உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 22-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடந்தது. 1 லட்சத்து 32 ஆயிரத்து 467 பதவிகளுக்கு, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. திருச்சி மாநகராட்சி தவிர மற்ற உள்ளாட்சி பதவிகளுக்காக 5 லட்சத்து 27 ஆயிரத்து 14 பேர் மனுதாக்கல் செய்து இருந்தனர். மனுக்கள் பரிசீலனை 30-ந்தேதி நடந்தது. முறையாக தாக்கல் செய்யாதே மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
திருச்சி மாநகராட்சி தவிர மற்ற 9 மாநகராட்சிகள், நகர சபைகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்து பதவிகளுக்காக மனுதாக்கல் செய்தவர்கள், மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள். அரசியல் கட்சிகளில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை தவிர மற்ற வேட்பாளர்களில் பெரும்பாலானோர் இன்று வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
கூட்டணி அமைத்துள்ள கட்சிகளிலும், ஒப்பந்தப்படி மனுதாக்கல் செய்த வேட்பாளர்கள் தவிர மற்றவர்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். சுயேட்சை வேட்பாளர்களிலும் சிலர் இன்று தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
இன்று காலை 11 மணி முதலே அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். கட்சி சார்பில் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனு தாக்கல் செய்த சிலர் மனுக்களை வாபஸ் பெறவில்லை. மாலை 3 மணிக்குள் மனுக்களை திரும்ப பெற்றவர்கள் தவிர மற்ற அனைவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ இறுதிப்பட்டியல் இன்று மாலை 3 மணிக்குப் பிறகு வெளியிடப்படுகிறது. போட்டியிடும் அனைவருக்கும் இன்று சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. கட்சிகளின் அங்கீகார கடிதம் கொடுத்தவர்களுக்கு அவர்கள் போட்டியிடும் கட்சிகளின் சின்னம் ஒதுக்கப்பட்டது.
சுயேட்சை வேட்பாளர்களுக்கு தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. சில இடங்களில் ஒரே சின்னத்தை பலர் விரும்பினார்கள். அது யாருக்கு என்பது குலுக்கல் மூலம் முடிவு செய்யப்பட்டது. வேட்பாளர்கள் இறுதி பட்டியல், வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் பற்றிய அறிவிப்பு அந்தந்த மையங்களில் இன்று மாலை தெரிவிக்கப்பட்டது. இந்த விவரங்கள் மாவட்ட கலெக்டர் மூலம் மாநில தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்ட பிறகு பட்டியல்கள் சரி பார்க்கப்படும். அதன் பிறகு மாநில தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல், சின்னங்கள் ஆகியவற்றை வெளியிடும். இன்று இரவு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில தேர்தல் கமிஷன் வெளியிடும். அப்போது தள்ளுபடியான மனுக்கள் மற்றும் வாபஸ் பெறப்பட்ட மனுக்கள் விவரங்களும் வெளியாகும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒரே பதவிக்கு 2 பேர் போட்டியிட முடியாது. கிராம பஞ்சாயத்துகளில் சுயேட்சைகள் பலர் 2 அல்லது 3 பதவிகளுக்கு மனுதாக்கல் செய்து இருந்தனர். இதில் ஒரு பதவி தவிர மற்ற பதவிகளுக்கான மனுக்களை பலர் வாபஸ் பெற்றனர். வாபஸ் பெறாதவர்களின் மனுக்களில் உள்ள பதவிகளில் ஒன்றை மட்டுமே மனுதாரர் பெற முடியும். எனவே தாக்கல் செய்த பதவிகள் அதிகாரிகள் முன்னிலையில் துண்டுச் சீட்டில் எழுதி குலுக்கல் நடத்தப்பட்டது.
குலுக்கலில் விழுந்த ஒரு பதவி மட்டுமே அந்த வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர். மனுக்கள் வாபஸ் பெறப்படுவதை எதிர்பார்த்த மற்றவர்களும் இன்று மாலை பிரசாரத்தை தொடங்கி விட்டனர். அரசியல் கட்சிகளிலேயே மனுக்களை வாபஸ் பெறாத போட்டி வேட்பாளர்களும் இன்று பிரசாரம் செய்தார்கள்.
சுயேட்சை வேட்பாளர்களுக்கு இன்று சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டதால் அவர்களும் பிரசாரத்தை தொடங்கினார்கள். இதனால் இன்று பிரசாரம் சூடுபிடித்தது. கிராமங்களிலும் வேட்பாளர்கள் இன்று வீதிவீதியாக சென்று ஓட்டு கேட்டனர். நாளை முதல் பிரசாரம் மேலும் தீவிர அடையும். தேர்தலை சுமூகமாக நடத்த மாநில தேர்தல் கமிஷனர் சோ.அய்யர் தலைமையில் மண்டல வாரியாக மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெறுகிறது.
நாளை சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். 7-ந் தேதி மதுரையிலும், 8-ந்தேதி திருச்சியிலும், 10-ந்தேதி கோவையிலும் அந்த பகுதியைச் சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடக்கிறது.
உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப் பதிவு 17, 19-ந்தேதி களில் 2 கட்டமாக நடக்கிறது. ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு 1 1/2 மணி நேரத்துக்கு முன்பு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட வேண்டும். எனவே அதிகாலை 5.30 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வேட்பாளர் பட்டியல் இன்று இரவு அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டு விடும். எனவே ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பொருந்துவதற்கான வேட்பாளர் பட்டியல், கிராமப்புற ஓட்டுப்பதிவுக்கான ஓட்டுச் சீட்டுகள் ஆகியவற்றை அச்சடிக்கும் பணி நாளை முதல் தொடங்கும். திருச்சி மாநகராட்சிக்கு 30-ந் தேதி மனுதாக்கல் தொடங்கியது. 7-ந்தேதி வரை மனுதாக்கல் செய்யலாம். 8ந்தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. இந்த மாநகராட்சி பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் மனுக்களை வாபஸ் பெற வருகிற 9-ந்தேதி கடைசி நாள்.







0 கருத்துகள்:
கருத்துரையிடுக