமாக அவர்களை நேசிக்கிறார் என்று விளக்கினேன். அப்பொழுதும் அவர்கள் என் பேச்சை சட்டை செய்யவில்லை"
பிறகு ஆமினா அசில்மி அவர்கள் ஒரு முடிவெடுத்தார்கள்...
"நான் அவர்களுடைய புனித நூலை படிப்பதென முடிவெடுத்தேன், இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கம், முஹம்மது ஒரு பொய்யான தூதர் என்று நிரூபிப்பதற்காக"
ஆமினா அசில்மி அவர்களின் வேண்டுதலின் பேரில் ஒரு மாணவர் குரானையும் மற்றுமொரு இஸ்லாமிய புத்தகத்தையும் கொடுத்தார். இந்த இரண்டு புத்தகங்களையும் அடிப்படையாக வைத்து தன் ஆராய்ச்சியை தொடங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் முடிவில் மேலும் பதினைந்து இஸ்லாமிய புத்தகங்களை படித்து முடித்திருந்தார். அப்பொழுதெல்லாம் குரானில் தான் எது சர்ச்சைக்குரியதோ என்று நினைக்கிறாரோ அதையெல்லாம் குறிப்பெடுத்து கொள்வார், இஸ்லாம் பொய் என்று நிரூபிப்பதர்க்காக. ஆனால் குரானின் மூலம் தனக்குள் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.
" நான் மாறி கொண்டிருந்தேன், சிறிது சிறிதாக, என் கணவர் சந்தேகம் படுமளவிற்கு. நாங்கள் ஒவ்வொரு வெள்ளியும் சனியும் பார் (BAR) மற்றும் பார்ட்டிகளுக்கு சென்று கொண்டிருந்தோம். ஆனால் நான் இனிமேலும் அங்கு செல்ல விரும்பவில்லை. அது போன்ற இடங்களில் இருந்து என்னை தனிமை படுத்தினேன்."
பன்றி இறைச்சி மற்றும் மதுவை நிறுத்தி விட்டார். இது அவருடைய கணவரை சந்தேகம் கொள்ள செய்தது. தன்னை விட்டு செல்லும்படி சொல்லிவிட்டார். ஆமினா அசில்மி அவர்கள் தனி வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது மேலும் இஸ்லாத்தை பற்றி ஆராயச் செய்தார்கள்.
அப்பொழுது அவர்களுக்கு அப்துல் அஜீஸ் அல் ஷேய்க் என்பவரது அறிமுகம் கிடைத்தது. "அவரை என்னால் மறக்க முடியாது. நான் இஸ்லாத்தை பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மிக பொறுமையாக அறிவுப்பூர்வமாக பதிலளித்தார். அவர், என்னுடைய கேள்வி தவறானது என்றோ, முட்டாள்தனமானது என்றோ ஒரு பொழுதும் கூறியதில்லை. சிறிது சிறிதாக என்னுடைய சந்தேகங்கள் விலகின"
1977, மே 21இல், அப்துல் அஜீஸ் மற்றும் அவரது தோழர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஆமினா அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
" இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்"
"நான் முதன்முதலாக இஸ்லாத்தை படிக்க தொடங்கியபோது, எனக்கு இஸ்லாத்தினால் தேவை என்று ஒன்று இருந்ததாக நினைவில்லை. இஸ்லாமும் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் முன்பிருந்ததைவிட இப்பொழுதோ என் மனதில் சொல்லமுடியாத ஒரு வித அமைதி, மகிழ்ச்சி. இதற்க்கெல்லாம் காரணம் இஸ்லாம் தான்"
இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப் பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள். குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே.
இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே. ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப் பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள்.
குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே.
இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே.ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
விவாகரத்து தவிர்க்க முடியாமல் போனது. ஆமினா அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இஸ்லாம் அப்பொழுது அங்கு மிக சிறிதே அறியப்பட்ட நேரம். அந்த சிறிதும் கூட இஸ்லாத்தை பற்றிய தவறான எண்ணங்களாகவே இருந்தன. ஆகவே நீதிபதி அவர்கள், குழந்தைகள் ஆமினா அவர்களிடம் வளர்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்றும், குழந்தைகள் ஆமினாவின் கணவரிடம் வளர்வதே அவர்கள் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் தீர்ப்பளித்தார். ஆமினா அவர்களால் தாங்க முடியாத துயரம்.
அப்பொழுது நீதிபதி ஆமினா அவர்களுக்கு 20 நிமிடங்கள் அவகாசம் கொடுத்தார். ஆம் அதேதான். ஒன்று அவர் கணவர் சொல்லுவது போல் இஸ்லாத்தை கைவிடுவது அல்லது குழந்தைகளை கணவரிடத்தில் ஒப்படைப்பது.
அவர் தன் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஒரு தாய்க்கு இதை விட பெரிய இழப்பு என்ன இருக்க முடியும்? ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, ஒரு வருடமல்ல...வாழ்க்கை முழுவதும் தன் குழந்தைகளை பிரிந்திருக்கவேண்டும். அதே சமயத்தில் இஸ்லாத்தை துறந்து ஒரு பொய்யான வாழ்க்கையையும் வாழ முடியாது. இஸ்லாம் என்ற உண்மையை தன் குழந்தைகளிடம் மறைக்கவும் முடியாது.
"நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" --- குரான் 2:42
"என் வாழ்வின் மிகத்துயரமான 20 நிமிடங்கள் அவை"
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், அவர் உடல் நிலையில் உள்ள சில பிரச்சனைகளால் மேற்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.
"முன் எப்போதும் இல்லாத அளவிற்கு துவா செய்தேன்..............எனக்கு நன்றாக தெரியும், என் குழந்தைகளுக்கு அல்லாஹ்விடம் தவிர வேறு பாதுகாப்பான இடம் இல்லையென்று. நான் அல்லாவை துறந்தால், எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கு இறைவனிடம் இருப்பதால் ஏற்படக்கூடிய அற்புதங்களை எடுத்து கூற முடியாமல் போய்விடும்"
ஒரு தாய்க்கு இதை விட ஒரு பெரிய தியாகம் இருக்க முடியாது. ஆம்....அல்லாஹ்விற்காக குழந்தைகளை ( ஒரு ஆண், ஒரு பெண் ) துறந்து விட்டார்... தன்னால் இஸ்லாத்தை விட முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்.
"நான் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது என்னால் என் குழந்தைகள் இல்லாமல் வாழ்வது மிகக்கடினம் என்று அறிந்திருந்தேன். இதயம் கனத்தது, ஆனால் எனக்கு தெரியும், நான் சரியானதையே செய்தேன் என்று"
மீண்டும் இஸ்லாத்தை ஆராய தொடங்கினார். தனக்கு தெரிந்த இறைச்செய்தியை மற்றவர்களுக்கும் தெரியச்செய்தார். இஸ்லாமிய தாவாஹ் பணியை தொடங்கினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருடைய அழகிய வார்த்தைகளும், இஸ்லாத்தினால் கற்றுக்கொண்ட குணமும் மற்றவர்களை சுண்டி இழுத்தது. குரான் சொல்லுவது போல மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்து கூறினார். இறைவனின் கிருபையால், பலரும் ஆமினா அவர்களின் அழைப்பால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
இறைவன் ஆமினா அவர்களுக்கு கொடுத்த சோதனைகள் போதும் என்று நினைத்தானோ என்னவோ, அவர்கள் இழந்ததை விட அதிக அதிகமாக கொடுக்க ஆரம்பித்தான்.
"அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை" --- குரான் 2:286
உண்மைதான்....இஸ்லாமினால் இப்போது அவர் மிகவும் மாறி இருந்தார், மிக பக்குவபட்டவராகவும் ஆனார். அவரை வெறுத்த அவரது குடும்பம் அவரது நல்ல பண்புகளை பாராட்டியது, அந்த பண்புகளை அவரிடத்தில் கொண்டு வந்த மார்க்கத்தையும் தான். ஆமினா அவர்கள் தன் குடும்பத்தை பிரிந்தபோதும், அவர்களிடத்தில் வெறுப்பை காட்டவில்லை, குரான் சொல்லியது போல் தன் குடும்பத்தை எப்போதும்போல் மிகவும் நேசித்தார்.
"மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள்; மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபச்சாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோரை, வீண் பெருமை பேசுபவர்களை நேசிப்பதில்லை" --- குரான் 4:36
ஒரு பண்டிகை தினமென்றால், அவரது குடும்பத்திற்கு தவறாமல் வாழ்த்து அட்டை அனுப்புவார், மறக்காமல் குர்ஆனில் இருந்தோ ஹதீஸில் இருந்தோ சில வரிகளை அந்த வாழ்த்து அட்டைகளின் முடிவில் எழுதி விடுவார். ஆனால் அது எங்கிருந்து எடுக்க பட்டது என்று குறிப்பிடமாட்டார்.
அவரது குடும்பத்தில் இருந்து முதலில் முஸ்லிமானது அவரது பாட்டி. அவருக்கு 100 வயதிற்கு மேல் இருக்கும். ஆமினா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அடுத்து முஸ்லிமானது, ஆமினா அவர்களை ஒரு காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்க்காக கொலை செய்ய துணிந்தாரே அவரேதான், ஆம் ஆமினா அவர்களின் தந்தையேதான் அவர்.
இது நடந்த சில நாட்களுக்கு பிறகு, அவரது தாய் ஆமினா அவர்களை அழைத்தார், தான் முஸ்லிமாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று வினவினார். அல்ஹம்துலில்லாஹ், ஆமினா அவர்கள் கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி கூறினார்.
" நீங்கள் ஒன்றும் செய்ய தேவை இல்லை, இறைவன் ஒருவனே என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்றும் சாட்சியம் கூறினால் போதும்" அதற்கு அவரது தாய் "அதுதான் எனக்கு முன்னமே தெரியுமே, வேறு என்ன செய்ய வேண்டும்"... "அப்படியென்றால் நீங்கள் எப்பொழுதோ முஸ்லிமாகிவிட்டீர்கள்"
"ஒ அப்படியா............. இறைவனுக்கு நன்றி, ஆனால் உன் தந்தையிடம் நான் முஸ்லிம் என்று சொல்லிவிடாதே. அவர் மிகவும் கோபப்படுவார், நானே பிறகு சொல்லிவிடுகிறேன்"
