AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 3 அக்டோபர், 2011

உள்ளாட்சி தேர்தலில் எத்தனை பேர் போட்டி? இறுதி பட்டியல் இன்று வெளியீடு

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. வாபஸ் பெறப்பட்ட மற்றும் தள்ளுபடியான வேட்புமனுக்கள் பற்றி தகவல்களுடன், போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி இடங்கள் பற்றிய விவரத்தையும் மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது. அதன்பிறகே களத்தில் எவ்வளவு பேர் இறுதியாக மோதுகின்றனர் என்பது தெரியவரும்.

தமிழகத்தில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள் உள்ளிட்ட 1 லட்சத்து 32,401 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு 17, 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கி, 29ம் தேதி முடிந்தது. மொத்தம் 5 லட்சத்து 27014 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை 3 நாட்கள் நடந்தது. தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடங்கி விட்டதால், போதிய அவகாசம் இல்லாமல் பலர் அவசரமாக மனு தாக்கல் செய்தனர். படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாமலும், தேவையான ஆவணங்களை வைக்காமலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து, சிறிய தவறுகளுக்காக மனுக்களை தள்ளுபடி செய்யக் கூடாது என்று  மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் அறிவித்தார். அதனால், மனுவில் உள்ள குறைபாடுகளை நீக்க வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கமாக பரிசீலனையின்போதே, எவ்வளவு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்ற விவரம் தெரிந்துவிடும். ஆனால், இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால் பரிசீலனை நேற்று வரை நீடித்தது.

இந்நிலையில் இன்று மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். எனவே எவ்வளவு பேர் வாபஸ் பெற்றனர்? எத்தனை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன? போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் எத்தனை என்ற விவரங்களுடன், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர், சுயேச்சைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சி வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

சுயேச்சைகளுக்கு இன்று சின்னம்: வேட்புமனு தாக்கல் தொடங்கியதும் அங்கீகரிப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். ஆனால், சுயேச்சைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சி வேட்பாளர்களுக்கு என்ன சின்னம் என்பது தெரியாது. அதனால் அவர்கள் பிரசாரம் செய்யாமல் இருந்தனர். சில சுயேச்சைகள் வீடு வீடாக சென்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு சரி. சின்னம் கிடைத்த கையோடு நாளை முதல் சுயேச்சைகளும் பிரசாரத்தில் இறங்குவதால், தேர்தல் களம் சூடு பிடிக்கும்.

7 மாவட்ட அதிகாரிகளுடன் ஆணையர் நாளை ஆலோசனை

தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள பணிகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமையில், நாளை காலை 10 மணிக்கு மாநில தேர்தல் ஆணையத்தில் ஆய்வு கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், போலீஸ் எஸ்பி, காவல்துறை ஆணையர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

இழந்த நாட்களை சரிக்கட்ட பள்ளிகளுக்கு 42 வேலை நாட்கள் அதிகரிப்பு: தினமும் கூடுதலாக 35 நிமிடங்கள் வேலை நேரம்

சமச்சீர் கல்வி வழக்கு காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஆனது. ஆகஸ்டு 18-ந்தேதி வரை பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் இந்த கல்வியாண்டில் 60 வேலை நாட்கள் இழப்பு ஏற்பட்டது. வழக்கமாக காலாண்டு தேர்வுவரை 40 சதவீத பாடங்கள் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு 20 சதவீத பாடங்கள் மட்டுமே முடிக்கப்பட்டு காலாண்டு தேர்வு நடத்தப்பட்டது.
 
நேற்றுடன் காலாண்டு தேர்வு முடிந்தது. வழக்கமாக காலாண்டு தேர்வு முடிந்ததும் 10 நாட்கள் வரை விடுமுறை கொடுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு 1 முதல் 8-ம் வகுப்புவரை கடந்த 27-ந்தேதி தேர்வு முடிந்தது. இவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நாளை (திங்கள்) பள்ளிகள் திறக்கப்படுகிறது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை நேற்று தேர்வு முடிந்தது.
 
5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வகுப்புகள் திறக்கிறது. பொது தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையிலும் பள்ளிகளை பொறுத்து பாடங்கள் நடத்தப்படுகிறது. இழந்த வேலை நாட்களை ஈடுசெய்வதற்காக இந்த கல்வியாண்டில் 42 வேலை நாட்கள் அதிகரிக்கப்படுகிறது.
 
மாதம்தோறும் 2 சனிக்கிழமை பள்ளிகளை நடத்துவதன் மூலம் 17 நாட்களும், தினமும் வேலை நேரத்தை 35 நிமிடங்கள் அதிகரிப்பதன் மூலம் 16 வேலை நாட்களும், காலாண்டு விடுமுறையில் 5 நாட்களும், ஏப்ரல் 18-க்கு பதில் ஏப்ரல் 28-ந்தேதிவரை பள்ளிகளை நடத்துவதன் மூலம் 10 நாட்களும் ஆக 42 வேலை நாட்கள் அதிகரிக்கப்படுகிறது.
 
இந்த நடைமுறைகளை நாளை பள்ளிகள் திறந்ததும் அமுல்படுத்த கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

டெல்லியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை


சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.1986-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி, இதற்கான வரைவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை, பயன்படுத்துவது, வைத்திருத்தல் உள்ளிட்டவை முற்றிலுமாக தடை செய்யப்பட உள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 5 ஆண்டு வரையிலான ஜெயில் தண்டனையோ அல்லது ரூ.1 லட்சம் வரையிலான அபராதமோ அல்லது இவை இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும்.  

லெமன் பார்லி ஜூஸ்

தேவையான பொருட்கள்:
 
பார்லி  - கால்கிலோ
எலுமிச்சம்பழம் - 2
இஞ்சி - 50 கிராம்
உப்பு - 1 சிட்டிகை
சர்க்கரை - 100 கிராம் 
 
செய்முறை:  
 
* இஞ்சியையும்  தோல் சீவி அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
* பார்லியை தண்ணீரில் நன்றாக வேகவைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அப்படியே சூடாக இருக்கும் போதே சர்க்கரையை பார்லியில் சேர்த்துவிட வேண்டும்.
 
* பிறகு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து உப்பைச் சேர்ப்பதோடு, அரைத்த இஞ்சியையும் கலந்து விட வேண்டும்.
 
• இந்த ஆரோக்கிய ஜூஸை அழகான பாட்டிலில் பதப்படுத்தி வைத்துக் கொண்டால் போதும். பதினைந்து நாட்கள் முதல் 20 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிஜ்ஜில் கூட வைக்கத் தேவையில்லை.
 
• இது ஒரு டயட் ஜூஸ். ப்ளட் ப்ரஷர் கம்மியா இருக்கிறவங்களுக்கு ரொம்பவும் யூஸ் ஃபுல்லான ஜூஸ். வியர்வையை ஏற்படுத்தி ரிலாக்ஸாக வைத்திருக்கும்..

பிலிப்பைன்சில் மீண்டும் புயல் தாக்கியது; ஒருவர் பலி- 20 லட்சம் பேர் தவிப்பு

சில நாட்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் லுஷான் தீவு பகுதியில் நெசாத் என்ற புயல் கடுமையாக தாக்கியது. இதனால் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மணிலா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெள்ளம் ஏற்பட்டது.
 
சுமார் 50 பேர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன. அந்த புயல் தாக்கிய “லுஷான்” தீவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும் என்ற பழமொழிக்கு ஏற்ப நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் புயல் தாக்கியது.
 
அதுவும் ஏற்கனவே பாதித்த லுஷான் தீவிலேயே தாக்கியுள்ளது. தெற்கு சீனாவில் மையம் கொண்டிருந்த நல்கே என்ற புயல் மெதுவாக நகர்ந்து நேற்று லுஷான் தீவுக்குள் புகுந்தது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் மழை கொட்டியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த முறையை விட மணிலாவில் தற்போது அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. ஆகவே இப்பகுதியில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கி தவிக்கின்றனர். தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மீட்பு பணி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

உலக மக்களின் மகிழ்ச்சியான நேரம் எது? என்பது குறித்து அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற் கொண்டனர். அதற்காக “டுவிட்டர்” இணைய தளம் பயன்படுத்துபவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 84 நாடுகளை சேர்ந்த 24 லட்சம் பேர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
 
அவர்கள் 2 வருடங்களாக 50 கோடியே 90 லட்சம் கருத்துக்களை கூறி இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் காலைப் பொழுதுதான் மகிழ்ச்சியான நேரம் என கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில் அப்போதுதான் மக்களின் அன்றாட பணி தொடங்குகிறது. அதே போன்று நள்ளிரவும் மகிழ்ச்சியான தருணம் என கூறியுள்ளனர்.
 
