AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: இரண் டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. இது குறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இரண்டாம் கட்டமாக இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லு£ரி, மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில்  40,000 போலியோ சொட்டு மருந்து சிறப்பு  மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக கூடுதலாக 1000 சிறப்பு மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன.  இரவு, பகலாக மூன்று நாட்களுக்கு இம்மையங்கள்  செயல்படும்.  
தொலை து£ரம்  உள்ள கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு 900,க்கும் மேற்பட்ட நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

15ம் தேதியன்று 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். சொட்டு மருந்து வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு குழந்தைகளின் விரலில் மை வைக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 வரை மையம் செயல்படும். முகாமில் சமூக நலத்துறை, கல்வித்துறை, வருவாய் துறை , ஊரக வளர்ச்சி துறை,  நகராட்சி நிர்வாக துறை ஆகிய அரசு துறைகள் மற்றும்  அரசு சாராத்துறைகளான ரோட்டரி, இந்திய மருத்துவ கழகம், இந்திய குழந்தைகள் கழகம்.  லயன்ஸ் கிளப், ஆகியவைகளும்  ஈடுபடுகின்றன. 2 லட்சம் பணியாளர்கள் இம் முகாமில் டுபடுத்தப்பட்டுள்ளனர்.

சனி, 14 ஏப்ரல், 2012

பெட்ரோல் விலையும் அதிகரிக்கும் பட்ஜெட் நிறைவேறியதும் டீசல் விலை உயர்த்தப்படும்

புதுடெல்லி : நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நிறைவேறியதும் டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான மானிய செலவு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக, எரிபொருள் விலை விரைவில் உயர்த்தப்படும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த மாதமே கூறியிருந்தார். எனினும், கூட்டணிக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்ற காரணத்தால் விலை உயர்வு ஒத்தி வைக்கப்பட்டது. 

கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதுபோல், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அரசின் முன் அனுமதியை பெற்ற பின்பே அதன் விலையை உயர்த்த வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் டிசம்பர் மாதத்துக்குப் பிறகு பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை. 

இப்போதைய சர்வதேச விலை நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.7, டீசலுக்கு ரூ.14.36, மண்ணெண்ணெய்க்கு ரூ.31.04, சயைமல் எரிவாயு ஒரு உருளைக்கு ரூ.570 நஷ்டம் ஏற்படுகிறது. எரிபொருள் விலையை உயர்த்தாவிட்டால் பெட்ரோல் சப்ளை பாதிக்கப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தன. 

இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் மே முதல் வாரத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

டீசல் விற்பனை 12 சதவீம் அதிகரிப்பு

கடந்த 2011,12 நிதியாண்டில் பெட்ரோலிய பொருட்களின் ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சி 4.9 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த 4 ஆண்டுகளில் அதிகபட்ச வளர்ச்சி ஆகும். 4.58 சதவீதமாக இருக்கும் என அரசு மதிப்பீடு செய்திருந்தது. 2010,11 நிதியாண்டில் இது 2.9 சதவீதமாக இருந்தது. இதில் டீசல் விற்பனை 11.9 சதவீதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. 

''பெட்ரோல் விலை அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. ஆனால் டீசல் விலை உயர்த்தப்படுவதில்லை. இதனால் டீசல் விற்பனை கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. டீசல் விலை கட்டுப்பாட்டை நீக்கும்வரை இதே நிலை நீடிக்கும்'' என பெட்ரோலிய பொருட்கள் திட்டம் மற்றும் ஆய்வு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சவூதி ஸ்பான்சரினால் 20 ஆண்டுகளாக கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்ட சகோதரி - ரியாத் தமுமுக நடவடிக்கையால் மீட்பு


கடந்த 20 அண்டுகளுக்கு முன் சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு பணிப்பெண்ணாக வந்திருந்த தஞ்சை மாவட்டதைச் சேர்ந்த மும்தாஜ் என்ற சகோதரி தனது ஸ்பான்சரினால் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு 20 ஆண்டுகளாக தாயகம் அனுப்பாமலும் அவருக்கு ஊதியம் வழங்காமலும் அடிமையைப் போன்று வேலை வாங்கி வந்த இந்த சகோதரியைப்பற்றிய தகவல் கிடைத்தவுடன் மீட்கும் பணியில் தமுமுக தீவிர களத்தில் இறங்கியது. மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் தமுமுகவுடன் Pleaceindia வும் இணைந்து இந்தியத்தூதரக அதிகாரிகளுடன் மனித உரிமை ஆணையம் ஹைல் கவர்னரேட் காவல்துறை உயர் அதிகாரிகள் போன்ற அனைத்து துறைகளையும் தொடர்பு கொண்டு எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் மூலம் அந்த சகோதரரியின் வழக்கில் தீர்வு கிடைத்துள்ளது.
70ஆயிரம் சவூதி ரியால்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தனை கொடுமைகளுக்கு ஆளாக்கிய ஸ்பான்சர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் சில பேப்பர் வேலைகள் பாக்கி உள்ளன. முழுமையாக முடிவடைந்தவுடன் இன்ஷா அல்லாஹ் தாயகம் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்படும்..

ரியாத் மத்திய மண்டல தமுமுகவின் பணிகளில் இந்தப் பணி மணிமகுடமாகும்...... எல்லாப்புகழும் இறைவனுக்கே...


ஹூஸைன்கனி, ரியாத்.

வியாழன், 12 ஏப்ரல், 2012

2 லட்சம் கோடி வக்ஃபு ஊழல் - வெடிக்கும் சர்ச்சை


அறப்பணிகளுக்காகவும், மக்கள் நலப் பணிகளுக்காகவும் நம் முன்னோர்கள் தங்களது திரண்ட சொத்துக்களை மக்களுக்காக அர்ப்பணித்தனர். பொதுநலப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட சொத்துக்களின் வாயிலாக நலப் பணிகளும், அறப்பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன என்றுதான் நாம் அனைவரும் நம்பி வந்தோம். ஆனால் நல்லவர்கள் நல்ல நோக்கத்திற்காக சமர்ப்பித்த சொத்துக்களைக்கூட ஆட்டையைப் போட்ட கொள்ளையர்கள் பற்றிய சம்பவங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.
இது இந்தியா முழுவதும் உள்ள நிலையாகும். இடையே அத்தி பூத்தாற்போல ஆற்றல்மிக்க செயல்வீரர்கள் வாரியத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்து சில மோசடிகளை அம்பலப்படுத்தி வக்ஃபு சொத்துக்களை மீட்கும் சம்பவமும் நடைபெறுகிறது. ஆயினும் சுரண்டும் கும்பல் தொடர்ந்து தங்களது மோசடிகளை அரங்கேறச் செய்வது இந்தியா முழுவதும் வாடிக்கையாகி வருகிறது. நமது அண்டை மாநிலமான பாஜக ஆளும் கர்நாடகாவில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவு வக்ஃபு வாரியத்தில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வக்ஃபு ஊழல் விவகாரம் பற்றி உள்ளே நுழையும் முன்பு பொதுவாக வக்ஃபு வாரியம் பற்றி சில பிரமிப்பூட்டும் தகவல்களைப் பார்க்கலாம். பரந்த இந்தியாவில் அதிக அளவு நிலங்களை சொந்தம் கொண்டதாக, திரண்ட சொத்துக்களைக் கொண்ட செல்வ வளம் பொருந்தியதாக இந்திய ரயில்வேத் துறை உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஏராளமான நிலங்களை தன்னகத்தே கொண்ட கொழுந்த பணக்காரத் துறையாக இந்திய ராணுவத் துறை விளங்குகிறது.
இவ்விரண்டு மெகா துறைகளுக்கும் அடுத்தபடியாக ஏராளமான பரப்பளவு கொண்டதாக நம் முன்னோர்களின் முஸ்லிம் கொடை வள்ளல்களின் நன்கொடையாம் வக்ஃபு வாரியம் விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. இவ்வளவு பிரம்மாண்ட சிறப்புமிக்க பின்னணி கொண்ட வக்ஃபு வாரிய சொத்துக்களில் கர்நாடக மாநிலத்தில் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை விடவும், முன்னாள் இஸ்ரோ அதிகாரிகள் மாதவன் நாயர் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்படும் 2 லட்சம் கோடி ரூபாய் ஊழலைப் போல கர்நாடக வக்ஃபு வாரிய ஊழலும் வரலாற்றின் கறுப்பு பக்கங்களில் இடம்பெறப் போகிறது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், முன்னாள் இஸ்ரோ உயர் அதிகாரிகளின் ஊழல் போன்றவை அகில இந்திய அளவில் பிரம்மாண்ட ஊழல்களாகவும், கடந்த வாரம் வெளியான 10 லட்சம் கோடி ரூபாய் நிலக்கரி வயல் ஒப்பந்த ஏல ஊழல் இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஊழலில் முதலிடம் பெற்றாலும், இரண்டு லட்சம் கோடி வக்ஃபு வாரிய ஊழல் ஒரு மாநில அளவில் மட்டுமே நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ளன? இவை அத்தனையிலும் உள்ள முறைகேடுகள் வெளிவந்தால் நினைக்கும் போதே மயக்கம் வருகிறது அல்லவா? இரண்டு லட்சம் கோடி வக்ஃபு நில ஊழல் குறித்து மாநில சிறுபான்மை ஆணையம் தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. அதுகுறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டு மென கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பினர். இதுகுறித்து உடனடியாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தபோது, இதற்கு பதிலளித்த கர்நாடக முதலமைச்சர் சதானந்த கவுடா, இந்தப் பிரச்சனை குறித்து தமது அரசு முழுமையாக ஆய்வு செய்தபின் அதனை சபையில் விவாதத்திற்கு வைத்து அதன்பிறகு அறிக்கை வெளியிடலாம் என்று கூறிய அவர், யார் யார் வக்ஃபு சொத்துக்களை ஆக்கிரமித்தார்களோ அவர்களிடமிருந்து சட்டப்பூர்வ முறையில் திரும்பப் பெறப்படும். வக்ஃபு நிலங்களைச் சுரண்டியவர்கள் தப்பிக்க முடியாது என்று கூறினார்.
கர்நாடக வக்ஃபு ஊழலின் மதிப்பு இரண்டு மாநில பட்ஜெட்டுக்கு சமமான நிதிநிலை அளவைக் கொண்டதாக இருக்கும் என்றும், அதில் சுருட்டப்பட்ட உண்மையான பண மதிப்பு உலகத்திற்கு தெரிய வேண்டுமானால் கர்நாடகா லோக் ஆயுக்தாவின் முன்னாள் தலைவர் சந்தோஷ் ஹெக்டே தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தால் மட்டுமே அரசியல் தலையீடு இன்றி உண்மைகள் வெளிவரும் என மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சமீர் அஹ்மதுகான் கூறினார்.
ஊழல் பற்றிய சர்ச்சைகள் வெளிவரத் தொடங்கிய உடன் கர்நாடக மாநில சிறுபான்மை ஆணைய சேர்மன் அன்வர் மனிப்பாடி தலைமையில் ஒரு குழுவை கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அமைத்தார். அந்தக்குழு தனது 7000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதலமைச்சர் சதானந்த கவுடா முன்னிலையில் சமர்ப்பித்தது. இந்தக்குழு 1954ஆம் ஆண்டில் இருந்து கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃபு நில பேர ஊழல் குறித்து விசாரணை செய்தது. 1954ல் இருந்து வக்ஃபு முறைகேடுகளை விசாரித்தால் பெரும்பாலான காங்கிரஸ் திமிங்கிலங்கள் இதில் சிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கர்நாடக வக்ஃபு ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என காங்கிரஸ் பெரும் தலைகள் கோரிக்கை வைத்துள்ளன.
கர்நாடக மாநிலத்தை இதுவரை சுரண்டிய ஸாரி, ஆண்ட கட்சிகளில் காங்கிரஸை அடுத்து தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த புண்ணியவான்கள் முக்கிய இடம் பிடிக்கின்றனர். சிபிஐ காங்கிரஸின் கதர்சட்டை அணிந்து சோனியா காந்திக்கு ஜே என கோஷம் போட்டு செயல்பட்டு வருவதாக பல ஆண்டுகளாக சர்ச்சைகள் வெளிவந்த நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர் கோரிக்கையின்படி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தால் நீதி நிலைநாட்டப்படும் என ஓரளவு நாம் நம்பலாம்.
45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கறைபடியா(?) கரத்துக்குச் சொந்தக்காரரான திருவாளர் எடியூரப்பாவை வீட்டிற்கும், சிறைக்கும் அனுப்பிய சந்தோஷ் ஹெக்டேவின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தால்தான் உண்மை வெளியாகும் என உறுதிபட கருத்துக்கள் பரவத் தொடங்கியுள்ள நிலையில் கர்நாடக பாஜக அரசு அமைத்துள்ள மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் அன்வர் மனிப்பாடி கமிட்டி அறிக்கையினை நாம் பார்த்தோமேயானால் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கர்நாடக வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமானவை என பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் 22 ஆயிரம் ஏக்கரில் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரை சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளதால் அன்வர் மனிப்பாடி கமிட்டி கூறுகிறது. அதிலும் குறிப்பாக சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு உள்ளான நிலங்களில் நிதி மதிப்பில் 85 சதவீதம் உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் மாநகரமான பெங்களூருவில் நில ஆக்கிரமிப்புக்கு இலக்காகி உள்ளதாம்.
கர்நாடக வக்ஃபு வாரியத்தின¢ நிலங்களின் மொத்த மதிப்பு 4 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதில் மிக அதிக அளவு முறைகேடுகள் 2001ஆம் ஆண்டில் இருந்து 2012ஆம் ஆண்டு வரை நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஏராளமான வக்ஃபு நிலங்கள் இந்த காலக்கட்டங்களில் சந்தடியின்றி தனியார்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டன. முறையான விசாரணை செய்து நடவடிக்கைகளை கடுமையாக்கினால் அனைத்தும் வெளிவரும் என அன்வர் மனிப்பாடி கமிட்டி அறிக்கை கூறுகிறது. ஏராளமான அரசியல்வாதிகளும், இடைத்தர கர்களும், ரியல் எஸ்டேட் தாதாக்களும் இதன் பின்னணியில் உள்ளதாக அன்வர் கூறுகிறார். மெகா ஊழலில் 38 பேர் குற்றவாளிகளின் பெயர்களைக் குறிப்பிட மறுத்துவிட்ட அன்வர் மனிப்பாடி, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 38 பேர் இந்த மெகா ஊழலில் தொடர்புடையவர்கள் என தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகில இந்திய தலைவர்கள், ராஜ்யசபா உறுப்பினர்கள், வக்ஃபு வாரிய முன்னாள் இன்னாள் உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளதாக அன்வர் கமிட்டி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற முறையில் செய்திகள் வெளியே கசிந்து பழம்பெருச்சாளி அரசியல் வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி 38 முக்கிய அரசியல் புள்ளிகளின் பெயர்கள் வெளிவந்துள்ளன. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான ரோஷன் பெய்க், என்.ஏ.ஹாரிஸ், தன்வீர் சேத், கமருல் இஸ்லாம் ஆகியோரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சமீர் அஹ்மத்கான், முன்னாள் மத்திய அமைச்சர் சி.எம்.இப்ராஹிம், கர்நாடக முன்னாள் வக்ஃபு வாரிய அமைச்சர் ஹிந்தா ஷேஹ்ரி, முன்னாள் அமைச்சர் இக்பால் அன்சாரி ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
திசை திருப்பும் முயற்சியா? கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே முதல் அமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசின் மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டு அந்தப் புகார்களின் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவரும் நிலையில் பிரச்சனைகளை திசைதிருப்புவதற்காக மதவாத பாஜக அரசு இதன் பின்னணியில் சதி செய்வதற்காக தனது அரசின் சிறுபான்மை நலத்துறையை ஏன் பயன்படுத்தி இருக்கக்கூடாது? முஸ்லிம்களையும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தையும் களங்கப்படுத்தச் செய்யும் முயற்சியாகக்கூட இது இருக்கலாம் அல்லவா? என்ற வாதம் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள அரசியல்வாதிகளால் எழுப்பப்படுகிறது. அவர்களது வாதங்கள் புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல, எனினும் வக்ஃபு சொத்துக்களில் கணிசமானவை நாடு முழுவதும் ஆக்கிரமிப்பு சக்திகளால் கபளீகரம் செய்யப்படுவது மறுக்க முடியாத உண்மை அல்லவா?
இரண்டையுமே தெளிவுபடுத்த தேவை முறையான, விரைவான, நீதியான விசாரணை.

புனித ஹஜ் பயணத்திற்கான விண்ணப்ப தேதி ஏப்ரல் 25 வரை


புனித ஹஜ் பயணத்திற்கான விண்ணப்ப தேதி ஏப்ரல் 25 வரை நீட்டிப்புபிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தால் சவூதி செல்ல ஒரு வருட பாஸ்போர்ட் வாய்ப்பை பயன்படுத்த எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள்
இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்வதற்கு ஏப்ரல் 16-ம் தேதி கடைசி என்று அறிவிக் கப்பட்டிருந்தது.அது வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டி ருப்பதாக மத்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு புனித ஹஜ்ஜுக்கு செல்ல நாடியிருந்து இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண் ணப்பிக்கலாம்.
ஹஜ் செல்ல ஒரு வருட பாஸ்போர்ட்
புனித ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் போது அவர் கள் சர்வதேச பாஸ்போர்ட் வைத் திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக விதிக்கப்பட் டுள்ளது பாஸ்போர்ட் இல்லாமல் ஹஜ் பயணத்திற்கு விண்ணப் பித்தவர்கள் சர்வதேச பாஸ் போர்ட் விரைவாக பெறுவதற் காக பல்வேறு இடங்களில் பாஸ்போர்ட் மேளாக்கள் நடை பெற்றன.
ஆனாலும், காவல்துறை விசாரணையில் தாமதம் ஏற்பட்டதால் பாஸ்போர்ட் பெறுவதில் ஹஜ் பயணி களுக்கு பெரும் சிரமம் ஏற்பட் டது. எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை
இதுபற்றி கடந்த மார்ச் 26-ம் தேதி நாடாளுமன்ற மக்கள வையில் எம். அப்துல்ரஹ்மான் எம்.பி., அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து பேசினார். தொடர்ந்து மத்திய அரசின் வெளிவிவகாரத்துறை கூடுதல் செயலாளரை சந்தித்து முறையிட்டார்.
இதன் பலனாக போலீஸ் விசாரணையில்தாமதம் ஏற்பட் டால் சவூதிக்கு செல்லும் வகையில் எட்டு மாத கால அவகாசம் கொண்ட பாஸ் போர்ட் வழங்கப்படும் என்று வெளியுறவுத்துறை அறிவித் தது.
இப்போது அந்த அறிவிப் பிலும் ஒரு மாற்றம் செய்து வெளியுறவுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட் டுள்ளது.
இதன்படி, புனித ஹஜ் பயணம் செல்வதற்கு பாஸ் போர்ட் விண்ணப்பிப்பவர்கள் ஹஜ் பயணத்திற்கு விண் ணப்பித்ததற்கான கவர் எண்ணை எழுதத் தேவை யில்லை என்றும், 10 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் நோட்ரிக் பப்ளிக்கிடம் `அபிடவிட்� (பிரமாண வாக்குமூலம்) அளித்தால் அவர்களுக்கு ஒரு வருட காலம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.
காவல் துறையின் விசாரணை முடிந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு 20 வருட சர்வதேச பாஸ்போர்ட் வழங்கப் படும். இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இருப் பவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதன், 11 ஏப்ரல், 2012

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் – சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!


சென்னை:இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இன்று மதியம் சுமார் 2.15 மணியளவில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானதால் நிலநடுக்கம் மிகக் கடுமையாக உணரப்பட்டது.
இதன் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,உதகை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. சென்னையில் அண்ணாசாலை,மந்தைவெளி, மைலாப்பூர், எழும்பூர், ஆழ்வார்ப்பேட்டை போன்ற பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து  வீடுகளை விட்டு வெளியேறினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள், வீடுகளில் இருந்த சேர்கள், டேபிள்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு  வெளியேறினர்.
கட்டிடங்கள் குலுங்கியதால் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தோர் பீதியடைந்து  வெளியே ஓடிவந்தனர். அதேப்போன்று ஊட்டியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.இதனிடையே தமிழகம் தவிர்த்து இந்தியாவில் புவனேஸ்வர், கொல்கத்தா,டெல்லி மற்றும்  அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட இடங்களிலும் இந்த நிலநடுக்கம்  உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, மலேசியா  உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்தமான்   தீவுகளில் சுனாமி தாக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் அந்தமான் தீவுகளில் உள்ள கடற்கரை பகுதிகளில் உஷார் நிலையில் இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் காவலில் கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!


மும்பை:குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக தீவிரவாத பட்டம் சூட்டி கைது செய்யப்பட்டு பின்னர் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட காஜா முஹம்மது யூனுஸின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2002 ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி மஹராஷ்ட்ரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் காலியான பேருந்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பங்கிருப்பதாக குற்றம்சாட்டி 2003 ஜனவரி மாதம் கறுப்புச் சட்டமான பொடாவில் அநியாயமாக யூனுஸ் கைது செய்யப்பட்டார்.
25 வயதான யூனுஸ் துபாயில் சாஃப்ட்வெயர் எஞ்சீனியராக பணியாற்றி வந்தவர் ஆவார்.பேருந்து குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட யூனுஸ் போலீஸ் காவலில் வைத்து போலீஸாரின் வெறித்தனமான சித்திரவதைக்கு பலியானார். இதனைத் தொடர்ந்து அவரது தாயார் ஆசியா பேகம் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 போலீஸ்காரர்களில் 10 பேரை விடுதலைச் செய்துள்ளது.
ரூ.20 லட்சம் இழப்பீட்டு தொகையை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட போலீஸ்காரர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்து 2 மாதத்தில் அளிக்குமாறு நீதிமன்றம் கூறியது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள போலீஸ்காரர்களில் ஒருவரான சச்சின் வாஸே துணை போலீஸ் ஆய்வாளர் ஆவார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக கருதப்படும் இவர் பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான பால்தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் அங்கமானார்.
இவ்வழக்கில் இழப்பீடு வழங்கப்பட்டது குறித்து காஜா முஹம்மது யூனுஸின் மூத்த சகோதரர் காஜா ஹுஸைன் கூறியது:
14 போலீஸ்காரர்கள் குற்றவாளிகள் என்று சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி கண்டறிந்தனர். நீதிமன்றம் இழப்பீடாக அறிவித்துள்ள ரூ.20 லட்சம் தொகை காஜா யூனுஸின் உயிரை திரும்ப தராது. நீதி நடைமுறைப்படுத்த வேண்டுமானால் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான டாக்டர்.அப்துல் மத்தீன், 14 போலீஸ் அதிகாரிகளும் காஜா யூனுஸை சித்திரவதைச் செய்து கொலைச் செய்ததை பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை சி.ஐ.டி போலீசார் 2006 ஆம் ஆண்டு அளித்த பிரமாணப் பத்திரத்திலும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டனர். நான் எனது வழக்கறிஞர் மிஹிர் தேசாயுடன் கலாந்தாலோசித்துவிட்டு இவ்வழக்கு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்வேன் என்றார்.
காஜா யூனுஸிற்கு நீதி கிடைப்பதற்காக சட்டரீதியாக போராடி வந்த அவரது தந்தை மரணமடைந்துவிட்டார்.