சுபானல்லாஹ், அவருடைய தந்தைதான் எப்பொழுதோ முஸ்லிமாகி விட்டாரே. ஆனால் அவரும் மறைத்திருக்கிறார், தன் மனைவி கோபப்படுவார் என்று. ஆக இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இத்தனை காலங்களாக முஸ்லிமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆமினாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் தாரையாய் வெளியேறியது....
"இறைவா நீ மாபெரும் கிருபையாளன்"
பிறகு முஸ்லிமானது, ஆமினாவை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சொன்ன அவரது சகோதரி. ஆம் அவர் இஸ்லாம் தான் மனநலத்திற்கு நல்லது என நினைத்திருக்க வேண்டும்.
16 வருடங்கள் கழித்து, ஆமினா அவர்களின் முன்னாள் கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பதினாறு வருடங்களாக தான் ஆமினாவை கவனிப்பதாகவும், தன்னுடைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். பிரிந்து சென்ற அவரது மகன் தன்னுடைய 21 ஆவது வயதில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார். ஆக, எந்த மார்க்கத்திற்காக ஆமினாவை தனிமைப்படுத்தினார்களோ, இன்று அதே மார்க்கத்தில் அனைவரும் இணைந்து விட்டார்கள், மிக அதிக பண்புள்ளவர்களாக. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.
ஆனால் இறைவனுடைய மற்றுமொரு மாபெரும் பரிசு ஆமினா அவர்களை திக்குமுக்காட செய்தது. ஆமினா அவர்கள் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு வேறொருவரை மணந்தார்கள். மருத்துவர்கள் ஆமினா அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி இருந்தார்கள். இறைவன் கொடுக்க நினைத்தால் யார் தடுப்பது?. ஆம், அந்த அதிசயம் நிகழத்தான் செய்தது. இறைவன் அவருக்கு ஆண் வாரிசை பரிசாக அளித்தான். இது இறைவனின் மாபெரும் கிருபை. அதனால் அந்த குழந்தைக்கு "பரக்காஹ்" என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.
அல்லாஹ்விற்காக ஆமினா அவர்கள் செய்த தியாகங்கள் நெஞ்சங்களை உருக்குபவை.
* ஒரு காலத்தில் அவரை விட்டு விலகிய குடும்பத்தாரில் இன்று பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
* அன்றோ இஸ்லாத்தை தழுவியதற்காக அவரை விட்டு விலகினர் அவரது நண்பர்கள். இன்றோ அவரை நேசிக்க கூடியவர்கள் கோடானுகோடி பேர்.
"நண்பர்கள் நான் போகுமிடமெல்லாம் கிடைத்தார்கள்"
* அன்றோ ஹிஜாப் அணிந்ததற்காக வேலையை இழந்தார்கள். இன்றோ சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர்.
இறைவன் தன்னை நாடிவந்தவற்கு தன் அருட்கொடைகளை அளித்து விட்டான். இன்று அவர் பல இடங்களுக்கும் சென்று இஸ்லாத்தை போதித்து வருகிறார். பலரையும் இஸ்லாத்தின்பால் அழைத்து வருகிறார். இவரால் இஸ்லாத்தை தழுவியவர்கள் ஏராளமானோர். கடும் முயற்சி எடுத்து அமெரிக்காவில் பெருநாள் தபால்தலைகளை வெளியிட செய்தது இவரது அமைப்பு. இப்பொழுது பெருநாள் தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க முயற்சி எடுத்து வருகிறது இந்த அமைப்பு.
சில வருடங்களுக்கு முன் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறிந்தார்கள். அது முற்றிவிட்டது என்றும் இன்னும் ஒரு வருட காலத்தில் இறந்து விடுவார்கள் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். ஆனால் ஆமினா அவர்களின் ஈமான் இறந்துவிடவில்லை. அது இன்னும் அதிகரித்தது.
"நாம் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம். எனக்கு நன்றாக தெரியும், நான் அனுபவிக்ககூடிய இந்த வலியில் என் இறைவனின் அருள் உள்ளது என்று"
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே, இன்றும் ஆமினா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். இன்னும் தனக்கு வந்துள்ள இந்த புற்றுநோய்தான் தனக்கு இறைவன் கொடுத்துள்ள மாபெரும் கிருபை என்றும் நம்புகிறார்கள். இன்று ஆமினா அவர்களிடம் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. தன் 33 வருட தாவாஹ் பணியில் அனைத்தையும் இஸ்லாத்திற்காக கொடுத்து விட்டார்கள். இப்பொழுது அமெரிக்க முஸ்லிம்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.
ஆனால் ஏழை என்று நினைத்து விடாதீர்கள், அவர் மாபெரும் பணக்காரர், ஆம் இறைவனின் பார்வையில்...அவர் செய்துள்ள நன்மைகளின் அளவினால்.
"ஆனால் பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டு" --- குரான் 11:11
" நிச்சயமாக இந்த குரான் முற்றிலும் நேர்வழியை காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் மூமின்களுக்கு நிச்சயமாக மிகப்பெரும் நற்கூலி உண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது" --- குரான் 17:9

டாக்டர் மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்


கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.
இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.
ஆனால், என்ன ஆச்சரியம்! உலகத்தில் வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி (ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.
நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல; குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரை திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்தவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம்கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.
நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்பட்டிருந்தது மில்லரின் வியப்பைக் கூட்டியது.
குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்ஆனில் ஒரு வசனம் அவரைத் தூக்கிவாரிப் போட்டது.
இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிட மிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள் (4:82) என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது.
இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவெனில், சிந்தனைகளில் தவறு இருக்கும்; தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால்தான் அது முடியவில்லை.
உலகில் எந்தப் படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது; இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது.
டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்:
இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (21:30)
1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். பெருவெடிப்பு' (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பலகோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை.
'இணைந்திருத்தல்' என்பதைக் குறிக்க 'ரத்க்' எனும் சொல் வசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்கு இணைந்த பொருளைக் குறிக்கும். 'சிதறல்' என்பதைக் குறிக்க மூலத்தில் 'அல்ஃபத்க்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். (ரத்க், ஃபத்க் - சுப்ஹானல்லாஹ்!)
நபி (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார்போலும். இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதைக் கண்டு திகைத்துப்போனார் மில்லர்.
"இதை ஷைத்தான்கள் இறக்கிவிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல; அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது." (26:210,211)
என்று கூறும் குர்ஆன்,"(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீரா!" (16:98)
என்று கட்டளையிடுகின்றது. ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்குமுன் என்னைவிட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?
டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்கவைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம்பெறுகின்றன. அவற்றை 'அற்புதங்கள்' என்கிறார் அற்புதக் கூட்டங்கள் பல நடத்திய அவர்.
அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் மரணிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீலஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படையாகவே கூறுகிறது.
அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக்கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை -தான் நரகவாசி என்பதை- பொய்யாக்கியிருக்கலாம்.
ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப்பெற்றது.

ஓடிப்போகும் பெண்களை அடித்து திருத்த நினைப்பது சரியா?


இன்றைய கால கட்டத்தில் ஓடிப்போகும் பெண்கள் பலரை நாம் காண முடிகிறது.
இப்படி அவர்கள் ஓடிப்போவதற்கு அவர்கள் மாத்திரம் காரணம் அல்ல.
ஒரு ஆணும், பெண்ணும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னணியாக அவர்களுடைய வளர்ப்புடன் தொடர்புடையவர்கள் தான் பொருப்பாக இருக்கிறார்கள்.
அதாவது பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் விட்ட குறைதான் ஓடிப்போகும் அளவுக்கு அவர்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது.
எனது பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியும்!
என் பேச்சை அவள் தட்டவே மாட்டாள்!
நான் கிழித்த கோட்டை தான்ட மாட்டாள்!
இப்படியெல்லாம் பேசும் பெற்றோர் ஒரு விஷயத்தை மட்டும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். "உங்கள் பிள்ளைகளும் பெண்கள் தான்" என்பதை.
பெண்களை பொருத்தவரை அவர்கள் ஒரு கொடியைப் போன்றவர்கள் எங்காவது படர்ந்து கொள்ள ஒரு இடம் கிடைக்கிறதா என்று எண்ணுபவர்கள். ஒரு இடம் கிடைத்தால் அதுவே அவர்களுக்கு ஆறுதலான விஷயமாக மாறிவிடும்.
அதன் பின் தாய் சொன்னாலும் விளங்காது, தந்தை சொன்னாலும் விளங்காது.
அது மட்டுமன்றி இது போன்ற தகாத ஆண், பெண் உறவு முறைகள் உருவாகுவதற்கு காரணமாக பல செயல்பாட்டை குறிப்பிடலாம். செல்போன் பாவனை, ஆண், பெண் கலப்புப் பள்ளிகள், தகாத உறவு முறைகள் என்று பலதையும் நாம் குறிப்பிடலாம்.
பிள்ளைக்கு எவ்வளவுதான் தேவை இருந்தாலும் செல்போனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
பெண்கள் கல்லூரிகளில் மட்டும் சேர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
உங்கள் உண்மையான உறவினர்கள் யார் என்பதை சரியாக அடையாளம் கண்டு அவர்களுடன் மாத்திரம் இஸ்லாம் அனுமதித்த விதத்தில் உறவாட அனுமதியுங்கள். இப்படி நடந்தால் மாத்திரமே இந்த தீய செயலை நாம் தடுக்க முடியும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.(அல்குர்ஆன் 66:6)
நம்மையும், நமது குடும்பத்தினரையும் நரகத்தை விட்டும் நாம் பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறான்.
நமது பிள்ளைகள் மாற்று மதத்தவருடனோ அல்லது நமது முஸ்லீம் ஆண்களுனோ யாருடனும் ஓடிப்போகாமல் நாம் நம் பிள்ளைகளை சரியான முறையில் வளர்க்க வேண்டும்.
ஒரு பிள்ளை தவறு செய்தால் அந்தப் பிள்ளையை திருத்துவதற்குறிய அனைத்து அதிகாரமும் பெற்றோருக்கு உள்ளது. அவர்களை கண்டித்துத் திருத்துவதில் எந்தத் தவறும் இல்லை.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக் குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். புகாரி (2554)
மறுமை நாளில் பெற்றோரின் பொருப்புக்ள பற்றி விசாரிக்கப்படும் போது தன் பிள்ளைகள் பற்றிய விசாரனையும் முக்கியமானதாகும்.அப்படி இருக்கும் போது நாம் நமது பிள்ளைகளை திருத்துவதில் எந்த்த் தவறும் இல்லை.
தவறைச் செய்யாதீர்கள்... பெண்களே!
சமுதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய்யலாம்(?). ஆனால் பெண்கள் செய்யக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒரு விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொள்வதை விட, ஆண் செய்யும் தவறால் சமுதாயத்தில் எந்த பெரும் சிக்கலும் உருவாகாமல் போய்விடுகிறது . ஆனால் அதே தவறை பெண் செய்யும் போது பலபிரச்சனைகள் எழும்.
உதாரணமாக, ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடலாம்(?) இதை இந்த சமுதாயம் பெரிதாக எடுத்துகொள்வது இல்லை . இதனால் தவறு இளைத்தவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவதால் கர்ப்பமுற நேரிடும். இதனால் அவளும் அவளது குடும்பமும் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்
இதேப்போல, திருமணத்திற்குப் பிறகு ஆண் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்தாலும் சமுதாயத்தில் இரண்டாம் தாரம் என்று பெயர் வைத்து விடுவார்கள். ஆனால் இதே ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு வைத்துகொண்டால் அது அந்த பெண்ணின் குடும்பத்தையே சீர்குலைத்து விடும்.
ஒரு ஆண் பிடித்த பெண்ணை பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம்(?). அதற்கு அவன் காதலிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டான் என்று சமுதாயத்தில் சொல்வார்கள். ஆனால், ஒரு பெண் இதைச் செய்தால் அவள் ஓடிப் போய்விட்டாள் என்று கூறுவார்கள்.
இது போல ஒரு குடும்பத்தில் வாழும் பெண், தான் காதலிக்கும் ஆணை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவதால், அவள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அந்த பெண்ணின் குடும்பத்தாரும் பல வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண் வீட்டை விட்டு ஓடுவதால் ஏற்படும் துக்கத்தை விட, அதனால் ஏற்படும் அவமானமே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும். உற்றார், உறவினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும், பெண் எங்கே என்று கேட்கும் கேள்விக்கு சொல்வதறியாது கலங்கும் பெற்றோரின் நிலையை காணும் பொழுது மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது .
பெற்றோர்கள் இந்த அவமானத்தை தாங்க இயலாமல் மனநிலை பாதித்து மருத்துவமனை வரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்றுவிடுவதும். தந்தை இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு ஒரு இடத்தில் வேலைக்குச் செல்வதும் உண்டு.
உங்கள் பெண் எங்கே என்று கேட்பவர்களுக்கு எந்த பெற்றோரால், என் மகள் காதலித்தவனை திருமணம் செய்து கொண்டாள் என்று சொல்ல முடியுமா? கூனிக் குருகி அவர்கள் நிற்பதைக் கண்டு கேள்வி கேட்டவர்களே புரிந்து கொண்டால்தான் உண்டு.
இந்த நிலையில், வீட்டை விட்டு செல்லும் பெண்ணிற்கு திருமணமாகாத சகோதரிகள் இருப்பின் இவர்களின் எதிர்காலமும் பாதிக்கபடுவது நிச்சயம்,இதனால் அவர்களது வாழ்க்கை இன்னும் மோசமாகிறது. திருமணத்திற்காக வரன் தேடும் போது கேட்கும் முதல் கேள்வி அவர்களது குடும்பத்தைப் பற்றியதுதான். அதில் இப்படி ஒரு சிக்கல் இருப்பின், மாப்பிள்ளை வீட்டார் சற்று தயக்கம் காட்டத்தான் செய்வார்கள். அக்காள் இப்படி என்றால் தங்கை எப்படி இருப்பாளோ என்று வாய்விட்டு பேசுபவர்களும் உண்டு.
சமுதாயத்தின் ஆணி வேரே நீங்கள் தான் ( பெண்தான்). இதனால்தான் ஆணி வேர் எந்த வகையில் பாதித்தாலும் அதனால் பாதிக்கப்படுவது முழு மரமும்தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் நீங்கள் செய்யும் இந்த தவறால் இன்று உங்கள் குடும்பம் என்ன என்ன பிரச்சனைகளை சந்தித்து கொண்டுள்ளார்கள் என்பதை தயவு செய்து சிந்தித்து செயல் பட வேண்டும் .
இஸ்லாம் நமக்கு காட்டித்தந்த வழிமுறை படி வாழ்ந்தால் வழிதவறேல் இருக்காது !

நீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் - திட்டமிடுதல்


முன்னொரு காலத்தில் அந்த நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். அரண்மனைக்குச் சென்று 'எனக்கு அரசர் பதவி வேண்டும்' என்று கேட்டால் போதும், அரியணையில் அமர்த்தி முடிசூட்டிவிடுவார்கள். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.
இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.
இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.
மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''
கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.
படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''
''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''
''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''
''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''
''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.
ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?
பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.
ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!
அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே
இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!
இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!
இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.
அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!
மேற்கண்ட கதையை கவனியுங்கள்!
''ஐந்து ஆண்டுக்குப் பிறகு காடும் சாவும்தான் விதி'' என்ற விதியை மதியால் எப்படி மாற்றினான்?
வறுமையும், நோயும், மன உளைச்சலும், அவமதிப்பும்தான் நம்முடைய விதியா?
பசி, பிணி, மூப்பு, சாக்காடுதான் தலையெழுத்தா? எப்படியும் மரணம்தான் என்பது ஆண்டி முதல் அரசன் வரை அனைவருக்கும் வகுக்கப்பட்ட விதியாக இருந்தாலும், இறுதிக் காலத்தை ஏன் இறுகிப்போன காலமாகக் கழிக்க வேண்டும்?
அதற்காகத் துல்லியமாகத் திட்டமிடுங்கள்.
எப்போது செய்ய வேண்டும் என்று அழகாகத் திட்டமிடுங்கள்.
எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !

சவுதி ஆரேபியாவில் இருந்து 117 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்:விசா காலம் முடிந்ததால் நடவடிக்கை


உத்திரபிரதேசம், பீகார், உத்தராஞ்சல், ஜார்க்கண்ட் உள்பட வடமாநிலங்களில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் சவுதி அரேபியாவிற்கு டிரைவர், வெல்டர், கட்டிட பணிகளுக்கு ஏஜென்டுகள் மூலம் தலா ரூ.50 ஆயிரம் பெற்று ஆட்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் வேலைக்கான விசா இல்லாமல் சுற்றுலா விசாவில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர்.மேலும் அங்கு அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை.
 
 
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் விசா காலம் முடிந்து அதிக நாள் தங்கியிருந்ததாக கூறி இந்தியர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் தண்டனை காலம் முடிந்த பின் இந்தியர்களை சவுதி அரேபிய அரசு விமானத்தில் அனுப்பி வைக்கிறது.
 
கடந்தசில தினங்களுக்கு முன்பு 70 பேரை சென்னைக்கு அனுப்பி வைத்தது. அதுபோல் இன்று சவுதி அரேபியாவில் இருந்து 117 பேர் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதில் ஜார்க்கண்ட் மாநிலத்தை கிஷோர் என்பவர் கூறுகையில்,
 
வெளிநாட்டில் வேலை என்ற ஆசையில் சென்றோம். ஆனால் கடன் வாங்கி சென்ற எங்களுக்கு துன்பம் ஏற்பட்டது. சவுதி அரேபிய அரசு சுற்றுலா விசாவில் சென்றதாக கூறி எங்களை சிறையில் அடைத்தனர்.
 
மலேசியா, வங்காளதேசம் போன்ற நாடுகளின் தூதரக அதிகாரிகள் வந்து நாட்டினரை அழைத்து சென்றனர். ஆனால் இந்திய தூதரக அதிகாரிகள் எங்களுக்கு எந்தவித உதவியையும் செய்யவில்லை. தற்போது சவுதி அரசே அனுப்பி உள்ளது என்றனர்.

உங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.


இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட – அதிவேக வளர்ச்சியுற்ற – அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Cell Phone அல்லது Mobile Phone எனப்படும் ‘கைபேசி’ உபயோகிப்பவர்கள் எந்த அளவுக்கு அதன்Electromagnetic Radiation மூலம் உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளையும் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு பதிவு இது.

ஒரு Caller தன் செல்ஃபோனில் ஒரு Receiver-ஐ அழைக்கும்போது அவரின் செல்ஃபோனிலிருந்து வெளியாகும் மின்காந்தப்புலன் (Electro Magnetic Field)  அருகிலிருக்கும் மொபைல் (Base Station – 1) டவருக்கு செல்கிறது. அங்கிருந்து சிக்னல், Switching Center-க்கு செல்கிறது. இங்கே அழைப்பாளர் மற்றும் அழைக்கப்படுபவரின் விபரங்கள் சேமிக்கப்படுகின்றன. பின் அங்கிருந்து சிக்னல் அழைக்கப்படுபவரின் அருகே இருக்கும் செல்ஃபோன் (Base Station  – 2) டவருக்கு செல்கிறது. இதிலிருந்து புறப்படும் மின்காந்தப்புலன் Receiver-ன் செல்ஃபோனில் உள்ள ஆன்டென்னா மூலம் உட்கிரகிக்கப்படும் போது செல்ஃபோனில் ரிங் டோன் கத்துகிறது. அழைக்கப்படுபவர் வந்த அழைப்பை ‘ஓகே’ செய்யும்போது இருவருக்கும் தொடர்பு ஏற்படுகிறது.
The impact of cell phone radiation on humans..! & How to overcome it carefully..!
பிரச்சினை இப்போதுதான் ஆரம்பிக்கிறது. இவ்வாறு பேசும்போது செல்ஃபோனின் ஆன்டென்னா விலிருந்து தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருக்கும் மின்காந்த அலைகள் எல்லா பக்கமும் தெறிக்கின்றன. அதில் கிட்டத்தட்ட பாதி ஆளவு அலைக்கதிர்கள் பேசுபர்களின் தலைக்கு உள்ளும் ஊடுறுவுகின்றன..! இந்த செல்ஃபோனின் மின்காந்த அலைக்கதிர்வீச்சின் அளவு, ஒரு மைக்ரோ வேவ் ஓவனின் அலைக்கதிர்வீச்சுக்கு ஏறக்குறைய இணையானது..! ஆக, விஷயம் அவ்வளவு விபரீதமானது..!
ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு Specific Absorption Rate (SAR) உண்டு. இது 1.6 W/KG (watts per kilogram) எனும் அளவுக்கு குறைவாக இருந்தாக வேண்டும். இது International Standard அளவு. உங்கள் மொபைலில் இது  எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது உங்கள் உடலுக்கு நல்லது.

நம் செல்ஃபோனுக்கான இந்த SAR-ஐ பின்வரும் மூன்று வழிகளில் அறியலாம்.
  1. உங்கள்  செல்ஃபோனின் கையேடு ( user’s manual) மூலம்.
  2. செல்ஃபோன் தயாரிப்பாளர்களின் இந்த தளம்மூலமாக.
  3. செல்ஃபோனின் FCC ID Number-ஐ என்டர் செய்து  இந்த தளம் மூலமாக
நீண்ட நேரம் செல்ஃபோனை ‘ அணைத்த கையும் காதுமாய் ‘ கதை அடிக்கும் மனிதர்களின் தலைக்குள் ஊடுறுவும் இந்த மின்காந்த அலைக்கதிர்வீச்சு தலைக்குள் சூட்டை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. உதாரணமாய் 15 நிமிடம் அவ்வாறு பேசிய ஒரு ‘மொபைல் பேச்சாளரின்’ முந்தைய பிந்தைய நிலையை பின்வரும் படம் காட்டுகிறது.

நீண்ட நேரம் காதோடு மொபைல் வைத்து பேசுவோருக்கு… மயக்கம், தலைவலி, தூக்கமின்மை, ஞாபகமறதி, காது இறைச்சல், மூட்டுவலி இப்படி உடனடியாக சில தங்கடங்கள் வருமாம்.

தொடர்ந்து இதேபோல‘அணைத்த கையும் காதுமாய் ‘ செல்ஃபோன் மூலம் நீண்டநேரம் பேசினால்..? பெரியவர்கள் மண்டைஓடு கனமானது. குழந்தைகளின் மண்டைஓடு மெல்லியது. இதனால், பெரியவர்களை விட குழந்தைகள் இக்கதிர்வீச்சினால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, 5-வயது குழந்தைக்கு 75% பாதிப்பும் 10-வயது குழந்தைக்கு 50%-ம், பெரியவர்களுக்கு 25% பாதிப்பும் ஏற்படுகிறதாம்.


ஆக, இதே போல தினம் தினம் பல நிமிடங்கள் அல்லது பல மணி நேரங்கள் என சூடாகும் மூளை செல்களில் உள்ள புரோட்டீன் சிதைய, கடைசியில் Brain Tumor-ல் அல்லது சில சமயம் Brain Cancer-ல்கொண்டு போய் விடுகிறதாம்..!
இப்படி ஒரு சாரார் மிக தீர்க்கமாக ஆதாரங்களுடன் பரிசோதித்து சொல்ல, ‘அந்த அளவுக்கெல்லாம்… அப்படியெல்லாம்… ஒன்றும் ஆகாது’ என்று இன்னொரு சாரார்… (செல்ஃபோன் நிறுவனங்கள் சார்பாக…?) சில மருத்துவர்கள் வாதாடினாலும், விலை கொடுத்து வாங்கும் இந்த வேண்டாத பெரிய ஆபத்து எதற்குமா நமக்கு..? சில வருடங்கள் கழித்து “ஆமாமாம்… அந்த சாரார் சொன்னதே சரி”-ன்னு அப்போது பல நோயாளிகளின் புகாரை கண்டு ஜகா வாங்கினால் அப்புறம் இவர்களை நம்பினோர் கதி..? அதோ கதி அல்லவா ..!

இதற்கு சரியான வழி, நீங்கள் செல்ஃபோன் வாங்கும்போது ‘ear phone’ என்று ஒரு அம்சம் பெட்டியுடன் சேர்த்து கொடுத்திருப்பார்களே..!? ம்ம்ம்… அதுதான்..! அதை தேடி எடுங்கள்..! ஒரு சில நிமிடங்களுக்கு மேலே பேசுவதாயின் கண்டிப்பாய் அதை இனி காதில் மாட்டிக் கொள்ளுங்கள்..! என்னது…? அதை காணவில்லையா…? சரி…வேறொன்று டூப்பிளிகேட்டாவது வாங்குங்கள் சகோ..!   ஆரோக்கியம் முக்கியம் அல்லவா..?

அதுவரை என்ன செய்யலாம்…? அவசரத்துக்கு, இனி பேசும் போது செல்ஃபோனை காதுக்கும் வாய்க்கும் கிடைமட்டமாக பிடித்து, அதன்மூலம் ஆன்டேன்னாவிலிருந்து வெளியேறும் அலைக்கதிர்வீச்சு கூடுமானவரை தலைக்குள்ளே  செல்லாதவாறு பிடித்து பேசுங்கள்.  அப்புறம் ‘Speaker Phone’ என்று ஒரு அம்சம் உள்ளதே..! அப்படி என்ன ராணுவ ரகசியம் பேசிவிடப்போகிறோம்..? அணைத்த கையும் காதுமாய் செல்ஃபோனில் பேசாமால் ‘Speaker Phone’ உபயோகித்தும் பேசலாமே..!
‘டவர் சிக்னல் வீக்’ என்று மொபைல் காட்டினால், அந்த இடங்களில் பேசுவதை தவிருங்கள். ஏனெனில், கஷ்டப்பட்டு சிக்னலை பிடிக்க அலைக்கதிர்வீச்சு அப்போது உச்சத்தில் இருக்கும். பாதிப்பும் நிறைய. உடனே… சிக்னல் முழுக்க கிடைக்கும் இடமாய் தேடிச்சென்று பேசுங்கள். கதிர்வீச்சு அளவை குறைத்துக்கொள்ளலாம்.
‘பொதுவாக யாருடனேனும் நீண்ட நேரம் கடலை போட்டேயாக வேண்டும்’ என்றால், இருக்கவே இருக்கே லேண்ட்லைன்..! அதை உபயோகியுங்கள்..! எந்த பயமும் இல்லை… முக்கியமாக பேட்டரி சார்ஜ் தீர்ந்து பல மணிநேரம் பேச முடியாமல் போய் விடுமோ என்ற கவலையே இல்லையே…! ஹி..ஹி… 

தனியார் மூலம் ஹஜ் பயணம் திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவு : உயர் நீதிமன்றம் தீர்ப்பு !

புதுடெல்லி: தனியார் மூலமான ஹஜ் பயண திட்டத்தை நிறுத்தி வைக்க, மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சவுதி அரேபிய நீதிமன்றம், ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வரும் யாத்ரீகர்களுக்காக, ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட அளவில் விசாக்களை வழங்குகிறது. இதேபோல் இந்தியாவுக்கும், குறிப்பிட்ட அளவு விசாக்களை வழங்குகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இவற்றில் பெரும்பகுதியை இந்திய 
ஹஜ் கமிட்டியிடமும், குறிப்பிட்ட அளவை மட்டும் தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கும் வழங்கும். இவற்றை கொண்டு தனியார் சுற்றுலா நிறுவனங்கள், ஹஜ் பயணிகளை சவுதி அரேபியாவுக்கு அழைத்து செல்லும். இந்நிலையில், தனியார் சுற்றுலா நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அங்கீகாரம் அளித்து, அவற்றுக்கு மட்டும் சவுதி அரேபியா விசாக்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதை தவிர மற்ற தனியார் சுற்றுலா நிறுவனங்கள் எதற்கும், சவுதி விசா வழங்கப்பட மாட்டாது. இதனால் அவர்கள் ஹஜ் பயணத்தை செயல்படுத்த முடியாது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 14ம் தேதி, அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், 568 தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு அங்கீகாரம் 
அளிக்கப்பட்டிருந்தது. இவர்கள் மூலம் 45,491 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்டிருந்தது.
மத்திய அரசின் இத்திட்டத்தை எதிர்த்து, அங்கீகாரம் கிடைக்காத தனியார் சுற்றுலா நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ராஜிவ் சஹாய் எண்ட்லா வழக்கை விசாரித்தார். அப்போது உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எஸ்.சந்தியாஹோகே ஆஜராகி, இதேபோன்ற வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது என்றும், இந்த வழக்கில் மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு 
மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும், அந்த வழக்கில் வரும் இறுதி தீர்ப்பை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது என்றும் கூறினார்.
இதையடுத்து நீதிபதி தனது உத்தரவில், ‘‘மத்திய அரசின் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் வரும் தீர்ப்பை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கலாம்’’ என்றார்.

கிராம மக்களுக்கு அதிகாரம் : இந்தியாவுக்கு ஒபாமா பாராட்டு !

நியூயார்க் : கிராம மக்களுக்கு அதிக அதிகாரம், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்துவதாக இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பாராட்டு தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் பிரேசில் தலைமையில் ‘அரசுகளுக்கு இடையே கூட்டணி’ என்ற பெயரில் நிர்வாகத்தில் வெளிப் படைத்தன்மை, ஊழல் எதிர்ப்பு, பொறுப்பேற்பு மற்றும் மக்களுக்கு கூடுதல் அதிகாரம் ஆகியவற்றுக்கு முயற்சி செய்வதற்கான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் முதல் கூட்டம், நியூயார்க் நகரில் நேற்று நடந்தது.

அந்த அமைப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டும் இந்தியா சார்பில் யாரும் இடம்பெறவில்லை. எனினும், அங்கு பேசிய அதிபர் ஒபாமா, இந்தியாவை பாராட்டினார். ‘‘அதிக மக்கள்தொகை கொண்டிருந்தாலும், நாடு முழுவதும் கிராம மக்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதிலும் வெளிப்படையான நிர்வாகம் ஏற்படுத்தும் முயற்சியிலும் இந்தியா பாராட்டுக்குரியது’’ என்றார்.

21ம் நூற்றாண்டில் மக்களுக்கு அதிகாரம் மற்றும் முன்னேற்றப் பாதையில் அரசுகளை மாறச் செய்தல் ஆகிய நோக்கில் அமைந்துள்ள இந்த அமைப்பில் 40 நாடுகள் இணைந்துள்ளன. இந்தியாவில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதை போல துருக்கி, மெக்சிகோ, லைபீரியாவிலும் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. 
ஊழலை வெளிப்படுத்த மக்களுக்கு புதிய வழிகளை சிலி, கென்யா, பிலிப்பைன்ஸ் நாடுகள் ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிபர் ஒபாமா தெரிவித்தார்.