அதே வேளையும், நள்ளிரவுக்கு மேலே மிகவும் எரிச்சலான நேரம் தொடங்குவதாக தெரிவித்துள்ளனர். அப்போதுதான் பயம், கோபம், குற்ற உணர்வு, கடும் வெறுப்பு, போன்றவை ஏற்படுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சீனா அமைக்கும் விண்வெளி நிலையம் : ஆய்வக பகுதி அனுப்பப்பட்டது

ரஷியா விண்வெளியில் “மிர்” என்ற விண்வெளி நிலையம் அமைத்துள்ளது. அதுபோன்று அமெரிக்காவும் தனியாக விண்வெளி நிலையம் உருவாக்கியுள்ளது. அவை தவிர அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி மையம் ஒன்றை கட்டி வருகின்றனர்.
 
அதேபோன்று சீனாவும் 2020-ம் ஆண்டில் தனக்கென்று ஒரு விண்வெளி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆராய்ச்சியில் அந்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  
 
இந்த நிலையில் விண்வெளியில் ஆய்வகம் அமைக்க தேவையான கட்டுமான பொருட்களை அனுப்பும் பணி நடந்தது. அதற்காக தியான்காங்-1 என்ற ஆய்வக பகுதியை தயாரித்தனர். அது 8.5 டன் எடை உள்ளது. இந்த ஆய்வக பகுதி நேற்று மாலை வடசீனாவின் ஜியூகுவாங் என்ற செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
 
அது ஷென்ஷு என்ற விண்வெளி ஓடத்தில் வைக்கப்பட்டு மார்ச் 2 எப்.டி.ஐ. ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது.   ஒரு மாத பயணத்துக்கு பின் அந்த ராக்கெட் சீனாவின் விண்வெளி நிலையம் கட்டுமான இடத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த சோதனை வெற்றி அடைந்தது சீனாவின் விண்வெளி ஆய்வின் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. சமீபகாலமாக விண்வெளி ஆய்வில் சீனா சாதனை படைத்துள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தானின் முதல் தகவல் தொடர்பு செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. இதுபோன்ற பல்வேறு நாடுகளின் 20 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது..

பாகிஸ்தானில் பட்டினி-நோயினால் வாடும் 40 லட்சம் குழந்தைகள்:

இஸ்லாமாபாத், செப். 30-
 
பாகிஸ்தானில் பட்டினி மற்றும் நோயினால் 40 லட்சம் குழந்தைகள் வாடுகின்றனர்.   பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதில் அப்பகுதியில் வாழும் சுமார் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் மற்றும் மறு சீரமைப்பு பணிகளும் நடை பெற்று வருகின்றன.
 
ஆனால் இன்னும் அங்கு நிலைமை சீரடையவில்லை. லட்சக்கணக்கான மக்கள் அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் ரோட்டோரங்களிலும், ரெயில் தண்டவாளங்களிலும் கூடாரம் அமைத்து உள்ளனர்.   பாகிஸ்தானில் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, ஐ.நா. சபையிடம் உதவி கோரப்பட்டது. அதை தொடர்ந்து இதுவரை ரூ.1800 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் அவை போதவில்லை. எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் பசி பட்டினியால் வாடுகின்றனர். அவர்கள் பலவித தொற்று நோயினால் சிக்கி தவிக்கின்றனர். குடிக்க தண்ணீர் கிடைக்காமல் வெள்ள நீரை குடித்து உயிர் வாழ்கின்றனர் 
 
 இந்த நிலை பாதின், மிர்புகாஸ், சங்கார், தாண்டோ அல்லாயார் ஆகிய 4 மாவட்டங்களில் பெருமளவில் உள்ளது. இப்பகுதியில் 40 லட்சம் குழந்தைகள் உண்ண உணவின்றி தவிக்கின்றனர். மேலும் அவர்களை நோய் கொடுமையும் வாட்டுகிறது. எனவே பசிபட்டினி மற்றும் நோயினால் பறி தவிக்கும் குழந்தைகளை காப்பாற்ற பணக்கார நாடுகள் உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.