கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக நேற்று பதவி ஏற்ற ஆர்.கிர்லோஷ்குமார், ‘பொதுமக்களின் குறைகளை விரைவாக தீர்க்க முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன்‘ என உறுதியளித்தார்..
புதிய கலெக்டர்
கடலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய ராஜேந்திரரத்னூ திடீரென மாற்றப்பட்டு வணிகவரித்துறை இணைக்கமிஷனராகவும், அப்பதவியில் இருந்த ஆர்.கிர்லோஷ்குமார்(வயது36) கடலூர் மாவட்ட கலெக்டராகவும் மாற்றப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக ஆர்.கிர்லோஷ்குமார் பதவி ஏற்கும் நிகழ்ச்சி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் 12–30 மணிக்கு நடந்தது. அங்கு புதிய கலெக்டராக ஆர்.கிர்லோஷ்குமார் பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் பணிமாறுதலாகி செல்லும் ராஜேந்திரரத்னூ பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார்.
மகிழ்ச்சி அடைகிறேன்
புதிய கலெக்டராக பதவி ஏற்ற ஆர்.கிர்லோஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
கடலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முன்பு கலெக்டராக இருந்த ராஜேந்திரரத்னூ எனது நெருங்கிய நண்பர். நானும் அவரும் ஒரே ஆண்டில் ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட்டோம். அவர் ஏறத்தாழ 5 ஆண்டுகள் கடலூர் மாவட்டத்தில் நல்ல முறையில் பணியாற்றியிருக்கிறார்.