AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 21 செப்டம்பர், 2011

நிதி பற்றாக்குறையை சரிக்கட்ட கடும் வரி உயர்வு: ஒபாமாவின் திட்டத்திற்கு எதிர்ப்பு


வாஷிங்டன்: அமெரிக்காவின் நிதிப் பற்றாக்குறையை குறைக்க வேலைவாய்ப்பு உருவாக்கம், வரி உயர்வு உள்ளிட்டவை அடங்கிய, 3.6 டிரில்லியன் டாலர் மதிப்பிலான புதிய திட்டத்தை, அதிபர் பராக் ஒபாமா அறிவித்தார். இத்திட்டத்தில் உள்ள வரி உயர்வுக்கு, எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதே நேரம், வரி உயர்வு இல்லாமல் எதிர்க்கட்சியால் கொண்டு வரப்படும் எந்த ஒரு மசோதாவையும் தனது மறுப்பாணை (வீட்டோ) மூலம் நிராகரிக்கப் போவதாகவும் ஒபாமா எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை அதிகரிக்க நிறைவேற்றப்பட்ட மசோதாவின்படி, நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக, அடுத்த 10 ஆண்டுகளில், 2.1 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் - ஒரு லட்சம் கோடி; ஒரு டாலர் - ரூ.45) செலவுகள் குறைக்கப்பட வேண்டும். வரி உயர்வில்லாத மசோதா: அதிகளவில் சம்பாதிப்போர் மற்றும் நிறுவனங்களின் வரியும் உயர்த்தப்பட வேண்டும் என, ஒபாமா வலியுறுத்தினார். ஆனால், அடுத்தாண்டு அதிபர் தேர்தலைக் குறிவைத்துள்ள குடியரசுக் கட்சி, வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், வரி உயர்வு பற்றிய அறிவிப்புகள் எதுவும் இல்லாமலே, கடன் உச்சவரம்புக்கான மசோதா கடைசி நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் 9.1 சதவீதமாக தொடர்வது, பொருளாதார நெருக்கடி ஆகியவை அடுத்தாண்டு அதிபர் தேர்தலில் முக்கிய பிரச்னைகளாக இருக்கும் என்பதை உணர்ந்த ஒபாமா, தேர்தலைக் குறிவைத்து சில திட்டங்களை அறிவிக்கப் போவதாகத் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு திட்டம்: அதன்படி, இம்மாதம் 9ம் தேதி, 447 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் - 100 கோடி) மதிப்பிலான வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிவித்தார். இதில், வரி சீர்திருத்தத்தையும் குறிப்பிட்டிருந்தார். தற்போது இத்திட்டம் காங்கிரஸ் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு, குடியரசுக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வரி உயர்வுடன் கூடிய ஒபாமா திட்டம்: இதையடுத்து, நேற்று முன்தினம், வெள்ளை மாளிகையில் பேசிய ஒபாமா, அடுத்த 10 ஆண்டுகளில், நாட்டின் நிதிப் பற்றாக்குறையில் 3.6 டிரில்லியன் டாலர் அளவிற்கு சேமிப்புக்கான திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தில், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான நலவாழ்வுக் காப்பீட்டுத் திட்டமான மெடிகேர், குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கான நலவாழ்வுக் காப்பீட்டுத் திட்டமான மெடிகெய்டு ஆகியவற்றில் 580 பில்லியன் டாலர் குறைப்பு, வரி சீர்திருத்தம், வரி உயர்வு மூலம் 1.5 டிரில்லியன் டாலர் வருமானம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
"வீட்டோ' மிரட்டல்: இதுகுறித்து ஒபாமா கூறியதாவது: சராசரி அமெரிக்கனின் தலையில், அனைத்து சுமைகளையும் சுமத்தும் எந்த ஒரு திட்டத்தையும் நான் ஆதரிக்க மாட்டேன். மில்லியனர், பில்லியனர்களை விட நடுத்தர வர்க்கத்தினர் அதிகளவு வரி செலுத்த வேண்டியதில்லை. இத்திட்டத்தில் கணிசமான அளவு மெடிகேர் உள்ளிட்ட பொது நலத்திட்டங்களுக்கான செலவுகளும் குறைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், எவ்விதமான வரி உயர்வையும் விதிக்காமல், மெடிகேர் உள்ளிட்ட நலத்திட்டங்களைக் குறிவைத்து செலவுகளைக் குறைக்கும் மசோதா, எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட்டால் மறுப்பாணை (வீட்டோ) மூலம் அதை நிராகரிப்பேன். இவ்வாறு ஒபாமா குறிப்பிட்டார்.
வர்க்கப் போர்: இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்த பிரதிநிதிகள் சபை தலைவர் ஜான் பாய்னர்,"மறுப்பாணை மிரட்டல், கடுமையான வரி உயர்வு, சேமிப்பை உருவாக்குவது போன்ற மாயத்தோற்றம் இவை பொருளாதார முன்னேற்றத்திற்கோ, வேலைவாய்ப்பை அதிகரிக்கவோ, நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கோ உதவாது. இதுபோன்று வர்க்கப் போரை ஊக்குவிப்பது நல்ல தலைமைக்கு அழகல்ல' என்று, காட்டமாகத் தெரிவித்துள்ளார். "இது வர்க்கப் போர் அல்ல, கணக்கிடுதல்' என்று, பாய்னருக்கு ஒபாமா பதிலடி கொடுத்துள்ளார்.
இரு கட்சிக் குழுவில் ஒபாமா திட்டம்: ஏற்கனவே தான் அறிவித்த வேலைவாய்ப்பு திட்டத்தை சட்டமாக்கும்படி இரு கட்சிகளையும் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, ஒபாமாவின் இந்த இரண்டாவது திட்டம், விரைவில் இரு கட்சி உறுப்பினர்கள் 12 பேர் அடங்கிய குழுவுக்கு அனுப்பப்படும். நவம்பர் 23ம் தேதிக்குள் இக்குழு, ஒரு புதிய செலவுக் குறைப்பு திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்பது, கடன் உச்சவரம்பு அதிகரிப்பு சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒபாமாவின் இந்த இரண்டாவது திட்டத்தை குழு நிராகரிக்கும் பட்சத்தில், 1.5 டிரில்லியன் டாலர் செலவுகளைக் குறைக்க புதிய திட்டத்தை குழு தயாரிக்க வேண்டும்.
ஒபாமா திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

* வரி சீர்திருத்தம் மற்றும் வரி உயர்வு மூலம் 1.5 டிரில்லியன் டாலர் வருமானமாகக் கிடைக்கும்.
* மெடிகேர், மெடிகெய்டு திட்டங்களில், மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் நிதியில், 580 பில்லியன் டாலர் குறைக்கப்படும்.
* ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதன் மூலம், 1.1 டிரில்லியன் டாலர் சேமிக்கப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக